இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதிலிகளாக தாய்த் தமிழ் மண்ணிற்கு வந்த நம் ஈழத்துச் சொந்தங்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூடி, அதில் தடுப்பிலிருக்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசக் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர்,
இலங்கையில் இன்னமும் முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் நம் சொந்தங்களான ஈழத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களும் அரசியல் சம உரிமை பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், நம் ஈழத் தமிழ் சொந்தங்களின் நல் வாழ்வு, அரசியல் சம உரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக மத்திய அரசு கூறிக்கொண்டாலும், அது இலங்கை அரசின் நட்பைப் பேணுவதில்தான் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
அதனால்தான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. இலங்கையில் வாழ் தமிழர்களின் அரசியல் சம உரிமைக்கும், மறு குடியமர்த்தலுக்கும் குரல் கொடுத்துள்ள தமிழக முதல்வர், இங்கு ஏதிலிகளாக வந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு பல்வேறு வகைகளில் வதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவாரா?
இலங்கைக்கு குருதி கடத்த முயன்றார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள் என்ற ஐயத்தின் பேரிலும் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பல ஆண்டுக்காலமாக சிறப்பு முகாம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள சித்ரவதைக் கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக க்யூ பிரிவு தொடர்ந்த வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலைப் பெற்ற பின்னரும், அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ், மனிதாபிமற்ற வகையில் அவர்களின் விடுதலையைத் தடுத்து, தொடர்ந்து சிறப்பு முகாம்களில் வைத்து வதை செய்து வருகிறது க்யூ பிரிவு.
தங்களை விடுதலை செய்து, தமிழ்நாட்டில் உள்ள இதர முகாம்களில் வாழும் தம் சொந்தங்களோடு வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சிறப்பு முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் நம் சொந்தங்கள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளனர்.
விடுதலை செய்வதாக வாக்குறுதி மட்டும் அளித்துவிட்டு அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் விடுதலைக்காகவும், வதை முகாம்களாக செயல்படும் சிறப்பு முகாம்களை இழுத்து மூடவும் கோரி கடந்த மாதம் 11ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானோம். ஆனால் அவர்களுக்கு விடியல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தங்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமி்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள செந்தூரன் என்பவர் கடந்த 5ஆம் தேதியில் இருந்து மீண்டும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்றுடன் 12 நாட்களாக போராடிவரும் அவருடைய உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பூந்தமல்லி முகாமில் உள்ள மற்ற ஈழத்து சொந்தங்களும் ஒரு நாள் அடையாள பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் பூர்வீகக் குடிகளான நம் சொந்தங்கள் சம உரிமை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழக சட்டப் பேரவையில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக முதல்வர், தமிழ் நாட்டிலேயே அவர்களை வதைக்கும் இந்த சிறப்பு முகாம்களின் மீது தனது கவனத்தை செலுத்த வேண்டுமாய் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தங்களின் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும், மனிதாபிமானமற்று, அடிப்படை உரிமைகள் மறுத்து அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நியாயம்தானா?
எனவேதான் மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான சிறப்பு முகாம்களை இழுத்து மூடிவிட்டு, அதில் அடைக்கப்பட்டுள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களை இழுத்து மூடுங்கள்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
பதிந்தவர்:
தம்பியன்
16 August 2012
0 Responses to ஈழத்தமிழர்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களை இழுத்து மூடுங்கள்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை