தமிழீழத் தனியரச நிர்வாக காலத்தில் மேற்குலகம் தமிழ் மக்கள்மீது காட்டியளவு கவனத்தினை, தொடர்ந்தும் காட்டிவருகின்றதென்பதையே ஜ.நாவின் மனிதவுரிமைகள் அமர்வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தமிழர்களிற்குச் சிறிலங்காவில் பாதுகாப்பில்லையென்பதையும், மனித உரிமைமீறல்கள் நடைபெற்றுள்ளதென்பதையும் ஜ.நாசபையில் முதல் முதலாக வல்லரசொன்று சொல்ல முன்வந்துள்ளதானது வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதற்காக அமெரிக்காவிற்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். ஆனால் சிறிலங்காவிற்கெதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை தமிழர்களின் நலனென்பதைவிட தனது ஆதிக்கத்திற்கு ராஜபக்சவை அடிபணிய வைக்கமுடியாமையே முக்கிய காரணமாகும்.
தமிழர்களின் நலன் கருதி அமெரிக்கா நடந்திருக்குமேயானால் குறைந்த பட்சம் ஜ.நா. நிபுணர் குழுவால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை, அது ஜ.நா மனிதவுரிமை ஆணையகத்தில்
முன்வைப்பதோடு அதற்கான அங்கீகாரத்திற்கும் பாடுபட்டிருக்கும். இதனிடையே ஏன் அமெரிக்கா தமிழர்களிற்காக பாடுபடவேண்டுமென்ற கேள்வியினையும் நாம் கேட்டுக்கொள்ளத்தவறக் கூடாது.
ஒரு கொலைகார அரசானது, துப்பாக்கி முனையில் சாட்சியங்களை விசாரித்து தன்னைத்தானே நிரபராதியென்று தீர்ப்பு வழங்குவதானது, ஒன்றும் அதிர்ச்சியானதோ அல்லது அதிசயப்படக்கூடிய விடயமோ அல்ல. ஆனால் கொலைகாரர்ககள் தாங்களாகவே தயாரித்த பிரேரணைகளை நடைமுறைப்படுத்த மறுப்பதும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா (ஜ.நா ழூலம்) திணிப்பதும்
நகைப்பிற்குரிய விடயமாகும்.
மாறிமாறி பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் கொலைகார அரசுகளென்றும், தமிழர்கள் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளார்களென்பதையும் பல்லாயிரம் தடவைகள் தமிழ் மக்கள் ஆதாரபுர்வமாக எடுத்துச்சொல்லியும் சர்வதேச சமூகம் அதனை உள்வாங்கத் தயங்குவதானது மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.
உலகத்தில் அமெரிக்காவும் மேற்கைரோப்பிய நாடுகளும் தமது செல்வாக்கினை இழந்துகொண்டு வருவதாலும், உலகின் மக்கள்தொகை கூடிய நாடுகளான சீனா, இந்தியாவுடன், ரஸ்யா போன்ற நாடுகள் கைகோர்த்து அமெரிக்காவிற்கெதிராக நடந்து கொள்வதாலும் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவரக்கூடிய நாடுகளை சிநேகித பூர்வமாகவோ அல்லது மிரட்டியோ தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவரவற்கான பிரயத்தனங்களில் ஒன்றாகவே ஜ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவிற்கு எதிராக நடைபெறும் நாடகத்தினை நோக்கமுடியும்.
அமெரிக்காவின் இந்நடவடிக்கை தமிழ் மக்களின் விடுதலையுணர்வினையும் ஜனநாயக ரீதியிலான விடுதலைநோக்கிய போராட்டங்களினையும் மழுங்கடிக்கும் நோக்குடனும், தமிழர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயற்படும் வேகத்தினை குறைப்பதற்கானதுமான ஒரு முயற்சியாகக்கூட இது அமையலாம்.
இதற்கு முண்டுகொடுத்தபடி சில தமிழ் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மனவருத்தத்தினை ஏற்படுத்துகின்றது. பொறுப்பிலுள்ளவர்கள் தமது பொறுப்பையுணர்ந்து நடந்துகொள்ளவேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.
டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்.



0 Responses to மேற்குலகின் முயற்சிகள் வெறும் கண்துடைப்புக்களா?