Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும், திறந்த வெளி முகாமிற்கு மாற்றவேண்டும், குடும்பத்துடன் தாங்கள் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவ்வப்போது உண்ணா நிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது பல ஆண்டுகளாக தொடந்து வருகிறது. இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகளும் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் இதுவரை அரசு இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்க வில்லை.
இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமை சேர்ந்த ஈழ நேரு, செல்லக்குமார் மற்றும் சிறிகாந்தன் ஆகிய மூவர்களும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்களுக்கு பின் காவல்துறை அவர்களை வலுக் கட்டாயமாக அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது.

எனினும், மருத்துவமனையிலும் இந்த மூன்று தமிழர்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இதில் சிறிகாந்தன் என்பவர் மாற்றுத் திறனாளி ஆவார். அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் செயற்படாது என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் சிறப்பு முகாமில் உள்ள 13 முகாம் வாசிகள் அங்குள்ள மரத்தின் மீதி ஏறி போராட்டம் செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ளவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மரத்தில் உள்ளவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 26 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் மரத்தின் மீதே இருந்து வருகின்றனர்.

இது குறித்து அரசு வழக்கம் போல மௌனமே சாதித்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசு இந்த சிறப்பு முகாம்களை மூடாமல் இருப்பது தமிழ் உணர்வாளர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

ஈழத்தில் தான் தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கி கடும் துயரை அடைந்து வருகின்றனர். தாய் தமிழகத்திலும் ஈழ தமிழர்களுக்கு அதே நிலை தானா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழீழ ஆதரவாளர்கள்.

அரசு இதை கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Responses to செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com