Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று காலை 11மணிக்கு ஆரம்பமான போராட்டம் நண்பகல் 12.15 மணிவரையில் இடம்பெற்றது. இதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினருடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, போன்றனவும் மேலும் சில சிங்கள முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான பலமான கோசங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் கருணா, கே.பி, பிள்ளையான் போன் றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளபோதும், அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி போராளிகளை ஏன் படுகொலை செய்கிறீர்கள் என கேள்வியெழுப்பினர்.

இதேவேளை, போராட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து தமது பங்களிப்பை செலுத்தியிருந்ததுடன், படுகொலை செய்யப்பட்ட டெல்றொக்சனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, தமது பிள்ளையின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் யாழ். நகரில் இடம்பெற்ற போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசியர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர். இதேவேளை இந்தப் போராட்டத்திற்கும் தடையொன்று போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்ப்புக்கள் எவையுமின்றி போராட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் கூட்டமைப்பின் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசனும் அரசியல் உரைகளை நிகழ்த்தினர்.

தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோரும் கூட்டமைப்பின் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சி.சிறீதரன், சரவணபவன் ஆகியோரும் வேறு பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், யாழ். உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

0 Responses to யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் கொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நிறைவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com