Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும், இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம், நில அபகரிப்பை தடுத்து நிறுத்துதல், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலும் இன்று யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், யாழ் முனியப்பர் கோவில் முன்றலில்  தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்பு போராட்டம்  நடத்தப்பட்டிருந்தது. போராட்டத்தினில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மீனவ அமைப்புக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பூந்தளிர் குடும்ப தலைமைத்துவப் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நூற்றிற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு இவ்வார்ப்பாட்டத்திற்கு தாமும் ஆதரவு தருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் கூட்டமைப்பு கட்சிகள் அறிவிப்பினை விடுத்திருந்தன. எனினும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ முக்கியஸ்தர்களோ கலந்து கொண்டிருக்கவில்லை. வடமாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களுள் விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் மற்றும் கஜதீபன் சுகிர்தன் ஆகியோர் மட்டு;ம் பிரச்சனமாகியிருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களினில் சுமார் 232 வரையான உறுப்பினர்கள் உள்ளபோதும் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை பிரதித் தலைவர் சதீஸ் ஆகியோர் மட்டுமே ஆதரவு வழங்கி சமூகமளித்திருந்தனர்.

இடம்பெயர்ந்தவர்களது மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி அம்மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடுப்பதற்காக அரச தரப்பு தனது இராணுவ இயந்திரம் ஊடாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. மக்களது முகாம்கள் தோறும் சென்றிருந்த படையினர் முகாம் தலைவர்கள் மூலம் மீள்குடியேற்றத்தை விரைவினில் நடத்தப்போவதாகவும் இப்போராட்டத்தினில் கலந்து கொண்டால் மீள்குடியமர்வு பட்டியிலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுமென மிரட்டியுள்ளனர்.

இதனால் முகாம்களிலுள்ள மக்கள் எவரும் போராட்டத்திற்கு வருகை தரவில்லை. இதனிடையே இடம்பெயர்ந்த மக்கள் அரசினதும், இராணுவத்தினதும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டமெனவும், அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாது போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் அம்முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லை.

இதனிடையே இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தலைமை தாங்கவும் கொழும்பிலிருந்து வருகை தந்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் மன்னார் முல்லைத்தீவு மீனவ அமைப்புக்களது பிரதிநிதிகள் வருகை தந்த மூன்று பேருந்துகள் படையினரால் வழிமறிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தினுள் அனுமதிக்கப்படவில்லை. இதே போன்று வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் படையினரது கொலை அச்சுறுத்தலையடுத்து யாழ்ப்பாணத்தை விட்டு இரவோடிரவாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஜெனீவா கவனத்தினை ஈர்க்க யாழில் ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com