Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட முக்கிய காணிச் சொத்தொன்றை சீன நிறுவனத்திற்கு சிறிலங்கா வழங்க உடன்பட்டமை தொடர்பில் இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவின் கொழும்பு தூதரகம் மற்றும் புதுடெல்லியில் இருந்து எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சக வட்டார தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் சிறிலங்கா வெளியுறவு அமைச்சு வட்டாரம் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவலையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பாத நிலையில், இத்தகவலைத் தெரிவித்தவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

காலி வீதி மற்றும் Duplication வீதி சந்திக்கும் இடத்தில் காணப்படும் 287 பேர்ஜ் நிலமானது முன்னர் Shaw Wallace and Hedgesஎன்ற நிறுவனத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலமானது தற்போது சீன விமான உற்பத்தி நிறுவனமான CATIC அல்லது சீன தேசிய விமான தொழினுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையாளுவதற்காக சீன நிறுவனம் எவ்வளவு தொகையை செலுத்தியது என்பது தொடர்பாக இன்னமும் தெரியவரவில்லை. ஆனால் இந்நிலமானது ஏற்கனவே இந்திய நிறுவனத்திற்கென ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புபட்ட அனைத்து உத்தியோகபூர்வ செயற்பாடுகளும் நிறைவுபெற்றுவிட்டதாக வெளியுறவு அமைச்சு வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய உயர் ஆணையகமானது சிறிலங்கா வெளியுறவு அமைச்சுடன் இச்சொத்து கொள்வனவு தொடர்பாக உடன்பாடொன்றை எட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதே.

இச்சொத்தை கொள்வனவு செய்வதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையிலும், இதனை இந்தியாவுடன் மேலும் முன்னகர்த்திச் செல்வதில் ஒன்றரை மாதங்கள் இழுபறி நிலை காணப்பட்டதாலும், ஏற்கனவே இதனை சீன நிறுவனத்திற்கு ஒதுக்குவதற்கு உடன்பட்டமை தொடர்பிலும் இந்தியா தனது ஆழ்ந்த அதிருப்தி அடைந்துள்ளது. ஒரு பேர்ஜ் நிலத்திற்கு ஏழு மில்லியன் ரூபா வீதம் 2009 மில்லியன் ரூபாக்களை வழங்குவதாக இந்தியா ஏற்கனவே உடன்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நட்சத்திர உல்லாச விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் Shangri La அமைந்துள்ள இடத்துடன் இணைந்து காலி முகத்திடலில் காணப்படும் ஏழு ஏக்கர் நிலத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதி CATIC என்கின்ற சீன நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதன் முதலில் வழங்கப்பட்டது. எனினும், இந்நிலத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் உடன்பட்டது. ஆனால் இச்சீன நிறுவனமானது பிறிதொரு நிலத்தை வாங்குவதென தீர்மானித்தது.

"CATIC சீனாவின் மிகப் பெரிய நிறுவனமாகும். இதற்குச் சொந்தமாக 11 விடுதிகளும், 56 உயர் பல்தொகுதி அங்காடிகளும் காணப்படுகின்றன. இதற்கான நிதியான சீனாவின் எக்சிம் வங்கியின் ஊடாக கடன் வசதிகளுடன் வழங்கப்படுகின்றது" என CATIC நிறுவனமானது சிறிலங்காவில் நிலத்தைக் கொள்வனவு செய்ய உடன்பட்டபோது சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலக் கொள்வனவு தொடர்பில் வழங்கப்பட்ட முற்பணம் தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை வரைபில் சிறிலங்கா மற்றும் சீன நிறுவனத்திற்கு இடையில் முரண்பாடு தோன்றியிருந்தது. இதற்கான முற்பணமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக CATIC தெரிவித்திருந்தது. ஆனால் சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன 54.4 மில்லியன் டொலர்கள் என நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்நிலமானது முன்னர் அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் இதனை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கத் தூதரகம் விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதே.

இந்திய வர்த்தக முயற்சியாளர் குழுவானது இந்திய வர்த்தக, தொழிற்துறை மற்றும் ஆடைத்துறை அமைச்சர் ஆனந்த சர்மாவின் தலைமையில் சிறிலங்காவிற்கு வருகை தந்ததன் பின்னணியிலேயே தற்போது இந்தியாவானது இந்நில விவகாரம் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

0 Responses to சிறிலங்காவின் கபட நாடகம் - இந்தியா கடும் அதிருப்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com