உண்மையைக் கண்டறிவது மட்டுமல்ல, அதனை உரைப்பதும் அதனை விளக்குவதும் கூட கடினமானதே. தங்கள் சுயநலத்திற்காக பொய் நிலையைப் பேணுபவர்களை விட ஏற்கனவே நம்பப்பட்ட பொய்யை நம்பிக் கொண்டிருப்பவர்களின் எதிர்ப்பே அதிகமானதாக இருக்கும்.
இந்த இரண்டையும் விட, சரியான புரிதலின்றி உண்மை பொய் ஆகிய இரண்டையுமே தப்புத் தப்பாய் புரிந்து கொள்பவர்களின் தொகை ரொம்ப ரொம்ப அதிகம்.
அன்று தனிச் சிங்களச் சட்டத்தை பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்க அவர்கள் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தில் இரண்டு சிங்களப் பெருந்தகைகள் உண்மையை தயங்காது உரைத்தனர்.
இன்னும் 25 ஆண்டுகளில் இந்த தனிச் சிங்களச் சட்டத்தின் விளைவைக் காணலாம் என்ற பொருள் பட ஒருவரும்
(1958 உடன் 25 ஐக் கூட்டினால் 1983 வருவதைக் கவனிக்க) , இரு மொழிகள் என்றால் நாடு ஒன்றாகவும், ஒரே ஒரு மொழி தான் என்றால் நாடு இரண்டாகும் என்று பொருள்பட இன்னொருவரும் பேசியிருந்தனர்.
இருவருமே இடது சாரிகள்: முதலாமவர் டாக்டர் என் எம் பெரேரா மற்றவர் கொல்வின் ஆர் டீ சில்வா.
தென் இலங்கையைப் பொறுத்தவரை, மத பீடங்களை விட இந்த இடது சாரித்துவப் பக்குவமுள்ளவர்கள் தான் அனேகமாக உண்மையை தொடர்ந்து பேசி வருகின்றனர்.
1971 ல் ஆயுதக் கிளரச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் பக்குவமும் தேவையான ஜனநாயக நீரோடைக்கு கட்டி இழுத்து கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மேலே குறிப்பிட்டவர்களின் ஆதரவு இடது சாரி வட்டத்திலேயே இளையோரால் குறை கூறப்பட்டு பழம் பெருந் தலைவர்களின் ஆதரவு குறைக்கப்பட்டு ஜே வி பியினர் தான் தற்போது பலமான இடது சாரிகளாக மேலே நிற்கின்றனர்.
ஜனநாயகம் என்பது வெறும் கொள்கை வழி அல்ல. அது சன்னியாசம் போல ஒரு பக்குவமும் தேவையான ஒரு புனிதமான கோட்பாடு. சீராகவும் உண்மையாகவும் கண்ணியத்துடன் நேர்மையாகவும் சிந்திக்க இயலாதவர்களினால் உண்மையான இடது சாரிகளாக இருக்க இயலாது.
இதனைத் தான் ஜே வி பியின் செயற்பாடுகளிலும் அதிலிருந்து பிரிந்து சென்ற கட்சியிலும் காண்கிறோம்.
ஜனநாயக வழியிலான அவர்களது ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் நீதி, சமத்துவம், ஜனநாயகம் போன்ற எதுவுமே இருப்பதில்லை.
ஜனநாயக வழி முறைகளை ஜனநாயகத்திற்கு எதிராகவே பாவிப்பவர்கள் இவர்கள்.
ரணில் - பிரபா சமாதான ஒப்பந்தத்தையும் அதனைத் தொடர்ந்த புலிகளின் இறுதிப் பேச்சு வார்த்தையையும் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் போன்றவற்றால் திசை திருப்பியவர்கள் இவர்கள்.
நோர்வே அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் நியாயமான நடுநிலையான நிலைப்பாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை அவற்றின் தூதரகங்களின் முன்னால் கொழும்பில் நடாத்தி அவற்றின் தேசியக் கொடிககளையும் எரித்தவர்கள் இவர்கள் தான்.
இவ்வாறே மகா வம்ச இனவாதத்திலிருந்து மீட்சி அடையாத சனநாயகப் பக்குவமற்ற சிங்களவர்களின் கையில் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் தமிழ்த் தேசிய இனத்தவரை சிறுபான்மையினராக்கி சோல்பரி பிரபு 1948 ல் வழங்கியதிலிருந்து இன்னொரு சனநாயகக் கருவியான வாக்கெடுப்பை பாவித்து தமிழர்களின் உரிமைகளை பறிக்க ஆரம்பித்து இன்று உயிர்களையும் அதே சனநாயகச் சிறைக்குள் அடித்தே பறிப்பதற்கும் இந்தப் பக்குவமின்மையே காரணம்.
சனநாயகம் என்பது தேர்தல் வாக்களிப்பு ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளில் ஆரம்பிப்பதல்ல. அது எதற்காக தேர்தல். யாரின் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பு. எந்த நியாயமான அல்லது சரியான முடிவைச் சென்றடைய வாக்கெடுப்பு என்ற சிந்தனையின் வழியிற் தொடரும் செயற்பாடுகளாகும்.
இனக் கலவரங்கள் என்ற பெயரில் இன அழிப்பு நடந்த காலங்களிலெல்லாம் தமிழர்களை வெறியர்களிடமிருந்து காத்த சிங்களவர்களும் இருக்கிறார்கள்.
இதே போல நியாயத்தை தங்களிற்கு துரோகப் பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் எடுத்துக் கூறும் சிங்களவர் ஒரு சிலராவது இல்லாமலும் இல்லை.
உதாரணமாக டாக்டர் பிறையன் செனிவரட்னாவையும் குறிப்பிடலாம். .
அந்த வகையில் இந்தியாவிற்கு டெசோ மாநாட்டிற்கு சென்று உண்மைகள் சிலவற்றை ஒத்துக் கொண்டு பேசி விட்டு கொழும்பில் வந்து இறங்கத் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர் தான் விக்கிரமபாகு கருணாரட்ன.
ஆட்சி அதிகாரமாகட்டும், அரசியலாகட்டும், போராட்டமாகட்டும் இதில் எதுவுமே இனத்திற்கு அல்லது சமூகத்திற்கு குந்தகமாக பாவிக்கப்பட்டால் அதனை மனிதாபிமான அடிப்படையில் மானிடம் சார்ந்து நியாயத்தை எடுத்துக் கூற எல்லோராலும் முடிவதில்லை.
காரணம் அவர்கள் அரசில் அமைச்சராகவோ அன்றில் அரசியலில் கட்சிக்காரராகவோ அல்லது இயக்கத்தில் பிரச்சாரத் துறையினராகவே இருந்தால் இது இயலாது போய் விடும்.
எனவே தான் எந்த ஊடகவியலாளனும் எந்த அரசியலையும் சாராதவனாக. தன் சுய அரசியல் அபிலாசைகளையும் தாண்டி தன் இனஞ் சார்ந்து அதன் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்து அல்லது மானிடம் சார்ந்து செயற்பட வேண்டும் இதையே இந்த விக்ரமபாகு கருணாரட்ன செய்துள்ளார்.
இடம், நேரம், காலம், இனம், மதம், நிறம் போன்ற எதையும் கருதாதவனே ஒரு சிறந்த கலைஞனாக ஊடகவியலாளனாக இடதுசாரியாக அரசியல்வாதியாக இருக்க முடியும்.
இங்கிலாந்தில் பிறந்து இசையால் புகழ் பெற்று அமைதிக்கும் சமாதானத்திற்குமாய் உலகெல்வாம் குரல் எழுப்பி இறுதியில் அமெரிகக்காவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு இசைக் கலைஞன் நடந்து முடிந்த ஒலிம்பிக் மைதானத்தில் நிறைவு நிகழ்வில் நினைவு கூரப்பட்டான்.
இவ்வாறு தேசிய எல்லைகளை மீறி பரந்து பட்டுச் சிந்திப்பதோடு அதனை தயக்கமின்றி எடுத்துரைக்கும் விக்கிரமபாகு போன்றவர்கள் தான் உண்மையான இலங்கையர்கள்.
இவ்வாறான சமத்துவ வாதிகளினால் மட்டுந் தான் இன நல் இணக்கம் பற்றியோ ஐக்கியம் பற்றியோ பேச இயலும்.
தமிழர் தலைமைகளைப் பொறுத்தவரை சேர் பொன் இராமநாதனிலிருந்து இன்றைய தலைமைவரை பிரபாகரன் அடங்கலாக யாருமே தேசியங்களின் ஐக்கியத்திற்கு இடைஞ்சலாக நின்றதில்லை.
இதனை மகிந்த சிந்தனையும் காந்தி தேசமும் சர்வதேசமும் கவனிக்க வேண்டும்.
0 Responses to விக்ரமநாயக்க கருணாரட்ன! சிறிய மனிதன் பரந்த இதயம்!: குகதாசன்