இலங்கையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவருகிறது.
ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது.
தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.
இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் எதிர்வரும் 7ஆம் திகதி மாலை 5 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெறுகின்றது.
தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமையேற்கிறார். த.க.இ.பே. சென்னை கிளைச் செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றுகிறார்.
உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர் ஆகியோர் நூற்படி பெறுகின்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
0 Responses to ஈழப் போரில் இந்தியாவின் பங்கு குறித்த நூல் சென்னையில் வெளியீடு!