Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவா மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட இராஜதந்திரியான அட்டுல் கெஷாப் நேற்று அவசர பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதில் அமெரிக்கா என்றுமில்லாதவாறு தனது இராஜதந்திர நடவடிக்கையை பலப்படுத்தியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஜெனிவா மாநாட்டு விவகாரம் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது.

குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை குறித்து கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன என அறியமுடிகின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் 19 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு அமெரிக்கா சார்பில் முக்கியமான சில விடயங்களை வலியுறுத்திக் கூறிய கெஷாப், அவசர விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை, இந்தச் சந்திப்பு தொடர்பில் “சுடர் ஒளி’யிடம் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., “அமெரிக்க இராஜதந்திரியுடன் இடம்பெற்ற சந்திப்பு பூரண திருப்தியாகவிருந்தது. பேசவேண்டிய அனைத்து விடயங்களையும் இருவரும் மனந்திறந்து பேசினோம் என்றார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தனும், அமெரிக்கா சார்பில் அட்டுல் கெஷாப் தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இலங்கை இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் விவகாரங்களைக் கையாள்வதற்கான அமைச்சின் பணிப்பாளராக கெஷாப் கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இன்று அரச தரப்பினருடன் கெஷாப் பேச்சு நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

0 Responses to அமெ. இராஜதந்திரி; ஜெனிவா விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com