படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட மகனை தேடிச்சென்ற தந்தையினையும் அடித்துக்கொன்றுள்ளது இலங்கை இராணுவம். தனது கணவனை இராணுவத்தினர் அடித்துக்கொன்றதாகத் துணிச்சலாக யாழ். அரச செயலகத்தில் பெண்மணி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்.அரச செயலகத்தில் இன்று நடைபெற்றிருந்தது. அதில் சாட்சியமளித்த ஐயம்பிள்ளை பூரணம் என்ற தாய் தனது சாட்சியத்தில், மானிப்பாய் பகுதியில் மிதிவண்டி திருத்தும் கடை வைத்திருந்த தன்னுடைய மகன் ஐயம்பிள்ளை நிரூபன் (வயது 20) என்பவரும் அவருடன் நின்றிருந்த இளைஞர்கள் இருவரும் 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி மானிப்பாய் கஜபா முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.
தமது பிள்ளை பிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கேட்பதற்காக மானிப்பாயில் உள்ளா கஜபா முகாமிற்கு சென்ற தன்னுடைய கணவன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இருதய நோயாளியான தனது கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்தப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தனது மகனை இராணுவத்தினர் உடுவில் இராணுவமுகாமிற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தான் தெரிவித்தாக வேறு எவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்றும் அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தமக்கு சாட்சியமளித்ததாகவும் தனது மகனுடன் பிடிக்கப்பட்ட மற்றைய இளைஞர்கள் இருவரும் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
எனினும்; 17 வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்று வரை தனது மகன் பற்றி தகவல்கள் கிடைக்கவில்லையெனவும் அத்தாய் தெரிவித்துள்ளார்.
0 Responses to காணாமல் போன மகனை தேடிச்சென்ற தந்தையினையும் அடித்துக்கொன்றது இராணுவம்!