Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான(house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது.

உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசவை உறுப்பினர்களுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது என்ற விடயத்தை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த நியமனங்கள் யாவும் ஆகஸ்ட் 15, 2012 அன்று முதல் நடைமுறைக்கு வரும்.

மேற்சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் அவர்களின் விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. திருவாளர் ராம்சி கிளார்க் அவர்கள் அமெரிக்காவின் முன்னை நாட் சட்டமா அதிபராவர் அமெரிக்கச் சட்டத்திலும் அனைத்துலகச் சட்டத்திலும் துறைதோய்ந்த நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலன் என்று பெயரெடுத்தவர்.கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச் சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர். அனைத்துத் தமிழராலும் உற்றதோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.

2. ஒரு சிங்களக் குடிமகனான கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன அவர்கள் இலங்கையில் ஒரு மருத்துவப் பேராசிரியராகத் தொழில் புரிந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று பேரினவாத இலங்கை அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக் கொண்டிருப்பவர். இலங்கையின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்தவர். என்றென்றும் எமக்காக ஒலிக்கப்போகின்ற குரல் இவரதாகும்.

3. கலாநிதி ஜெயலிங்கம் நாகலிங்கம் அவர்கள் ஒரு மருத்துவ ஆய்வாளர். இவர் மட்டுமன்றி இவரது முழுக்குடும்பமுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள்.

4. திரு. சத்யா சிவராமன் அவர்கள் ஒரு ஊடகவியலாளர் மட்டுமன்றி தெற்காசியாவில் மனித உரிமைகள் மற்றும் பொதுச் சுகாதாரம் பற்றிய ஒரு தொழிற்பாட்டாளருங்கூட. இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்ததில் திரு சிவராமனுக்குப் பெரும் பங்குண்டு.

5. திரு இழஞ்செழியன் அவர்கள் கல்லூரிப் பராயத்திலிருந்தே சமூகத்தில் நிலை குலைந்தவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைத் தம்முடைய சமூக எழுச்சிப் போராட்டமாக மாற்றிக் கொண்டவர். அம்மாந்தர் வாழ்வின் கண்ணியத்தைக் காப்பதனையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொண்டவர். ஐ.நாவிற்குப் பத்து லட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் பணியில் தம்மைப் பகலிரவாக அர்ப்பணித்தவர்.

6. திரு.ஞானேஸ்வரன் அவர்கள் இலங்கையிலும் கனடாவிலும் பொறியியலாளராகப் பட்டயம் பெற்றவர். அறிந்தநாட் தொட்டு தமிழ் மக்கள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். புலம்பெயர் சமூகத்தில் கருத்தொருமிப்பை நிறுவுவதற்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்.

7. உஷா ஸ்ரீஸ்கந்தராஜா அம்மையார் அவர்கள் கனேடியத் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். எமது பிரச்சினகள் பற்றிப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவதன் மூலமே ஒரு புனித யுத்தத்தை நடாத்திக்கொண்டிருப்பவர்.

8. திரு இராஜரத்தினம் அவர்கள் புலம்பெயர் தமிழர் வாழ் உலகெங்கும் ஒருங்கிணைந்த தமிழ் மொழிக் கல்விக்கென்று தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அதற்கான நூலாக்கக் குழுவிலும் பெரும்பங்கு கொண்டிருந்தவர். சிறந்த எழுத்தாளரான அவருடைய பண்பாடு வேரும் விழுதும் என்ற நூலானது தமிழ் நாட்டு அரசினால் சிறந்த நூலெனத் தேர்வு பெற்ற ஒன்று.

9. திரு. ஜெகன் நவரத்னம் மோகன் அவர்கள் தமிழீழச் சங்க மூலமாகவும் கனடியத் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவகம் மூலமாகவும் கனடியத் தமிழ் மக்களுக்கு அளப்பருஞ் சேவைகள் செய்த ஒரு மூத்த வழக்குரைஞர். அவர் புரியும் பல்தரப்பட்ட பணிகளுக்காகவும் அவரின் தலைமைத்துவப் பண்புகளுக்காகவும் கனேடியப் பாராளுமன்றம் அவரைக் கௌரவித்திருந்தமை இங்கு குறிப்பிடற்பாலது.

இவர்கள் அனைவரையும் மேற்சபை உறுப்பினர்களாக வரவேற்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது. இந்தப் பதவியை மனமுவந்து ஏற்றுக் கொண்டமைக்காக நாம் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்கள் ஒவ்வொருவரதும் திறமைகளும் அனுபவமும் தொழில் சார் தகமைகளும் நாம் எமது இலக்கை அடையும் முயற்சிகளில் நன்கு பயன்படும். அத்துடன் தமிழீழம் நோக்கிய எமது பயணத்தில் இவர்கள் தங்கள் இதயபூர்வமான அர்ப்பணிப்புடன் செயல்பட உறுதி பூண்டுள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

0 Responses to தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com