இனிக்க இனிக்கப் பேசியே தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 'பாமகவின் புதிய அரசில் புதிய நம்பிக்கை' என்ற நூலை திருச்சியில் வெளியிட்டு வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்; 45 ஆண்டுகாலமாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. அதை நாங்கள் இந்த அறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளோம். அதேவேளை தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளோம்.
இந்தி எதிர்ப்பு பேரலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். ஆனால் தமிழை வளர்ப்பதற்கு இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் 6 ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருக்கிறது திமுக. ஆனால் மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். அவ்வாறே மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
கூடங்குளம் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. அங்கு போயுள்ள அவர்கள் அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று புதிதாகச் சொல்லத் தேவையில்லை. அதனை அப்துல் கலாம் சொல்லிவிட்டார். ஆகவே அந்த நிபுணர் குழு மக்களையும், எதிர்ப்புக் குழுவினரையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டியதே முக்கியம். அவ்வாறு கேட்டுக் கொண்டதின் பின் அவர்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டியதே தற்போதைய தேவை. அது தவிர்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகள் சரியாக அமையாது எனவும் குறிப்பிட்டார்.
இனிக்க இனிக்கப் பேசியே தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது: ராமதாஸ்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
21 February 2012



முதலில் நீங்கள் சாதிய முலாத்தை விட்டு வெளியே வாருங்கள்; தமிழ்தேசிய விடுதலையை முன்னேடுங்கள்' தமிழ்தேசிய விடுதலையின் ஊடாகத்தான் பிற்படுத்தப்பட்ட;மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை சாத்தியம்' சந்தர்ப்பவாத. பிழைப்புவாத அரசியலை விட்டு ஒழியுங்கள்