டென்மார்க்கில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சந்தலையை பிடித்து சுழற்றினாலும், மாற்று வழியாக நோர்வே சென்றால் வேலை வாய்ப்பு உள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகடலில் கிடைத்த ஓயில், இயற்கை வாயு காரணமாக வரலாறு காணாத பெருந்தொகையை நேர்வே உழைத்து மடியில் போட்டுள்ளது. அங்கு தற்போது 70.000 காலியிடங்கள் உள்ளன. வேலை வாய்ப்பு 18 வீதம் பெருகியுள்ளது. 20 – 29 வயதுக்குட்பட்ட இளையேரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. எனவேதான் டென்மார்க்கில் இருந்து யொப்சென்டர் போய் கல்லில் நார் உரிக்காமல் நோர்வே பக்கமாக போவது நல்லது என்று செய்திகள் கோடி காட்டுகின்றன. அதேவேளை நோர்வேயில் நீண்ட காலமாக வேலையில்லாமல் இருப்பவர்கள் தொடர்ந்தும் வேலைக்கு போகாமல் டிமிக்கி விட்டுவருவதாக டென்மார்க் 3 எப் தொழிற்சங்கம் கூறுகிறது. அதேவேளை இன்று நோர்வேயின் வலதுசாரி கட்சி அரசியல்வாதி கெனிவ் வாலோ என்பவர் போதை வஸ்த்துவுடன் பிடிபட்டுள்ளார். இவர் மோசமான போதைவஸ்த்து அடிமை என்று கூறப்படுகிறது. நாட்டில் பணம் குவிந்தால் அரசியல்வாதி போதையில் கிடப்பது சகஜமே.
இன்னொரு செய்தியின்படி பணக்காரர்களை கோட்டைவிட்டுவிட்டு கேட்கப் பார்க்க நாதியற்ற ஏழைகளோடு விளையாடுவதில் டேனிஸ் அரசாங்கம் பழைய வென்ஸ்ர அரசு போலவே இரக்கமற்று நடந்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டு பிளக்ஸ் யொப் எனப்படும் பகுதிநேர இலகு வேலை செய்யும் 70.000 பேரின் அமைதி வாழ்விலும் அரசு நெருப்பள்ளிப் போட முயன்றுள்ளது. இது குறித்து பாதிப்புக்குள்ளானோர் பேஸ்புக் ஆரம்பித்துள்ளனர். இதில் தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். அரசின் பிளக்ஸ்யொப் றிபோம் பல நோயாளிகளின் அமைதியை குலைப்பதாக சுட்டிக் காட்டியுள்ளனர். பிளக்ஸ் யொப் றிபோம் ஒருவருக்கு வாரம் 12 மணித்தியாலத்திற்கு மேல் வேலை இல்லை என்று கூறுகிறது.
டென்மார்க்கில் இருந்து வெளிநாடு சென்று கல்வி கற்கும் மாணவருக்கு வழங்கப்படும் எஸ்.யூ எனப்படும் மாணவர் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்தால் பணம் கைக்கு வந்து சேர ஆறு மாதங்கள் ஆகிவிடும். அதுவரை மாணவரே சொந்தப் பணத்தை செலவிட வேண்டிய அவலம் இருக்கிறது. இந்த நிலையை உடனடியாக மாற்ற அரசு முயன்றுள்ளது. அரசால் எஸ்.யூ வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கற்கைகளை மட்டும் முன்னெடுப்போருக்கு 14 தினங்களில் கொடுப்பனவை வழங்க ஆவன செய்யப்படும் என்று இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
டென்மார்க்கில் குடல் தொகுதியிலும், சமிபாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மோசமான புதுவகை பக்டீரியாக்களின் தாக்கம் ஆரம்பிக்கப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அவதானிக்கப்பட்ட இந்த பக்டீரியாக்கள் கடந்த ஆண்டு லிபியாவில் இருந்து டென்மார்க் வந்த ஏழு பேருடைய வயிற்றில் காணப்பட்டுள்ளது. மோசமான வீரியம் கொண்ட இந்த பக்டீரியாக்கள் பாலைவன வாழ்வின் கடுமைக்குள் உருவானவை. இவை டென்மார்க்கில் பரவுவது பலத்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.
கொய்றிங் நகரில் ஒருவர் நிறுவனங்களுக்குரிய மஞ்சள் இலக்கத்தகடை மாட்டி வாகனத்தை ஓட்டி சென்று மாட்டுப்பட்டுள்ளார். இவருடைய வாகனத்தில் இழுவை வண்டியும் இணைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபர் பல ஆண்டுகளாக வரித்திணைக்களத்திற்கு டிமிக்கிவிட்டு தப்பான இலக்கத்தகடுடன் வாகனத்தை ஓட்டி காலம் கடத்தியுள்ளார். இவருக்கு சுமார் 700.000 குறோணர்கள் தண்டம் விதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல விரித்திணைக்களத்திடம் இப்போது மாட்டியிருக்கிறார். கம்பின் பட்டைடை வறுகி எடுக்கப்போகிறது மாடு.
கிறீவ நகரில் 25 வயது நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானார். இவர் தற்போது கூய்ய நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கிறிமினல் பின்னணியில் இறங்கிய குத்து என்கிறது போலீஸ்.
இன்றைய 24 மணி நேரம் பத்திரிகை முகத்துக்கு போடும் கிறீம், அழகு சாதனங்கள் கடுமையான இரசாயன கலவை கொண்டதாக தெரிவிக்கிறது. இவற்றை பாவிப்போர் கடும் பக்க விளைவை சந்திக்க நேரும் என்றும் தெரிவிக்கிறது.
முன்னாள் டேனிஸ் பிரதமர் லாஸ்லொக்க ராஸ்முசன் பாராளுமன்ற காரியாலயத்தில் புகைப்பிடிப்பதற்காக அமைத்த கபினுக்காக 154.000 குறோணரை திருப்பி செலுத்த இருப்பதாக நேற்றைய செய்திகள் தெரிவித்தன. இன்றய செய்திகளின்படி இந்த விவகாரம் குறித்து வென்ஸ்ர கட்சியினர் வாய் திறக்காமலே இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் வென்ஸ்ர கட்சிக்குள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது. இவர் இப்போது விவகாரம் அம்பலத்திற்கு வந்ததும் பணத்தை கொடுக்க ஒப்புக் கொள்கிறார். ஆனால் பாடுபட்டு உழைத்து வரிகட்டிய மக்களின் பணத்தை தனது சுயநலமிக்க புகைத்தலுக்காக கொட்டி இறைத்திருக்கிறார் என்று றொஸ்கில பல்கலைக்கழக உடகத்துறை தலைமைப் பேராசிரியர் மார்க் ஊயஸ்ரீன் கூறினார்.
இது இவ்விதமிருக்க தற்போதய பிரதமர் கெல தொனிங் சிமித்தின் தனிப்பட்ட வரி அறிக்கையை சட்ட முரணாக அம்பலப்படுத்திய விவகாரமும் விசாரணையும் சூடு பிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டதாகக் கருதப்படும் முன்னாள் வென்ஸ்ரவின் வரித்துறை அமைச்சர் ரோல்ஸ் லுண்ட் போவுல்சன் தனது நீண்ட ஓலோவ் லீவை நிறுத்தி பாராளுமன்றம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கமிஷனை அவர் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இப்படி முற்பகல் செய்ய பிற்பகல் விளையும் என்பதற்கமைவாக வென்ஸ்ரவின் பக்கம் எதிர்க்காற்று வீச ஆரம்பித்துள்ளது. இந்தக் காற்றை நாடி பிடித்து லிபரல் அலையன்ச கட்சியின் சாமுவேல்சன் அரசுக்கு ஆதரவு கொடுக்கப் போவதாக பல்டி அடித்ததில் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு.
புகை அரசியல் பகை அத்தோடு பதுங்கிய வரிப்புலி திரும்பி வரவேண்டிய நிலை..
பதிந்தவர்:
Anonymous
08 March 2012



0 Responses to புகை அரசியல் பகை அத்தோடு பதுங்கிய வரிப்புலி திரும்பி வரவேண்டிய நிலை..