புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து பிரச்சாரம் செய்ய 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 42 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர்கள் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுக்கோட்டை தொகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறார். அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி அவர் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா வருகையையொட்டி புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி பல்லவராயன்பத்தை என்ற இடத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான இடத்தை அமைச்சர் என்.சுப்பிரமணியன் 2 முறை ஆய்வு செய்துள்ளார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுக்கோட்டை செல்கிறார். பின்னர் அங்கிருந்து மலையூர், மேலவிடுதி, மூக்கன்பட்டி, தொண்டமான் விடுதி, வடவாளம், இச்சடி, முள்ளூர், மச்சுவாடி, ஜீவா நகர் வழியாக புதுக்கோட்டை நகருக்கு செல்கிறார்.
அவர் 37 கிலோ மீட்டர் பயணம் செய்து 9 இடங்களில் பேச உள்ளார். பிற்பகலில் பிரசாரத்தை தொடங்கும் அவர் அன்று மாலையே சென்னை திரும்புகிறார். இதற்கான பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
0 Responses to புதுக்கோட்டை இடைத்தேர்தல் | ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம்