Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நவம்பரில் நடக்கப் போகிறது காமன்வெல்த் மாநாடு. காமன்வெல்த் என்பது ஆகப்பெரிய  கௌரவமான அமைப்போ, அதன் மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாடோ இல்லைதான். என்றாலும், அது ஒரு பன்னாட்டு அமைப்பு. ஒரு பன்னாட்டு அமைப்பின் மாநாட்டை நடத்த இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு என்ன அருகதை இருக்கிறது - என்கிற கேள்வியை கனடா போன்ற நாடுகள், 'அம்னெஸ்டி' போன்ற அமைப்புகள் தொடர்ந்து எழுப்புகின்றன. இன்னும் அந்தக் கேள்வியை நாம் எழுப்பாதிருப்பது நமது தவறே தவிர, அவர்களது தவறல்ல!

மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டிய எலிசபெத் மகாராணி, புத்திசாலித்தனமாகக் கழண்டுகொண்டு விட்டார். மகாராணிக்குப் பதிலாக இளவரசர் சார்லஸ் கலந்துகொள்வார் - என்று சொல்லப்பட்டது. அது நீர்மேல் எழுதிய எழுத்தா என்பது தெரியவில்லை. சார்லஸும் அந்த மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்தால், இலங்கை நடத்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்பவர்களின் குரல் வலுவடையும். ராணியின் கௌரவம் காப்பாற்றப்படவேண்டும், இளவரசரின் கௌரவமும் தமிழர்களுக்கான நீதியும் மட்டும் காற்றில் பறக்க விடப்படவேண்டுமா என்ன!

இந்த மாநாட்டை இலங்கையில் எப்படியாவது நடத்தியாகவேண்டும் - என்று கங்கணம் கட்டிக்கொண்டு யாராவது திரிகிறார்கள் என்றால், அது இந்தியாவைத் தவிர வேறு யாராகவும் இருக்கமுடியாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது தடுக்கப்பட்டால், அதன் மானம்  கப்பலேறிவிடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும். அந்த 'நண்பேன்டா' டிராகுலாவின் மானம் கப்பலேறலாமா? அந்த ரத்தக்காட்டேரிக்காக, பெருமைக்குரிய தன்னுடைய திருநாட்டின் கப்பல்படையையே கூலிப்படையாக  அனுப்பிவைத்த இந்தியா, அதன் மானம் கப்பலேற அனுமதிக்குமா? காட்டேரியின் மானம் கப்பலேறும்போது, கூட்டாளியின் மானம் என்ன கதியாகும் என்பது அதற்குத் தெரியாதா? இத்யாதி இத்யாதி காரணங்களால்,  மாநாடு நடந்தே ஆகவேண்டும் - என்பதுதான் பாரதத்தின் நிலையாக இருக்கும் என்பது நிச்சயம்.

மாநாடு நடக்க எந்தத் தடையும் வந்துவிடக் கூடாது என்று இந்தியாவோ இலங்கையோ நேர்மையாக நினைத்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? நடந்த இனப்படுகொலைக்கு யார் பொறுப்பு என்பதை விசாரித்து அறிந்து அறிவித்திருக்க வேண்டும். சர்வதேச சுதந்திர விசாரணையை ஏற்று, தங்கள் மீது களங்கம் இல்லை - என்று காட்ட முயன்றிருக்கவேண்டும்.  குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்பட வழி செய்திருக்க வேண்டும். இதில் எதுவுமே நடக்கவில்லை. விசாரணையும் நடத்தக் கூடாது, மாநாடும் நடத்தியாக வேண்டும் - என்கிற திமிர்வாதத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, இந்தியாவிடமும் இலங்கையிடமும்!

மாநாட்டை எப்படியாவது நடத்துவதற்காக தன்னுடைய பித்தலாட்டங்கள் -  மோசடிகள் என்று அனைத்து சூழ்ச்சிகளையும் இந்தியா கண்டிப்பாகப் பயன்படுத்தும். எப்போதும்போல், இலங்கையைக் கண்டிப்பதைப் போன்ற ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தும். அதற்காக, உப்புக்கும் உதவாத பிரச்சினை எதையாவது கிளப்பிவிடும். அதைப்பற்றி நாலு பேரைப் பேசவைக்கும். அந்த சந்தடி அடங்குவதற்குள் மாநாடு நடந்துமுடிந்துவிடும். அந்த நோக்கத்துடன்தான், எந்த சட்டத்திருத்தம் செத்துச் சுண்ணாம்பாகிவிட்டது - என்று  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளிப்படையாகக் கூறினாரோ..... அந்த 13வது சட்டத் திருத்தத்தின் சாம்பலை, அதைத் தகனம் செய்த இடத்தில் போய்த் தேடிக் கொண்டிருக்கிறது இந்தியா.

13-ஐப் புறக்கணித்தால் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் - என்றெல்லாம் கூட சீன் போடுவதற்கான வாய்ப்பு அடுத்த ஓரிரு மாதத்தில் இருக்கிறது. அது எப்படி - என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். மாநாட்டை நடத்தியே ஆகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கும் இந்தியாவே, மாநாட்டைப் புறக்கணிப்பதாக எப்படி அறிவிக்கும் - என்கிற உங்கள் கேள்வி நியாயமானது. நாம் வெள்ளந்தியானவர்கள். அதனால், இந்தியாவின் விஷமத்தனத்தைப் புரிந்து கொள்ள நேரம்பிடிக்கும்.

நாலைந்து மாதங்கள் பின்னோக்கிச் செல்லுங்கள். ஜெனிவா மாநாட்டில் 'இலங்கைக்கு எதிரானது' என்கிற முத்திரையுடன் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததா இல்லையா? எதனால் ஆதரித்தது? நாமெல்லாம் வலியுறுத்தியதாலா... கருணாநிதி பூச்சாண்டி காட்டியதாலா... ஜெயலலிதா மிரட்டியதாலா? அப்படியெல்லாம்  நம்பிக்கொண்டிருந்தால் நம்மைக் காட்டிலும் 'அதி மேதாவிகள்' இந்தப் பூவுலகில் வேறெவரும் இல்லை என்று அர்த்தம்.
அந்தத் தீர்மானத்தை முழுக்க முழுக்க இலங்கைக்குச் சாதகமானதாக மாற்றிய பிறகுதான், 'நான்தான் உனக்குச் சாதகமாக அதை மாற்றினேன்' என்பதை இலங்கைக்குத் தெரிவித்தபிறகுதான், 'நன்று செய்தாய் நண்பா, இனி நீ அதை ஆதரிக்கலாம்' என்று ராஜபட்சே & கோ அனுமதித்த பிறகுதான்,  அதை ஆதரிப்பதாக ஒரு ஷோ நடத்தியது இந்தியா. நயவஞ்சகம் என்றால் இந்தியா, இந்தியா என்றால் நயவஞ்சகம் - என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த நிகழ்வு அது. இப்போதும் அதுபோன்ற ஒரு பேத்துமாத்தான திட்டம் அதன் கைவசம் நிச்சயமாக இருக்கும். சேட்டன் சிவசங்கர் மேனனையெல்லாம் வேறெதற்காக சம்பளம் கொடுத்து வேலையில் வைத்திருக்கிறார்கள்! உங்களுக்கும் எனக்கும் சேவை செய்யவா?

13... 13... என்று அங்கிருந்தும் இங்கிருந்தும் அதிரிபுதிரியாக அலப்பரை செய்வார்கள். கடைசியில், அதுபற்றிய விவாதம் தள்ளிப்போடப் படுவதாக, ஜாம்பஜார் ஜக்கு மாதிரி இலங்கை ஜகா வாங்கும். சைதாப்பேட்டை கொக்கு மாதிரி, இந்தியா வெளுத்து வாங்கும். 'நாங்க தான் சவுண்டு கொடுத்தது, எங்களாலதான்  இலங்கை புரண்டு படுத்தது' என்று கலியுக மூதறிஞர்கள் நாராயணசாமி, சுதர்சன நாச்சியெல்லாம் உதார் விடுவார்கள். நாம் தான் அரசியல் அறிஞர்களாயிற்றே..... இலங்கையைப் பணியவைத்த இந்திய அரசுக்கு நன்றி.... சொக்கத்தங்கத்துக்கு நன்றி... என்றெல்லாம் அறிவாலயங்களின்  தயவில் போஸ்டர் ஒட்டிப் பிழைப்பு நடத்துவோம். (இதெல்லாம் ஒரு பிழைப்பு!) இந்தச் சந்தடியில் நடந்து முடிந்துவிடும் காமன்வெல்த் மாநாடு.

இந்தக் கூத்து போதாதென்று, 'ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவையும் நாச்சியையும் விட்டால் வேறுயார் நாதி' - என்பதுமாதிரியெல்லாம் வினோதமாகப் பேசுகிற விசித்திர வீரியர்களை எங்கேயிருந்தாவது அழைத்துவந்து களத்தில் இறக்குவார்கள். இந்தக் குரூரமான நகைச்சுவையை டாப் டென்னில் வேறு சேர்த்துவிடுவார்கள். அதைப் பார்த்துப் பார்த்து நாச்சி  பரவசப்படுவார்.

இந்த நாடகத்தைப் பார்த்தெல்லாம் அசந்துவிடாமல், 'கொழுப்பெடுத்துத் திரியும் கொழும்பில் எப்படி நடக்கலாம் காமன்வெல்த்' என்று நாம் குரல்கொடுக்கிறோம் என்று வையுங்கள்.... நம்மைத் திசை திருப்புவதற்காகவே ரெடிமேடாக அவர்கள் கைவசம் இருக்கிறது இன்னொரு கேள்வி. அதைக் கையில் எடுப்பார்கள். அது, நமது உயிரோடும் உணர்வோடும் கலந்தது என்பதால், 99.9 சதவீதம் நமது கவனத்தைத்  திருப்பிவிடும். இருக்கிறாரா, இல்லையா - என்கிற அந்தக் கேள்வியை வேறெதற்காக இப்போதுவந்து கூசாமல் கூவுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இருக்கிறாரா இல்லையா - என்கிற கேள்வியை இப்போது எழுப்புபவர்களுக்கு, அதைக் கேட்பதற்கான தகுதி கூட இல்லை.  அதற்கு பதில் சொல்வதற்கான தகுதி மட்டும் அவர்களுக்கு  இருக்கிறதா என்ன? பிரச்சினையைத் திசை திருப்பவே இப்படியெல்லாம் பேசத் தொடங்குகிற இந்த 'அற்புத'ப் பிறவிகளுக்கு, மன்னார் ஆயராயிருக்கிற அந்த மரியாதைக்குரிய மனிதரை - ராயப்பு ஜோசப்பை - தெரியுமா தெரியாதா? சுற்றிலும் ராணுவம் முற்றுகையிட்டிருக்க, காணாமல் போன ஒன்றரை லட்சம் பேர் எங்கே - என்று துணிவுடன் கேட்கிறாரே... அந்த மனிதரைப் பற்றி இவர்கள் அறியவேயில்லையா!

இருக்கிறாரா இல்லையா - என்று குழப்பக் கூத்து நடத்துவதற்காகவே அழைத்துவரப்படும் கோமாளிகள், ராயப்பர் சொன்ன அந்த ஒன்றரை லட்சம் பேரும் தங்கள் உறவுகள், சொந்தங்கள் - என்பதைக் கூடவா மறந்துவிட்டார்கள்! இருக்கிறாரா இல்லையா - என்று நம்மிடம் கேட்பவர்கள், அந்த ஒன்றரை லட்சம் பேரும் இருக்கிறார்களா இல்லையா என்று  இந்தியாவிடமும் நாச்சிகளிடமும் கேட்டிருக்க வேண்டாமா?
ஒற்றை மனிதரால் மறைவாக இருந்துவிட முடியும்தான்.... ஒன்றரை லட்சம் பேருக்கு அது சாத்தியமா? ஒன்றரை லட்சம் பேர் மறைவாக இருந்துவிடுவதென்பது முடிகிற காரியமா?
அவர்கள் இருக்கிறார்கள் என்றால், எங்கே இருக்கிறார்கள்?

அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றால்... அவர்களைக் கொன்ற கொலைகாரர்கள் யார்? ஒன்றரை லட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால் அது இனப்படுகொலையா இல்லையா?

அப்படி அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், அந்த இனமே படுகொலை செய்யப்பட்டிருந்தால்... அந்த அநீதிக்கு நீதி கேட்க இந்தப் பிரகஸ்பதிகள் என்ன முயற்சி எடுத்தார்கள்?
இனப்படுகொலைக்கு நீதி கேட்க ஒரு துரும்பைக் கூட தூக்கி வைக்காதவர்கள், இங்கே வந்து - இருக்கிறாரா, இல்லையா - என்று துக்கடா பாடி திசை திருப்பப் பார்ப்பது ஏன்? இனப்படுகொலை குற்றச்சாட்டைத் திசை திருப்புவதற்காக இந்திய எஜமானர்களால் பயன்படுத்தப்படும் கூலிப்படையா இவர்கள்!

பிரபாகரன் மட்டும்தான் கொள்கையில் உறுதியாக இருந்தார், பிரபாகரன் மட்டும்தான் நேர்மையாக இருந்தார், பிரபாகரன் மனிதரேயில்லை - கடவுள் - என்றெல்லாம் எழுதியபடியே, பிரபாகரன் என்கின்ற அந்த அப்பழுக்கற்ற மனிதனின் முகத்தில் 'புழுதி' வாரித் தூற்ற முயன்ற எத்தனையோ பேரைப் பார்த்து விட்டோம் இதுவரை. இப்போது வந்திருக்கிற புதிய பூசாரிகளுக்கும் பழைய பூசாரிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களோடு சேர்ந்து, நாங்கள் மதிக்கும் எங்கள் ஊர் பேராசிரியர் ஒருவரும் உலா வருகிறார் என்பது ஒன்றுதான் வித்தியாசம்.

சற்றேறக் குறைய பாசிஸ்டுகளாகவே மாறிவிட்ட  மார்க்சிஸ்டுகளுடன் சேர்ந்து, 'நடந்தது போர் தான்' என்று புளுகப் போகிறார்களா இவர்களும்! ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நியாயம் கேட்கும் குரலை முடக்க, ஒற்றை உயிர் பற்றிப் பேசப் போகிறார்களா? அந்த ஒற்றை உயிரின் இருப்பு தெரிந்தும் மறுக்கப் பார்க்கும் எவரையும் வரலாறு மன்னிக்காது என்பதை இவர்கள் உணரவேண்டும்.

இல்லை - என்கிற பொய்ப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்கின்றன இலங்கையும் இந்தியாவும். அந்தப் பொய்ப்பிரச்சாரத்தின் உள்நோக்கத்தை அறிந்தே இருக்கிறோம் நாம். அவர் இருக்கிறார் - என்றும், அவர் வந்து பார்த்துக் கொள்வார் - என்றும்தான் இலங்கை பிரச்சாரம் செய்கிறது என்று ஓர் அண்டப்புளுகு ஆகாசப்புளுகை அவிழ்த்துவிடுகிறார்களே.... ஏன்? இப்படியெல்லாம் புளுகுவதன் உள்நோக்கம் என்ன?
யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது - என்பது இவர்களது வாதம்.

இதைத்தானே ஈழத்துக்காக உண்மையாகவே குரல்கொடுக்கும் ஒவ்வொருவரும், பாலாவின் முகம்பார்த்து களத்தில் குதித்த மாணவர்களும் தொடர்ந்து சொல்லிவருகிறோம். பிரபாகரன் என்கிற அந்த நெருப்புப் பொறி எங்கே - என்று கேள்வி எழுப்பாமல், பிரபாகரன் வரும் வரை காத்திருக்காமல், இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் வேள்வியில் நாம் ஒவ்வொருவரும் பிரபாகரனாகவே இறங்கவேண்டும் என்பதுதானே நமது லட்சியமாக இருக்கிறது. இதை இவர்கள் புரிந்துகொள்ளவேயில்லையா? அல்லது, இனப்படுகொலையை மூடி மறைக்கும் வேள்வியில் இந்தியாவுடன் சேர்ந்து  ஈடுபடுவதால், அறிதுயிலில் இருப்பது போல பாவலா காட்டுகிறார்களா?

இந்தியா மூலமே உரிமைகளை வாங்கமுடியும் - என்கிற எண்ணம் முட்டாள்தனமானது மட்டுமா? மன வக்கிரம் பிடித்தவர்கள் மட்டுமே இப்படியெல்லாம் நம்பமுடியும். முட்டாள்தனத்துக்கும் வக்கிரபுத்திக்கும் வித்தியாசம் இருக்கிறதா  இல்லையா?

சுதர்சன நாச்சியப்பனின் கையைப் பிடித்துக் கொண்டு சுதந்திரத் தமிழீழத்துக்குள் நுழைந்து விடலாம் - என்று நப்பாசையோடு அலையும் அளவுக்கு யாருக்காவது மறை கழண்டிருந்தால், அதற்கு நாம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? ஒரு இனத்தை அழித்து ஒழித்த மமதையுடன் திரிபவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு சுதந்திர நாட்டுக்குள் நுழையப் போகிறார்களா, சுடுகாட்டுக்குள் நுழையப் போகிறார்களா என்கிற கேள்விக்கு வரலாறு பதில் சொல்லாமல் இருந்துவிடப் போகிறதா என்ன?

கணவர் முத்துவடுகரைக் கொல்ல ஆர்க்காடு நவாபுக்குத் துணை நின்றார்கள் ஆங்கிலேயர்கள். அவர்களது சூழ்ச்சியால்தான் கொல்லப்பட்டார் முத்துவடுகர். அவர்களது ஆயுத பலத்தால் தான் சிவகங்கைச் சீமையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அந்த ஆங்கிலேயரிடம் அட்ஜஸ்ட் செய்துகொண்டு  உரிமையை மீட்க முயன்றிருந்தால், வரலாறு வாழ்த்தியிருக்குமா வேலு நாச்சியாரை!

கொன்றவர்களுக்கும் கொல்லத் தூண்டியவர்களுக்கும் 8 ஆண்டுகள் கழித்துப் பாடம் கற்பித்தபோது, முத்துவடுகரைக் கொன்ற ஆங்கிலேயத் தளபதி பாஞ்சோரின் கதைக்கு நாச்சியாரின் வாள் முடிவுகட்டியபோது சிவகங்கைச் சீமை மட்டுமா தலை நிமிர்ந்தது? ஒட்டுமொத்தத் தமிழினமும் தலை நிமிர்ந்தது. எதிர்க்கட்சி வேட்பாளரைக் கூட விலைக்கு வாங்கி, வெற்றி பெற்றதாக அறிவிக்க, அது அரசியல் பொறுக்கிகளின் போர்க் களமா என்ன?

ஒன்றரை லட்சம் பேரைப் படுகொலை செய்த ஒரு இனப்படுகொலையாளியைக் கூண்டில் ஏற்ற, உலகெங்கும் இருக்கிற கோடானுகோடி தமிழர்களால் முடியாதென்று நினைத்து, இந்தியாவின் வாசலில் துண்டுவிரித்துக் காத்திருக்கிறார்களா இவர்கள்! இனப் படுகொலை செய்த சிகப்புத் துண்டு மிருகத்தை  'இனப்படுகொலை' என்கிற அந்த ஒற்றை வார்த்தையாலேயே நசுக்கிவிட முடியும் என்பதை அறியாது பேசுகிறார்களா? அல்லது, அந்தக் குற்றத்தை மூடிமறைத்து ராஜபட்சேக்களைக் காப்பாற்ற முயல்கிறார்களா?

இளைய தலைவர்களில் ஒருவரான சிவசக்தி ஆனந்தன் சொன்னதைப்போல், ஆயிரமாயிரம் போராளிகளின் உயிர்த் தியாகமும் லட்சோப லட்சம் மக்களின் உயிர்த் தியாகமும்தான் ஈழம் பற்றி இந்த உலகத்தையே பேசவைத்திருக்கிறது இன்றைக்கு! 13 என்பது மோசடி என்று பேசவைக்கிறது.
அமெரிக்கத் தீர்மானம் ஒரு கண்துடைப்பு என்று குற்றஞ்சாட்ட வைக்கிறது. இந்தியா செய்தது நயவஞ்சகம் இல்லையா என்று நாக்கைப் பிடுங்குவதைப் போல் கேட்க வைக்கிறது. அந்த இனப்படுகொலையையே மூடிமறைப்பதற்காக, 'இருக்கிறாரா இல்லையா' என்று இவர்களை யார் பேசவைப்பது?

வடக்கில் இன்றும் பலாத்காரம் தொடர்கிறது, ஆள்கடத்தல் தொடர்கிறது  - என்று அண்மையில் குற்றஞ்சாட்டியிருப்பவர், ஒரு தமிழ்த் தலைவர் இல்லை.... ஜே.வி.பி. எம்.பியான சுனில் ஹந்துன் நெத்தி. இனத்தைக் கொன்று அழிக்க முழுமுதற் காரணமாக இருந்த இந்தியாவின் தயவில் உரிமைகளை வாங்கிவிட முடியும் - என்று நம்பி இங்கே வந்து முகாமிடுகிறவர்கள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா இல்லையா?

வடக்கில் மட்டும் தாய் - தந்தை - கணவன் - பிள்ளை - என்று இருந்த உறவுகளையெல்லாம் இழந்துவிட்டு அனாதரவாக நிற்பவர்கள் 35 ஆயிரம் பேர் என்கிறார் சுனில். கேட்கும்போதே மனம் பதைக்கிறது. 4 ஆண்டுகளாக அனாதரவாக நிற்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

இலங்கை அவர்களுக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட் கூட கொடுக்காது... பட்டினி கிடந்து சாகட்டும் என்றுதான் நினைக்கும்.  இதற்கெல்லாம் நிவாரணம் கேட்டுக் கையேந்திக் கொண்டிருந்தால் - நம்மை எட்டி மிதிக்கும். நிவாரணம் கேட்பதைவிட்டுவிட்டு, நீதி கேட்டுப் பாருங்கள்... 
'இனப்படுகொலை செய்த, கற்பழித்துப் பெண்களைக் கொன்ற காமக் கொடூரர்களைத் தூக்கில் போடு' என்று சட்டையைப் பிடித்து உலுக்குங்கள்.... அடுத்த நொடியே நிவாரணப் பணிகள் நடக்கிறதா இல்லையா - என்று பாருங்கள். நீதி கேட்டால்தான் நிவாரணம் கிடைக்குமே தவிர, பிச்சை கேட்டால் கிடைக்காது நண்பர்களே!

பச்சைக் குழந்தைகளைக் கூட படுகொலை செய்ய உதவிவிட்டு, 'பிச்சை போடுகிறோம் பாரீர்'  என்று 15 நிமிடம் டாக்குமென்டரி தயாரிப்பது, இந்தியாவின் திமிரைக் காட்டுகிறதே தவிர, இந்தியாவின் பரிவைக் காட்டவில்லை. அந்த டாக்குமென்டரியைப் பார்த்துவிட்டு லண்டனிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டு வந்துவிட்ட நண்பர்கள் யாரும், லண்டனில் இருந்தபோது, பார்த்தவர் இதயங்களையெல்லாம் உறையவைத்த 'நோ பயர் சோன்' பார்க்கவேயில்லையா?

0 Responses to இன்னுமா நம்புகிறார்கள் இந்தியாவை? புகழேந்தி தங்கராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com