Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளின் போது இராணுவம், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) மற்றும் கருணா குழு உள்ளிட்ட தரப்புக்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிந்த பரிந்துரைகளுக்கு அமைய மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன், இரண்டாவது விசாரணை அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

அதன் முதல் நாள் அமர்விலேயே காணாமற்போனவர்களின் உறவினர்கள் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் சாட்சியமளித்தனர். இதன்போதே, இராணுவம், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து அரசாங்கத்தின் ஒத்துமைப்போடு இயங்குவதாக சொல்லப்படும் கருணா குழு ஆகியவற்றின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளித்த வலிகாமம் மேற்கு பிரதேச சபை வளாகம் மிகவும் சோமான நிலையில் இருந்ததாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்..

நேற்று அளிக்கப்பட்ட சாட்சியங்களில் சில,

கனகலிங்கம் ஜெயராஜ் தொடர்பில் அவருடைய தந்தையான செல்லத்துரை கனகலிங்கம் அளித்த சாட்சியம், “2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி, அதிகாலை 03.45 மணியளவில் என்னுடைய வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த இராணுவமும், ஈ.பி.டி.பி அமைப்பின் சில உறுப்பினர்களும் எனது மகனான ஜெயராஜை அடித்து துன்புறுத்தியதுடன் எங்களையும் அச்சுறுத்தினர். அதன் பின்னர் அவர்கள் என்னுடைய மகனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர். ஆனால், தற்பொழுது வரை எனது மகன் தொடர்பாக எந்தவொரு தகவலையும் என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு என்னுடைய மகன் வேண்டும். அவரை மீட்டுத் தாருங்கள் என்றார்”

பிரேமபாலன் திலீபன் தொடர்பில் அவருடைய தாயாரான உதயறஜனி அளித்த சாட்சியம், “2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி இரவு 12.00 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபொழுது, நாம் குடியிருந்த வீட்டின் கதவுகளை தட்டுகின்ற ஓசையைக் கேட்டு நாங்கள் அச்சத்தில் நடுங்கிய பொழுது, கதவுக்கு வெளியால் நின்றவாறு எம்மை அச்சுறுத்தி வீட்டின் கதவைத் திறக்க வைத்தனர். அதன் பின்னர் எனது மகனை விசாரணைகளுக்காக வருமாறும் அவரைத் தம்முடன் விடுமாறும் எமக்குத் தெரிவித்தனர். சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் எமது வீட்டிற்கு அன்றைய தினம் வந்திருந்தனர். நாம் எமது மகனை அழைத்துச் செல்ல வேண்டாம் கத்திக் குழறி அழுத பொழுதிலும், எனது மகனை அழைத்துச் சென்றனர். அப்பொழுது குறித்த நபர்கள் சிறிய கலண்டர் அளவுடைய அட்டை ஒன்றை எங்களிடம் தந்திருந்தனர். அப்பொழுது தாம் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என எமக்குத் தெரிவித்திருந்தனர்”

பரமசாமி விவகரன் தொடர்பில் அவருடைய தந்தையாரான செல்லத்துரை பரமசாமி அளித்த சாட்சியம், “கடந்த 2007ஆம் ஆண்டு யூன் மாதம் 11ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருந்த பொழுது எமக்கு முன்பின் தெரியாத நான்கு மர்ம நபர்கள் வெள்ளை வான் ஒன்றில் தங்களுடைய முகத்தை கறுப்புத் துணியால் கட்டியவாறு என்னுடைய வீட்டிற்குள் மதிலின் மேலாக ஏறிப்பாய்ந்து உள்நுழைந்தனர். என்னையும், எனது மனைவியையும் கடுமையாகத் தாக்கிவிட்டு எனது மகனை கைவிலங்கு பூட்டி இழுத்துச் சென்றனர். எமது வீட்டில் அதிகாலை 04.30 மணியிலிருந்து 05.30 மணி வரை குறித்த நபர்கள் எம்மீது தாக்குதல் நடத்தி எம்மைத் துன்புறுத்தியபோது நாங்கள் எழுப்பிய அழுகுரலைக் கேட்டு அயலில் உள்ளவர்களும் இவர்கள் எமது வீட்டில் இருந்து சென்ற பின்னர் எனது வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனால் எனது மகனை இன்னமும் காணவில்லை. நான் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சகலரிடமும் முறையிட்டுள்ளேன். ஆனால் எனது மகன் தொடர்பான எந்தவொரு தகவலும் இன்னமும் கிடைக்கவில்லை. எனவே என்னுடைய மகனை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள்”

 இதனிடையே, நேற்று (பெப்ரவரி 14) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ள காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் பல பிரதேசங்களிலும் நடைபெறவுள்ளது. எனவே, காணாமற்போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டவர்கள் சாட்சியமளிக்க வருமாறு கோரப்பட்டுள்ளனர்.

 சாட்சியங்கள் வீரகேசரி பத்திரிகையிலிருந்து எடுத்தாளப்பட்டது.

0 Responses to இராணுவம், ஈபிடிபி மற்றும் கருணா குழு மீது காணாமற்போனவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com