Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'எனக்கு பிறகு சமுதாய எழுச்சிக்காக ஸ்டாலின் பாடுபடுவார்' என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது திமுக வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பாமகவினர் திமுகவில் இணையும் நிகழ்வு சென்னையில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அவர்கள் அனைவரையும் ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் உரையாற்றிய கருணாநிதி, “என் உயிர் உள்ளவரை தமிழ் இனத்துக்காக, சமுதாயத்துக்காக பாடுபடுவேன்” என தெரிவித்துவிட்டு, பேச்சில் சிறிய இடைவெளி கொடுத்து, “என் காலத்திற்குப் பிறகு ஸ்டாலின் பாடுபடுவார்” என அறிவித்தார்.

திமுகவில் கருணாநிதிக்கு பிறகு அடுத்த தலைவர் யார் என்பதில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரிடையே கடும் மோதல் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இச்சூழலில் கருணாநிதி இவ்வாறு அறிவித்திருப்பது அழகிரி ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கருணாநிதி மேலும் பேசுகையில் : இன்றைக்கு ஒரு கட்சியின் அமைப்பிலே இருந்து (பாஜகவிலிருந்து) விடுபட்டு இங்கே வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறத் தேவையில்லை. அந்த அமைப்பைக் குற்றஞ்சாட்டத் தேவையில்லை. குற்றம் இருந்த காரணத்தால்தான், குறைகள் இருந்த காரணத்தால் தான் அங்கிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்திருக்கிறோம் என்று முற்றுப்புள்ளி வைத்த பிறகு, அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை.

உங்களையெல்லாம் பிரிந்திருக்கின்ற அந்தத் தலைமை, ஒரு காலத்தில் எனக்கு மிக மிக வேண்டிய, நட்பு கொண்ட, கொள்கையுடைய தலைமையாகத் தான் இருந்தது. ஆனால் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்திருப்பீர்கள். கூட்டங்களிலே கேட்டிருப்பீர்கள். என்றைக்காவது ஒரு நாள், அந்தத் தலைமையைப் பற்றி நான் அவதூறாகவோ, அல்லது விமர்சனம் செய்தோ பேசியதாகக் காட்ட முடியுமா என்றால் முடியவே முடியாது. ஆனால் வீணாக என்னை வம்புக்கு இழுத்து நான் பதில் பேசாவிட்டாலும் கூட என்னை தரக் குறைவாகத் தாக்கி உங்களையெல்லாம் இங்கே வருவதற்கு எளிதாக வழி செய்து கொடுத்த அந்த நண்பருக்கு - உங்களுடைய முன்னாள் தலைவருக்கு - நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்தச் சமுதாயத்திலே தாழ்த்தப்பட்டிருந்த, ஒதுக்கப்பட்டிருந்த, ஓரம் கட்டப்பட்டிருந்த ஏழையெளிய மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்குப் பயன்படுகின்ற பணிகளை செய்வதையே கடமையாகக் கொண்டு, அதிலே வெற்றி பெற்றுள்ள கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்.நான் உங்கள் இனத்தைச் சேர்ந்த - உங்கள், எங்கள் என்று நான் பிரித்துப் பேச விரும்பவில்லை - நம்முடைய இனத்தைச் சேர்ந்த காந்தி என்ற பெண்ணையே என்னுடைய மகன் மு.க. அழகிரிக்கு மனைவியாக கொண்டு வந்துள்ளேன்.

இப்படி சமுதாயத்திலே கலப்பு ஏற்பட்டு, எல்லோரும் மனிதர்கள் அவர் இன்ன சாதி, இவர் இன்ன சாதி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், நாடு வாழாது, நம்முடைய நலிவுகள் தீராது என்பதற்காகத் தான் சாதி மறுப்புத் திருமணங்கள் இன்றைக்கு நடைபெறுகின்றன. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சமத்துவத்திலே ஒரு நம்பிக்கையையும் உறுதிப் பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு ஒத்துழைப்பு காட்டிய அறிவுலக மேதை அம்பேத்கர் அவர்களுடைய அந்தச் செயல்பாடுகளையும் போற்றிப் பாதுகாத்து நிற்பது தான் திராவிட முன்னேற்றக்கழகம் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்தச் சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில் தான் - இங்கே அமர்ந்திருக்கின்ற ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. நாம் ஓரினம், தமிழ் இனம், திராவிட இனம். நம்முடைய மொழி, தமிழ் மொழி.

நாம் காப்பாற்ற வேண்டிய மொழி, பயில வேண்டிய மொழி, பாதுகாக்க வேண்டிய மொழி தமிழ் மொழி. அந்த மொழியையும் காத்து, இனத்தையும் காத்து எதுவரினும் அதைப் பற்றி கவலைப் படாமல் எந்தத் தியாகத்திற்கும் தயார் என்று நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கத்திலே இன்று நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

காணொளி இணைப்பு

0 Responses to 'எனக்குப் பிறகு ஸ்டாலின் தான்' : கருணாநிதியின் அறிவிப்பால் புதிய பரபரப்பு (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com