வேலை வாய்ப்புக்கென 25 000 மாணவ-மாணவிகளுக்கு மென்திறன் சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது : தமிழ்நாடு திறன்மேம்பாட்டு சங்கத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
15,000 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி அளிப்பதற்காக 6 கோடி ரூபாயும், அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கலை -அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் 25,000 மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி வழங்க 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், பயிற்றுநர்களுக்கான பயிற்சி திட்டத்திற்காக 50 லட்சம் ரூபாயும் அனுமதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர் தொழில் நுட்பங் களான வானுர்தி பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த துறை,கப்பல் துறை மற்றும் அதுசார்ந்த சேவை பிரிவுகளில் இளைஞர்களைப் பயிற்றுவிக்க உலகத்தரம் வாய்ந்த ஒரு பயிற்சி மையம் தனியார் பங்கேற்புடன் அமைப்பதற்கு முதற் கட்டமாக, 25 லட்சம் ரூபாய் அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல இவ்வாறான திட்டங்களுக்காக மொத்தம் 20 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் மனிதவளத்தினை மேம்படுத்துவதற்காக, இதில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பல்வேறு தொழிற்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு இடையே போட்டித் திறனை மேம்படுத்துவதற்காகவும், 18 தொழிற்பிரிவுகளில் நடத்தப்பட்டு வரும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் ஒவ்வொன்றிலும், சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுபவருக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசுத் தொகையினை 5,000 ரூபாயி லிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று தொழில் நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், இளங்கலை பட்டம், பொறியியல் படிப்பு, பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் ஆகிய மேற்படிப்பினை தொடர, முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியை, 250 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி படிப்பு காலம் முழுமைக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 317 பேர் பயனடைவர். இதனால் அரசுக்கு 19 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். அரசின் இந்த நடவடிக் கைகளினால், மனிதவளம் மேம்பாடு அடைந்து, வருங்காலத்தில் திறமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் உருவாவதற்கு வழி வகை ஏற்படும். இதனால் தொழில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புக்கென 25 000 மாணவ, மாணவிகளுக்கு மென்திறன் சிறப்பு பயிற்சி: முதல்வர் உத்தரவு
பதிந்தவர்:
தம்பியன்
05 January 2012
0 Responses to வேலை வாய்ப்புக்கென 25 000 மாணவ, மாணவிகளுக்கு மென்திறன் சிறப்பு பயிற்சி: முதல்வர் உத்தரவு