Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒபாமாவே செத்துத் தொலை ஆப்கானில் கோஷம்..!

பதிந்தவர்: ஈழப்பிரியா 13 March 2012

சிரியாவில் நடைபெறும் படுகொலைகள் தமது நாட்டுக்கு பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ரஸ்ய அமைச்சர் சேர்ஜி லாரேவ் நேற்று ஐ.நா பாதுகாப்பு சபையில் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் உலக சமுதாயம் ஆஸாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளது, ஆனால் அங்குள்ள போராளிகள் பல கூறுகளாக பிளவுபட்டு கிடக்கிறார்கள். இவர்களுக்குள் நடைபெறும் மோதல்களும் இந்த மரணங்களுக்குள் முக்கிய பங்கு வகிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் உருப்படியான தீர்வு எதையும் முன் வைக்கவில்லை. மேலும் கொலை வெறி சிரசில் அடித்தால் அதன் பின்னர் ஐ.நா தீர்மானத்தால் எதுவும் செய்ய இயலாது என்பது கவனிக்கத்தக்கது. ஐ.நா மறுபடியும் இமாலயத் தவறை இழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவே செத்துத் தொலை.. ஒபாமாவே நீயும் கூடவே செத்துத் தொலை என்று கோஷமிட்டபடி ஆப்கான் பல்கலைக்கழக இளைஞர்கள் 2000 பேர் ஜலலாபாத்தில் ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள். அமெரிக்க சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் 16 ஆப்கான் பொது மக்களை வீடு புகுந்து சுட்டுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்பாட்டங்களை நடாத்தியுள்ளார்கள். மேலும் அவர்கள் கூறும்போது வரும் 2014 ற்குப் பிறகும் அமெரிக்கப்படைகளும், இராணுவ ஆலோசகர்களும் ஆப்கானில் தங்குவதற்கான ஒப்பந்தத்தில் அதிபர் ஹர்மீட் கார்சாய் கையெழுத்திடக் கூடாது என்றும், குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக ஆப்கானிலேயே விசாரணைகள் நடக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்கள்.

அதேவேளை இந்த விவகாரத்தில் இன்று கருத்துரைத்த தலபான் அமைப்பு இஸ்லாமிய சட்டங்களின்படி அந்த இராணுவத்தினனுடைய கழுத்தை அறுக்க வேண்டுமென கோரியுள்ளது. மறுபுறம் மேற்கண்ட இராணுவ சார்ஜன்ட் அமெரிக்க சட்டங்களின்படி மரணதண்டனை பெறும் விளிம்பு நிலையில் நிற்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இராணுவ சார்ஜன்ட் ஆப்கானுக்கு புதியவர் ஈராக்கில் இருந்து நேரடியாக ஆப்கான் வந்து சன்னதமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பெயரை வெளியிட அமெரிக்கா மறுத்துவிட்டது.

ஆப்கான் விவகாரம் பற்றி இன்று கருத்துரைத்த அமெரிக்க அதிபர் வரும் 2014 ல் தமது படைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். அவசரப்பட்டு படைகளை அப்புறப்படுத்திவிட்டு பின்னர் பிரச்சனை அடிதலையாக மாறினால் இன்னொரு தடவை இராணுவத்துடன் ஓடிப்போய் ஆப்கானில் நின்று மறுபடியும் முதலில் இருந்து தொடங்க முடியாது. போய் விட்டோம் அங்கு பெறுமதியான மாற்றத்தை உருவாக்கிவிட்டு திரும்புவதே இனி தமக்கு அழகு என்று தெரிவித்தார். அதேவேளை நாட்டுக்கு நாடு மன்னிப்புக் கேட்டு அலையும் ஒபாமாவை றொம்னி தோற்கடிப்பார் வரும் தேர்தலில் என்று இன்றைய கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஒபாமாவின் மென்மைப் போக்கு அவரை தூக்கி வீசக்கூடிய அபாயம் உள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இரு தரப்பிற்கும் இடையே மறுபடியும் முறுகல் வெடித்துள்ளது. பாலஸ்தீனத்தின் தென் புலத்தில் இருந்து கடும் தீவிரவாதப் போக்குடையவர்கள் ஏவிய மோட்டார் ஷெல்கள் இஸ்ரேலில் விழுந்து வெடித்துள்ளது. இது பயங்கரவாத செயல் ஆகவே உடன் அடக்கப்பட வேண்டுமென கிளரி கிளின்டன் கொதித்தெழுந்துள்ளார். இஸ்ரேலுடைய கவனத்தை ஈரான் பக்கம் திரும்ப விடாமல் செய்வதற்கு இத்தகைய தாக்குதல்கள் அவசியம் என்பதை அவர் வெளிப்படையாக பேசவில்லை. இருதரப்பும் தேவையற்ற நேரத்தில் தேவையில்லாத முறுகலில் குதித்திருப்பது தமக்கு பாரிய கவலை தருவதாக ஐ.நா செயலர் பான் கி மூன் தெரிவித்தார்.

மறுபுறம் சென்ற ஆண்டு ஈரான் மொத்தம் 670 பேரை தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக மனித உரிமைக்கமிஷன் அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் போதைவஸ்த்து வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. அதேவேளை வயது குறைந்த இளைஞர், அரசியல் எதிர்ப்பாளரையும் கச்சிதமாக தூக்குமரம் ஏற்றுவதில் ஈரான் கில்லாடியாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

பங்களா தேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவுக்கு தென்கிழக்கே படகு விபத்தில் 150 பேர் பரிதாப மரணமடைந்துள்ளனர். இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் நடைபெற்றுள்ளது. 200 பேர் சென்ற படகு மூழ்கியதில் 37 பேர் மற்றைய படகால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஸ்பானியாவில் ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. அங்குள்ள அரசு கடுமையான மீதம் பிடித்தலை செய்த காரணத்தால் சீறிச்சினந்து துடித்து எழுந்துள்ளனர் தொழிலாளர். ஸ்பானியாவில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் 23 வீதமாக உள்ளது, இளைஞரிடையே 50 வீதமான வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது. இதுபோல மோசமான இடத்தை கங்கேரி நாடு நெருங்குகிறது. தேசிய வருமானத்தில் மூன்று வீதம் சேமிப்பில் இருக்க வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனையை நிறைவேற்ற முடியாத அவலத்தில் அந்த நாடு சிக்கியுள்ளது. வரும் ஆறு மாதங்களில் அதை நிறைவேற்றாவிட்டால் ஐரோப்பிய ஒன்றிய உதவிகளை அந்த நாடு இழக்கும்.

பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸி வரும் ஏப்ரல் 22 நடைபெறவுள்ள அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்களிப்பில் சிறு அளவில் தனது எதிர் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெறுவார் என்று இன்றைய கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. நேற்று அவர் ஆற்றிய செங்கனில் இருந்து வெளியேறுவது தொடர்பான வீறாப்புப் பேச்சு அவருக்கு சிறிய ஆதரவை அதிகரித்துள்ளது. ஆனால் இரண்டாவது கட்ட வாக்களிப்பில் இவர் தோல்வியடைவார் என்றும் கூறுகிறது. பலர் போட்டியிடும் முதல் சுற்றில் வாக்குகள் பிரிவடைவதால் ஸார்கோஸி வெற்றி பெறுவார், ஆனால் இருவர் மட்டும் மோதும் இறுதிச் சுற்றில் அவர் மண் கவ்வுவார். காரணம் இவருடன் போட்டியிடும் சோசலிஸ்ட் வேட்பாளர் கொலனவுக்கு தற்போது 54.5 வீத ஆதரவு உள்ளது ஸார்கோஸிக்கு 45.5 வீத ஆதரவு உள்ளது.

அலைகள்

0 Responses to ஒபாமாவே செத்துத் தொலை ஆப்கானில் கோஷம்..!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com