Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நேற்று 08-12-2010(புதன்கிழமை) இரவு 7:00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் கடந்த வாரம் தாம் வெளியிட்ட காணொளியில் உள்ள இசைப்பிரியா என அழைக்கப்படும் (கொல்லப்பட்டபோது) 27 அகவுடைய சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் (9 வருடங்கள்) ஒருவரும், முன்னாள் போராளியும், தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் கல்பனாவின் முகம் மறைக்கப்பட்ட செவ்வியுடன் இந்தத் தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம், மற்றும் தொடர்பாடல் பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான நேரடிச்சாட்சி கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் அளித்திருக்கின்றது.

இதேவேளை, லெப்ரினன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படையணியினால் கடந்த மே மாதம் 18ஆம் நாள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைகள் பின்புறம் கட்டப்படுள்ளது எனவும், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடலம் காணப்படுவதையும் குறிப்பிடுகின்றார்.

இருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது நண்பியை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பியுள்ள சனல்-4, அவர் கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்துள்ளது.

கடந்த வாரம் காணொளி வெளியிடப்பட்டது போன்று இவ்வாரமும் முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் கருத்தைப் பதிவு செய்துள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, மெட்றிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லுனர் ஜீலியன் நொவெல்ஸிற்கு இந்தக் காணொளிகளைக் காண்பித்தபோது, அவை மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியதையும் ஒளிபரப்பி இருக்கின்றது.

போராளியான இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களது 6 மாதக் குழந்தையையும் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பறிகொடுத்திருந்த நிலையில், இசைப்பிரியாவை சிறீலங்கா படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிகக்கொடுரமாகப் படுகொலை செய்திருப்பதாக நம்பப்படுகின்றது.

0 Responses to இசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார் - அவரது தோழி கல்பனா உறுதிப்படுத்தியுள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com