Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அறுபத்து மூன்றாவது சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கும், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளிவருவதற்கும் இடைப்பட்ட காலப்பகுதியான டிசம்பர் 13ம் திகதி (2011), தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட பகிரங்க விண்ணப்பமானது, தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் ஓர் முக்கியமான செயற்பாடகும்.

மேற்குறித்த செயற்பாடானது, 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும், அதன் தொடரான 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கும் பின்னர், வடகிழக்கைச் சேர்ந்த சிவில் சமூகத்தினரால் துணிகரமாக முன்னெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாகவே ஆக்கபூர்வமான விமர்சகர்களாலும், அரசியல் அவதானிகளாலும் நோக்கப்படுகிறது.

யார் இந்த சிவில் சமூகம்?

வடகிழக்கை தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் இவர்கள், தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதைக்கும், மதிப்புக்குமுரிய மதத் தலைவர்கள், மருத்துவ கலாநிதிகள், சட்டத்தரணிகள், பல்வேறுபட்ட துறைசார் கல்விமான்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என ஒரு தேசியத்தின் பலமாக, அதன் நம்பிக்கையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

சிறீலங்கா அரசாங்கத்தின் கொடிய அடக்குமுறைக்கரம் நீண்டுள்ள, வடகிழக்கு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ்ந்துகொண்டு, தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனத் தெரிந்துகொண்டும் மக்களோடு மக்களாக, மக்களுக்காக அர்ப்பணிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கும் பலரை தன்னகத்தே கொண்டதே தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள இந்த சிவில் சமூகம்.

தமிழ்த் தேசத்தின் இருப்பை உறுதிசெய்ய செய்யமுற்படும் மூத்தோர் உட்பட, தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தை ஆக்கபூர்வமானதாக வடிவமைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் குறிப்பிடத்தக்க இளையோரைக் கொண்டுள்ளது இந்தக் கட்டமைப்பு.

அந்தவகையில், காலத்தின் தேவைகருதி சிவில் சமூகத்தின் சில பண்புகள் தொடர்பாக மிகச்சுருக்கமாக பார்ப்போம்.

ஒரு தேச சிவில் சமூகத்தின் பங்களிப்பு என்ன?

சிவில் சமூகம் என்பது, ஜனநாயக பண்புகளையும், பன்மைத்துவத்தையும் கொண்ட முற்போக்கு சிந்தனை உள்ள தேசங்களின் தூணாக விளங்கி வருகிறது. ஒரு தேசத்தின் இருப்பையும், எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்வதில் இவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது.

இதன் காரணமாகவே, மேற்குலக நாடுகள் சிவில் சமூக அமைப்புகளுக்கு முக்கிய இடத்தை வழங்கி வருகின்றன. அத்துடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சிவில் சமூக கட்டமைப்புகளை பிரதான வகிபாகமாக கருதுகின்றன. அத்துடன், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள், சிவில் சமூக அமைப்புகளின் ஆளுமையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.

இவையனைத்தும், ஜனநாயகம், பன்மைத்துவம், முற்போக்குத்தனம் போன்ற பண்புகளையுடைய அரசாங்கங்களால், அமைப்புகளால், கட்டமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படுவது வழமை. ஆயினும், சுதந்திரமானதும், இதயசுத்தியும் உடைய சிவில் சமூகங்களின் வகிபாகம், மக்களின் நலன் எனக் கூறிக்கொண்டு, செயலில் மக்களின் விருப்புக்கு எதிராக செயற்படும் அரசாங்கங்களால், அரசியல்வாதிகளால், அமைப்புகளால் வன்மையாக எதிர்க்கப்படுகிறது. இந்த துர்ப்பாக்கிய சூழல், அபிவிருத்தி அடைந்து வரும் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது.

ஒரு தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு (state), அரசாங்கம் (Government) மற்றும் அரசியல்வாதிகளின் ஆக்கபூர்வமான விடயங்களுக்கு ஆதரவாக இருக்கும் சிவில் சமூகங்கள், மேற்குறித்த மையங்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், அல்லது மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் சந்தர்ப்பங்களில் குறித்த கட்டமைப்புக்களை பொறுப்புகூறும் தன்மைக்கு உள்ளாக்குகிறார்கள். இதனூடாக, குறித்த மையங்கள் அரசியல் நேர்மையுடனும், இதயசுத்தியுடனும் சரியான பாதையில் பயணிப்பதற்கு வழியமைக்கப்படுகிறது.

தமிழ்தேசிய சிவில் சமூகத்தின் தோற்றமும், போக்கும்.

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், பிரஜைகள் முன்னணி (Citizens Committee) என்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது சிவில் அமைப்பின் பண்புகளை கொண்டிருந்தாலும், அன்றையசூழல் தமிழ்த் தேசியத்துக்கு சார்பான நகர்வை மேற்கொள்ளமுடியாமல் செய்தது. இதில் ஏற்பட்ட பின்னடைவுகள், சவால்களை 2008ம் நடுப்பகுதியில் இடம்பெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலில் அதில் பிரதான பாத்திரம் வகித்த காலஞ்சென்ற பேராசிரியர். சிவத்தம்பி அவர்கள் கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

யாழ்குடாநாடு சிறீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் கைதுகள், காணாமல் போதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்தக்கட்டத்தில், சமாதானத்துக்கும், நீதிக்குமான செயற்குழு என்ற பெயரில் தோற்றம் பெற்ற சிவில் சமூகம், கைதுகள் மற்றும் காணாமல் போதல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டது.

அன்றைய காலகட்டத்தில், தமிழ் அரசியல்வாதிகளை விட சிவில் சமூகமே மக்கள் தேவையை கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

யாழ் மண்ணில் இடம்பெற்ற முதலாவது எழுச்சிபூர்வமான பொங்குதமிழ் நிகழ்வை நடத்துவதிலும் சிவில் சமூகமே பின்னணியில் நின்று செயற்பட்டது. சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே விடுதலைப் புலிகளால், பிரதேசவாரியாக தேசிய எழுச்சிப் பேரவை உருவாக்கப்பட்டது.

2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஏ9 வீதி திறக்கப்பட்ட ஆரம்பத்தில், அந்தப் பாதையால் பிரயாணம் செய்த பிரயாணிகளுக்கும், விடுதலைப் புலிகளின் கண்காணிப்புப் பிரிவினருக்கும் இடையில் வரி அறவீடு தொடர்பான பிணக்குகள் உருவாக்கம் பெற்றது. இந்த நெருக்கடி நிலையை தணிக்கும் செயற்பாட்டிலும் சிவில் அமைப்புகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை செலுத்தியிருந்தன.

ஆனால், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், தமிழர்களுடைய வாழ்வென்பது நாதியற்றவர்கள் என்ற நிலையை நோக்கி நகரமுற்பட்ட வேளையிலேயே, நம்பிக்கைதரும் ஒரு செயற்பாடாக வடகிழக்கைச் சேர்ந்த பல்வேறுபட்ட தரப்பினரும் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்க விண்ணப்பத்தை அனுப்பிய சிவில் சமூகத்துக்கு உயிரூட்டினார்கள். இவர்களுடைய வகிபாகத்தின் கனதி கருதியே, சர்வதேச இராஜதந்திரிகள் தொடக்கம், பல்வேறுபட்ட தரப்புகளும் இவர்களை காலத்திற்குக் காலம் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

இன்றைய சூழலில் தமிழ் சிவில் சமூகத்தின் வகிபாகம்

காலத்தின் தேவையும், சூழலும் கருதி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு இலங்கைத் தீவிலும், சர்வதேச அரங்கிலும் அங்கீகாரத்தைப் பெறும் நோக்குடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதன் நிமித்தமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வெற்றிபெறச் செய்தார்கள். 2010 ஏப்ரலில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், கடந்த (2011) யூலையில் இடம்பெற்ற உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான இனம், அவர்களுடைய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிபடத் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், தமிழ் மக்களின் மீள் எழுச்சிக்கான வேலைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஜனநாயக விழுமியங்களையும், கோட்பாடுகளையும் பின்பற்றி, தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கும், விடிவுக்கும் தம் நிலத்தில் தன்னாட்சிக்குமான இலக்குடன் எம்மக்கள் மத்தியில் வேலைசெய்யவுள்ளோம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2011 யூலை இடம்பெற்ற உள்ளூராட்சி அதிகார சபைக்கான தேர்தலில் கூறியதற்கிணங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அமோக வெற்றீயீட்டச் செய்தனர்.

ஆயினும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தேர்தல் கால பிரச்சார கூட்டங்களிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியதற்கும், தற்போதைய அவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையில், வேறுபாடுகளும், இடைவெளிகளும் அதிகரித்து செல்கின்ற நிலையில், அதனை உரிய இலக்கு நோக்கி, இலட்சியப் பற்றுடன் சரியான பாதையில் நகர்த்த வேண்டிய பொறுப்பும், நிர்ப்பந்தமும் தமிழ்த் தேசியத்தின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அதனை வரலாறு, தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுமுள்ளவர்கள் என்ற வகையில், தமிழ் சிவில் சமூகத்திடம் பொறுப்பளித்துள்ளது. அந்தப் பொறுப்பை, பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்தவாறு ஆக்கபூர்வமாக நகர்த்தும் நடவடிக்கைகளில் தமிழ் சிவில் சமூகம் அர்ப்பணிப்புடன் செயற்படுத்தி வருகின்றது. அந்தவகையிலேயே, தமிழ்த் தேசியத்தின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பகிரங்க விண்ணப்பத்தை தமிழ்ச் சிவில் அமைப்பினர் அனுப்பி வைத்திருந்தனர்.

விமர்சனங்களும், விவாதங்களும்

ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஏன் அவை விமர்சனமாக இருந்திருந்தால் கூட அதற்கான பதிலளிப்பாக ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன்வைத்திருக்கலாம். ஆனால், அதில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்கு உரிய நடவடிக்கையை எடுப்பதற்குப் பதிலாக, அடிப்படையற்றதும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாததுமான மூன்றாம் தர விமர்சனங்களே முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பகிரங்க விண்ணப்பத்திற்கு எதிர்வினையாக ஒரு சில கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. மேலும், தமிழ் சிவில் சமூகத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தை உருவாக்கும் செயற்பாடுகளும் வெவ்வேறு தளங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

முத்திரை குத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குரிய தார்மீகப் பொறுப்பிலிருந்தும், அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்களிலிருந்தும் விலகிச் செல்வதனை நியாயப்படுத்தும் போக்கும் முளைவிட்டுள்ளது. இன்று, சிறீலங்கா நாடாளுமன்றில் தமிழ்மக்களை பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, சிறீலங்கா நாடாளுமன்றில் எண்ணிக்கையில் சக்திமிக்க ஒரு அணி. அத்துடன், தமிழர் தாயகத்தில் பரவலாக அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால், இத்தகைய பலமுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே, பல்வேறுபட்ட ஆளுமையுள்ள, தமிழ் சமூகத்தில் மதிப்பும், மரியாதைக்குமுரிய அண்மையில் பகிரங்க விண்ணப்பத்தை அனுப்பிய தமிழ்ச் சிவில் சமூகம் போன்ற ஒன்றை கட்டியெழுப்பு முடியுமா என்பது கேள்விக்குறியே.

அவ்வாறான சூழலில், சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைப் கொண்டிராத, பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ள தமிழ்த் தேசிய முன்னணிதான், தமிழ் சிவில் சமூகத்தின் பின்னணியில் செயற்படுகின்றது என்ற விமர்சனங்களானது அடிப்படையற்றதும், உரிய கவனங்களை திசைதிருப்பும் ஒரு நடவடிக்கையுமாகும்.

அதேவேளை, தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி, அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோர் எல்லோரையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என சொல்வதனூடாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் தேசியத்துக்கு எதிராக அல்லது தமிழ் தேசியப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றது என்பதையா தமிழ் சிவில் சமூகத்தை விமர்சிப்பவர்கள் வலியுறுத்த முனைகின்றனர் என்ற கேள்வி இத் தருணத்தில் தவிர்க்க முடியாததாகிறது.

அத்துடன், இந்த முத்திரை குத்தும் நடவடிக்கையானது, போர்குற்றம் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரைண நடாத்தப்பட வேண்டும் என கோரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை சிறீலங்கா அரசாங்கம் புலிகள் என வர்ணிப்பதற்கு ஒப்பானது. பொறுப்புக்கூறும் தன்மையிலிருது விலகியுள்ள சிறீலங்கா அரசாங்கம் போன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாற்றம் பெறுகிறது என்ற கருத்தும் இவ்விடத்தில் தோற்றம் பெறுவது தவிர்க்க முடியாததாகிறது.

அதேவேளை, குறித்த பகிரங்க விண்ணப்பமானது, புலம்பெயர் தமிழர்கள்தான் தேசியம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் இறைமை போன்ற விடயங்களில் உறுதியாக நிற்கின்றனர் என்ற, சில கூட்டமைப்பு உறுப்பினர்களதும், சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினரதும் வாதத்தையும் வலுவிழக்கச் செய்துள்ளது.

அத்துடன் தமிழர் தாயகத்திலுள்ள நியாயமான குரல்களும், புலத்திலுள்ள பெரும்பாலான குரல்களும் ஒருமித்தே செயற்படுகின்றது என்பதை தமிழ்த் தேசியத்தை சிதைக்க முனையும் எல்லா சக்திகளுக்கும் உரத்து, ஒலித்து உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும், எதிர்கால நலன்கருதிய செயற்பாடுகளும்..

யாரும் யாரையும் விமர்சிக்கலாம், ஆனால் அவை ஆக்கபூர்வமானதான, தமிழ்மக்களின் எதிர்கால சுபீட்சத்தை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும்.

மோதுகை மாற்றுநிலையாக்கத்தில் (Conflict Resolution) "யார் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள் என்று பார்க்கக் கூடாது. மாறாக, என்ன கருத்து முன்வைக்கப்பட்டது" என்பதே கவனத்திற்கொள்ள வேண்டியதும், முக்கியமானதுமான விடயமாகும். எங்களுக்குள் நாங்கள் விமர்சனத்தையும், உடன்பாடற்ற தன்மைகளையும் கொண்டிருந்தாலும், எமது மக்களின் வளமான எதிர்காலம் கருதி ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்று, அதற்குரிய வகையில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பது தமிழ் அரசியல் தலைவர்களுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் இன்று மிக அவசியமான விடயம். அதைவிடுத்து, தவறுகளை நியாயப்படுத்துவதற்காக, பகிரங்க விண்ணப்பதில் கூறப்பட்டுள்ள கருத்தை ஆக்கபூர்வமாக அணுகுவதை விடுத்து, பெயருள்ளது, ஆனால் கையொப்பமில்லை என்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் நாகரிகமற்ற சொல்லாடல்கள் ஊடாக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூகத்தை வசைபாடுவது போன்ற விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு தேசத்தின் நலனை அடிப்படையாகக் கொண்ட ஆக்கபூர்வமான விமர்சனங்கள் ஜனநாயக, பன்மைத்துவ சூழலில் இயல்பானவை. அதேவேளை, மோதுகை மாற்று நிலையாக்கத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான மனிதனுக்கான அடிப்படைத் தேவைகளான (Basic Human Needs) என்ற "நிலைத்து இருத்தல்" (Survival), நல்வாழ்வு (Well being), சுதந்திரம் (Freedom) மற்றும் அடையாளம் (Identity) ஆகியவை சமரசத்திற்கு அப்பாற்பட்டவை. அதனை, தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பமும் வேண்டியவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அழுத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், இலங்கைத் தீவின் இனக்குழும மோதுகைக்கு சாதகமான உடனடித் தீர்வை என்னால் எதிர்பார்க்க முடியவில்லை என்று முன்னால் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அண்மையில் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அக்கறையுடன் ஆராயும் போது, தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பத்தின் அவசியமும், அதனை ஆக்கபூர்வமான முறையில் கவனத்திலெடுக்க வேண்டிய தேவையும் புரியும்.

நிறைவாக, அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை. ஆனால், ஒரு தேசத்திற்கு நிரந்தர நலன் இருக்கவேண்டும். அதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரிவர புரிந்து செயற்பட வேண்டும். இல்லையேல், தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பமானது ஒரு ஆரம்பப் புள்ளியே என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

நிர்மானுசன் பாலசுந்தரம்

0 Responses to தமிழ்த் தேசியப் போராட்டத்தில் திருப்புமுனை சக்தியாகும் தமிழ் சிவில் சமூகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com