இன்று விடுதலைப்புலிகளுடனான போர் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இப்போரைத் தலைமையேற்று நடத்திய வெற்றிவீரனாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவோ, இது போர் அல்ல மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டெடுத்த மனிதாபிமான நடவடிக்கை என்று சத்தியம் செய்து வருகின்றார்.ஒரு சில நாட்களுக்குள் நாற்பதனாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றும் பல்லாயிரக்கணக்கானோரை ஊனமுற்றவர்களாகவும், விதவைகளாகவும், காணாமல் போனவர்களாகவும் ஆக்கியும், கோடிக்கணக்கான பெறுமதிமிக்க சொத்துக்களையும், குடியிருப்புக்களையும், உற்பத்தி மையங்களையும் அழத்தும் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயங்கரவாத நடவடிக்கைக்கு மனிதாபிமான நடவடிக்கை எனப் பெயர் சூட்டப்படுமாக இருந்தால், போர் எப்படி இருக்கும் என்பதை நாம் ஊகிக்கமுடியும்.
எப்படி இருந்த போதிலும் தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் ஒரு பெரும் இன அழிப்புப் போர் இடம்பெற்று முடிவடைந்துள்ளது. இன்று இந்தப் போரின் கொரூரமான பாதிப்புக்கள் காரணமாக எமது மக்கள் படுமோசமான முறையில் நொந்து போயுள்ளனர்.
நிவாரணம், மீள்நிர்மாணம், அபிவிருத்தி போன்ற பரப்புரைகள் தினமும் இடம்பெற்ற போதிலும் எமது மக்களுக்குக் கிடைப்பதெல்லாம் கூடாத வாழ்க்கையும், குறை வயிற்று உணவும் தான். வறுமை, நோய், கல்வியின்மை, உறவுகளை இழந்த துயர் என்பவை எமது மக்களின் எதிர்காலத்தையே கேள்விகளுக்குள் தள்ளிவிட்டன.
இவைக்கும் மேலாக தட்டிக்கேட்க ஆளில்லை என்ற வகையில் எமது மக்கள் மீது புதிய இனவாத ஒடுக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இப்படியான ஒரு நிலையில் ஆயுதப் போரின் காயங்கள் ஆறமுன்பே எம்மீது இன்னொரு போர் தொடுக்கப்படுகிறது. இது தான் கலாசாரப் போர்.
ஆண்டாண்டு காலமாக யாழ்ப்பாணம் ஈழத்தமிழ் மக்களின் கலாசார மையம் எனக் கருதப்பட்டுவந்தது. பொதுவாகவே தமிழ் மக்கள் போத்துக்கேயர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர் என அந்நிய தேசத்தவரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த போதிலும் கூட நமது கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாத்தே வந்தனர். அவர்கள் தங்கள் சம்பிரதாயங்கள், சட்டங்கள் உட்பட தங்கள் கலாசார வாழ்வு முறையை என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை.
தனித்துவமான மொழி, வரலாற்றுப் பராம்பரியம் கொண்ட ஒரு வாழ்நிலப்பகுதி, பொதுவான பொருளாதாரம், தனித்துவமான கலாசாரமம் என்பன ஒரு தேசிய இனத்தின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ அழிக்கும் போது அந்தத் தேசிய இனத்தின் தனித்துவம் சிதைக்கப்பட்டு மெல்ல மெல்ல அழிவை நோக்கி நகரும் நிலை உருவாகிறது.
இவ்வகையிலேயே எமது மொழி, நிலப்பகுதி, பொருளாதாரம் என்பவற்றைச் சிதைப்பதற்கான முன்முயற்சிகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன. எனினும் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த போது இந்நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன என்பதை எவருமே மறந்துவிட முடியாது. இப்போது எமது விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்தித்த பின்பு இத்தகைய முயற்சிகள் மீண்டும் தொடங்கிவிட்டன. அது மட்டுமன்றி எமது கலாசாரத்தின் மீதான போக்கும் தொடங்கிவிட்டது.
ஏ - 9 பாதை திறக்கப்பட்ட போது வடக்கை நோக்கி வசந்தம் வரப்போவதாக பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே வருவது வசந்தமல்ல பெரும் நாசம் என்பதை எம்மால் புரிந்து கொள்ளமுடிந்தது.
வீதியோரங்களிலும் வெட்டவெளிகளிலும் அழுகிய இளம் மங்கையரின் புன்னகை தவழும் உருவங்கள் வரையப்பட்ட பெரும் விளம்பரங்கள் முளைத்தன. பிரதான வீதிகள் முதற்கொண்டு குச்சொழுங்கைகள் வரை வர்த்தக வாகனங்களின் பவனிகள் தொடங்கின. கடைகளெல்லாம் ஆடம்பரப் பொருட்களின் குவிப்பு. இவற்றுக்கு மேலாக இசை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் வர்த்தக வானொலிகளில் ஆட்டம் பாட்டம் வீதியுலாக்கள். போரினால் நொந்து போய் வெந்த மனதுடன் விடிவு தேடித் தவிக்கும் எமது மக்களை மயக்கி ஆடம்பர மோகத்திற்கு ஆட்படுத்தி சிந்தனைச் சீரழிவை உருவாக்கும் கைங்கரியம் வர்த்தகத்தின் பெயரால் அரங்கேறுகிறது.
ஒரு பக்கம் எமது மக்களின் பணம் வர்த்தகம் என்ற பெயரில் கொள்ளையிடப்படுகிறது. மறபுறம் எமது சிந்தனை சீரழிக்கப்பட்டு எமது உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இயல்பான தன்மை மழுங்கடிக்கப்படுகிறது.
தென்னிலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில பெண்கள் திருட்டு நடவடிக்கைகளிலும் சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு எமது இளம் சந்ததியினைச் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நடவடிக்கைகளுக்கு சில நம்மவர்களும் துணைபுரிவது தான் வேதனை தருகிறது. இதில் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்கு ஆட்பட்ட சில இளம் வயதினர் கண்டுபிக்கப்பட்டிருப்பது தான். தென்னிலங்கைப் பெண்கள் மூலம், எயிட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயை எமது இளைஞர்கள் மத்தியில் பரப்பி எமது இனத்தையே அழிக்கும் முனைப்பு திட்டமிட்ட வகையில் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றின் தாக்கம் எம்மை நாமே சீரழிக்கும் ஒரு நிலைமையும் தோன்றுகின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. எமது சில இளைஞர்களும், இளம் பெண்களும் இழிவான நடவடிக்கைகளில் பகிரங்க இடங்களில் ஈடுபடும் அசிங்கமும் தமிழர்தாயகத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டால் காலப் போக்கில் இது ஒரு நாகரிகமாகவே மாறி எமது ஒழுக்க விழுமியங்களே அழிந்து போகும் நிலை ஏற்படலாம்.
மதுப்பழக்கம் புகைப்பழக்கம் எமது சமூகத்தில் ஏற்கனவே உண்டு என்பது உண்மை தான். ஆனால் இன்று அது இளைஞர்களே பகிரங்கமாக புகைப்பிடிப்பதும்,மது அருந்திவிட்டு கலாட்டா செய்வதும், வீதிகளில் செல்லும் பெண்களை வம்புக்கு இழுப்பதும் என ஒரு போக்கு உருவாகி வருகிறது.
இப்படி ஒரு நிலைமை உருவாகுவதற்கு காரணம் இன்றைய சினிமா, தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றி;ன் நிகழ்ச்சிகள் என்றால் மிகையாகாது. கலாசாரச் சீரழிவை வீட்டுக்குள்ளேயே சென்று திணிக்கும் பணியை இவை மேற்கொள்கின்றன. இவற்றில் வரும் ஆபாச நடனங்கள், காதல் என்ற பேரில் காட்டப்படும் கொச்சைத்தனமான வக்கிரங்கள், தனி மனித வன்முறைகள், கும்பலாக மேற்கொள்ளும் காடைத்தனங்கள் இவையெல்லாம் எமது இளைஞர்களை அவர்களை அறியாமலேயே சமூகவிரோத நடவடிக்கைகளை நோக்கி ஈர்க்கின்றன. தாமே அவை போன்ற செயல்களில் ஈடுபடுவதையிட்டு பெருமைப்படுமளவிற்கு இந்த ஊடகங்கள் அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றன. இளம் பெண்களும் இவற்றின் தாக்கத்திற்கு உட்படவில்லை என்று சொல்விடமுடியாது.
திருமணமாகாத இளம் பெண்களின் கருக்கலைப்பு வேகமாக அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் கவலை வெளியிடுமளவிற்கு நிலைமை படுமோசமாகியுள்ளது.
இதைவிட இன்னுமொரு பெரும் அபாயம் தென்னிலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கென எமது இளம் பெண்களை கொண்டு செல்வது? இதற்குச் சில அரச ஆதரவு அரசியல் வாதிகளும் துணைபோகின்றனர். நடந்து முடிந்த போர் காரணமாக ஏராளமான விதவைகளும், தமது உறவுகளை இழந்த பெண்களும் வறுமையில் வாடுகின்றனர். அந்த வறுமையைப் பயன்படுத்தி பல தரகர்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி எமது பெண்களைக் கடத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இப்படியாகக் கடத்தப்பட்ட பல மலையக யுவதிகள் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதும், தற்கொலை செய்வதும் பழைய செய்திகள்.
இவ்வாறு எமது தொன்மை வாய்ந்த பெருமைக்குரிய கலாசாரத்தைப் பல வழிகளிலும் சீரழிந்து எமது இனத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் ஒரு கலாசார யுத்தம் எமம் மீது எமது பலவீனங்களையே ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது.
ஆடம்பர மோகம், வரட்டுக்கௌரவம், இளவயதினரின் பாலியல் பலவீனங்கள், என்பன ஒரு புறமும் மறுபுறத்தில் இடப்பெயர்வின் அவல வாழ்வு, வறுமை, பாதுகாப்பின்மை என்பனவும் அவர்கள் எம்மீது இந்தப் போரைத் தொடக்க வாய்ப்புக்களை வழங்குகின்றன.
நாம் தமிழர் என்பதை அடையாளப் படுத்துவதில் எமது கலாசாரம் பிரதானமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த நானூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரின் ஆட்சியில் நாம் அடிமைப்பட்டிருந்த போதும் கட்டிக்காத்த எமது உயரிய பண்பாட்டை இன்று மட்டும் நாம் இழந்துபோகலாமா?
ஆயுதப் போராட்டத்தில் நாம் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் என்பது கசப்பான உண்மை தான். ஆனால் இது ஒரு பின்னடைவு மட்டும் தான். ஆனால் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது எமது விடுதலை வரை தொடரத்தான் செய்யும். ஆனால் எமது தொடரும் போராட்டத்தை வேருடன் அழிவித்து விட மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்று தான் இந்தக் கலாசார யுத்தம். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது எனவே நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருப்பது எமது ஜீவாதாரத் தேவையாகும்.
செண்பகப்பெருமாள்: ஈழநேசன்



0 Responses to தமிழ் மக்கள் மீதான கலாசாரப் போர்: செண்பகப் பெருமாள்