இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது யுத்த கால மீறல்களுக்கான பொறுப்புக் கூறுதல் தொடர்பாக அறிக்கையில் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது தொடரின் 15வது சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதியான ஜோன்.சீ.மரிஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தனது பரிந்துரைகள் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்காததுடன், மிக மோசமான யுத்த மீறல்கள் தொடர்பாகவும் போதியளவான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவ் அமெரிக்கப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு யுத்தங்களுக்கு முகங்கொடுத்த பல நாடுகள் கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொள்ளுமிடத்தில், பொறுப்புக் கூறல் என்பது மீளிணக்கப்பாட்டு முயற்சியில் மிக முக்கிய பங்காற்றுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையானது, தமிழ்ப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கமானது உடனடியான அமுல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் எனவும், இப்பிரேரணையானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான திட்டவரைபு ஒன்று தற்போது பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் பார்வைக்காக வழங்கப்பட்டுள்ளது. சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற உறுப்பு நாடுகள் சில இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளன. அத்துடன் ஒரு நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தலையீட்டை மேற்கொள்ளக் கூடாது எனவும் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.
எவ்வாறிருப்பினும், இதனை அமெரிக்கா மறுத்துள்ளதுடன், அரசாங்கங்களின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு ஏதுவான மனித உரிமைகள் சூழலை உருவாக்கி, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிக்காட்ட வேண்டிய தேவை தற்போது உள்ளதாகவும், இதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவில் நிலையான, இறுதியான சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை அமெரிக்கா தயாரித்துவருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் திருமதி.கிலாரி கிளின்ரன் குறிப்பிட்டிருந்ததாகவும், மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றம் தொடர்பில் போதியளவு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை!
பதிந்தவர்:
Anonymous
08 March 2012



0 Responses to நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றம் தொடர்பில் போதியளவு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை!