Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கா வினர் அதை முழுக்க முழுக்க தமது கட்சியின் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். ஆனால், மற்றொரு தரப்பினர் அத்தீர்ப்பை அனைத்திந்திய மற்றும் அனைத்துலக பின்னணிக்குள் வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். மூன்றாவது தரப்பினர் அத்தீர்ப்பை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். இதைச் சிறிது விரிவாக பார்க்கலாம்.

தீர்ப்பை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் நீதிபதி குன்ஹாவின் தனிப்பட்ட ஆழுமையை ஒரு முன்னுதாரணமாக காட்டுகிறார்கள். இந்திய ஜனநாயக மரபும், அதன் நீதி பரிபாலன அமைப்பும் பல பலவீனமான அம்சங்களை தம்முள் கொண்டிருந்த போதிலும் குன்ஹாவைப் போன்ற சில முன்னுதாரணம் மிக்க ஆளுமைகள் காலத்துக்குக் காலம் அந்த அமைப்பின் ஆன்மாவை பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மக்கள் ஆணையைப் பெற்ற பெருந் தலைவர்களையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு சிறு மரபொன்று இந்திய ஜனநாயக பாரம்பரியத்தில் தொடர்ச்சியறாது நிலவி வருவதாக அவர்கள் பெருமைப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். தீர்ப்பை எதிர்ப்பவர்களும் சரி ஆதரிப்பவர்களும் சரி நீதிபதி குன்ஹாவின் நேர்மையை அநேகமாக கேள்விக்குள்ளாக்கவில்லை. அதோடு ஜெயலலிதா சொத்துக்களை குவித்து வைத்துள்ளார் என்பதையும் அநேகமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். குன்ஹா ஒரு கன்னடர் என்பதையும் கிறிஸ்தவர் என்பதையும் அவரை விமர்சிப்பதற்கு பயன்படுத்தும் அ.தி.மு.காவினர் கூட அவரது தனப்பட்ட நேர்மையையும் கண்டிப்பையும் கேள்வி கேட்க முடியாதவர்களாகவே காணப்படுகிறார்கள்.

ஆனால் ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்காக காத்திருக்கும் தி.மு.காவினர் போன்ற அவரது அரசியல் எதிரிகள், சுப்பிரமணிய சுவாமி போன்ற தனிநபர்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் போன்ற தரப்புக்களை பொறுத்த வரை நீதி நிலை நாட்டப்படுகிறதோ இல்லையோ ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் சரி என்பதே ஒரு பொது நிலைப்பாடாக காணப்படுகிறது.

தீர்ப்பை எதிர்ப்பவர்கள் அல்லது கேள்விக்குள்ளாக்கிறவர்கள் பல வகைப்படுவர். முதலாவது அ.தி.மு.காவினர். தனிமனித வழிபாட்டின் மிக அசிங்கமான ஓர் உச்சமாக காணப்படும் கட்சி அது. புரட்சித் தலைவியாக இருந்து அம்மாவாக கூர்ப்படைந்த ஓர் ஆளுமையை சிறைக்குள் வைத்துப் பார்க்க அவர்களால் முடியவில்லை. இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழரும் ஊடகவியாலாளரும் ஆவணப்பட இயக்குனருமான ஒருவர் தனது முகநூல் குறிப்பில் கேட்டிருந்ததைப் போல தமது தலைவிக்காக சட்டம் ஒழுங்கை இவ்வளவு தூரத்திற்கு மீறும் கட்சித் தொண்டர்கள் 2009 மேயில் ஈழத் தமிழர்களுக்காகவும் இதேபோல கிழந்தெழுந்திருந்தால் என்ன நடந்திருந்திருக்கும்?

அ.தி.மு.காவினரின் எதிர்ப்பு அதிக பட்சம் உணர்ச்சிகரமானது, மிகக் குறைந்தளவே அறிவுபூர்வமானது. ஆனால் குன்ஹாவின் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் இரண்டாவது தரப்பினர் முழுக்க முழுக்க அறிவுபூர்வமான சில கேள்விகளை எழுப்புகிறார்கள். அவர்களும் கூட குன்ஹாவின் நேர்மையை கண்டிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அப்படியொரு கண்டிப்பான நீதிபதியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டதின் பின்னால் உள்ள அரசியல் எது என்று கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் குன்ஹா நியமிக்கப்பட்டது காங்கிரஸின் காலத்தில்தான். ஆனால், மோடியின் அரசாங்கம் விரும்பியிருந்தால் குன்ஹாவை மாற்றியிருந்திருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது குன்ஹாவின் தீர்ப்பில் வெளிப்படையாக அரசியல் இருப்பதாக அவர்கள் சொல்ல வரவில்லை. பதிலாக இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கக் கூடிய குன்ஹாவை நியமித்தது ஓர் அரசியல் தீர்மானம்தான் என்பது அவர்களுடைய விளக்கம்.

ஆயின், அத்தகைய ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்தது யார்? உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் காதலியாக காணப்படும் மோடியின் அரசாங்கமும் தான் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெயலலிதா அறிமுகப்படுத்திய 'அம்மா நலத்திட்டங்களான' அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு போன்றவை தனியார் மயமாதலுக்கு எதிரானவை. எனவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரானவை. அதனால் தான் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களும் மோடியின் அரசாங்கமும் இணைந்து ஒரு கண்டிப்பான நீதிபதியிடம் வழக்கை கொடுத்து ஜெயலலிதாவை உள்ளே தள்ளி விட்டதாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இது இரண்டாவது தரப்பு.

மூன்றாவது தரப்பு ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து இத்தீர்ப்பை பார்க்கிறது. தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பெரும்பாலான பத்திரிகைகளில் அதுவே தலைப்புச் செய்தியாக காணப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஈழுத்தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இணையப்பரப்பில் இது தொடர்பில் இருவேறு கருத்து நிலைகைளை காணமுடிகிறது. இதில் பெரும்போக்காக காணப்படுவது தீர்ப்புக்கு எதிரான தரப்பே. மிகச் சிறிய அளவு தமிழ்த் தேசியவாதிகளே தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். தீர்ப்பை எதிர்ப்பவர்கள் அத்தீர்ப்புக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை குறித்து பேசுகிறார்கள்.

தென்னிந்தியாவின் இரும்புப் பெண்ணாக காணப்பட்ட ஒரு தலைவியை, மகத்தான மக்கள் ஆணையை பெற்ற ஒரு தலைவியை இந்திய நீதி பரிபாலன துறை திட்டமிட்டு தெரிவு செய்து சிறைக்குள் முடக்கியிருப்பதாக அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

தீர்ப்பு வழங்கப்பட முன் நீதிமன்றிற்கு வருவதில் தனக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாக ஜெயலலிதாக சுட்டிக்காட்டினார். அதில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு தரப்பினரை ஆத்திரமடையச் செய்தது. எனினும் மே 19க்கு பின்னரான அவரைப் பற்றிய பிம்பத்தில் அது பெருமளவு சேதத்தை ஏற்படுத்தவில்லை.

மே19க்கு பின்னரான ஜெயலலிதா பற்றிய பிம்பம் எனப்படுவது அவருக்கு முன்னெப்போதும் கிடைத்திராத ஒன்று. கூட்டு இழப்பு, கூட்டுக் காயங்கள், கூட்டுத் துக்கம், கூட்டு மனவடுக்கள் என்பவற்றின் பின்னணியில், குற்ற உணர்ச்சி மற்றும் கருணாநிதிக்கும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் எதிரான கோபம், பழிவாங்கும் உணர்ச்சி என்பவற்றின் பின்னணியில், ஜெனிவா அரங்கில் தமிழர்கள் ஒரு தரப்பாக இல்லாத வெற்றிடத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு பிம்பம் அது. இது மே 19க்கு பின்னரான ஈழத்தமிழ் உளவியலுக்கு தெம்பூட்டிய அம்சங்களில் முக்கியமானது. ஆனால், இந்த இடத்தில் ஒரு அடிப்படையான கேள்வியை கேட்க வேண்டும்.

ஜெயலலிதா ஒரு தமிழ்த் தேசியவாதியா?

அவருடைய செயற்பாடுகளும் அரசியல் தீர்மானங்களும் தேசியத்தன்மை மிக்கவையே. ஆனால் அவர் அவற்றை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து மேற்கொண்டாரா அல்லது வாக்கு வேட்டை அரசியல் நோக்கு நிலையிலிருந்து மேற்கொண்டாரா என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட ஒரு பின்னணியில் தமிழ்த் தேசிய உணர்வுகளுக்கு தீவிரமாக தலைமை தாங்குவதன் மூலம் தமிழ் நாட்டில் உள்ள ஏனைய ஈழ ஆதரவு கட்சிகளையும் செயற்பாட்டியக்கங்ளையும் தனது தீவிரத்திற்கு கீழ்ப்பட்டவைகளாக மாற்றுவதே அவருடைய நீண்ட கால நோக்கமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு அரசியலுக்கு செயற்பாட்டியக்கங்கள் தலைமை தாங்குவதை விடவும் சினிமா பாரம்பரியத்தில் இருந்து வந்த இருபெரும் கட்சிகளில் ஏதாவதொன்று தலைமை தாங்குவதையே இந்திய மத்திய அரசும் அதன் புலனாய்வு கட்டமைப்பும் அதிகம் விரும்பின. எனவே ஜெயலலிதாவின் தீவிர தேசிய நிலைப்பாட்டை அவை தமக்கு இடறலாகப் பார்க்கவில்லை.

ஆனால், மத்தியில் தனிப்பெரும் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு பதிலாக கூட்டாட்சி முறைமையை பலப்படுத்தும் விதத்தில் மாநிலக் கட்சிகள் பலமடைவதை காங்கிரசும் பாரதீய ஜனதா கட்சியும் நேரடிச் சவாலாகவே பார்த்தன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.காவின் வெற்றியும் அவர்களுக்கு அச்சமூட்டியது. தமிழ்நாடு ஏற்கனவே பிரிவினை கோரிய ஒரு மாநிலம். அதன் முதலமைச்சர் தனிப்பெரும் பலத்தோடு அதாவது பேரம் பேசும் சக்தியோடு ஓர் இரும்பு மனுஷியாக மேலேழுவதை இந்தியாவின் அதிகாரக் கட்டமைப்பு அச்சுறுத்தலாகவே பார்க்கும்.

எனவே, அவருடைய ஈழ ஆதரவு நிலைப்பாட்டுக்காக அவர் மறைமுகமாக தண்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது ஒரு அரை உண்மை மட்டுமே. அவருக்கெதிராக சுப்பிரமணிய சுவாமி வழக்குத்தொடுத்தார் என்பதும். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை இலங்கை அரசாங்கம் ஆதரிக்கிறது என்பதும் அந்த அரை உண்மையை முழு உண்மையாக்க போதுமானவையல்ல.

தனது வாக்கு வேட்டை அரசியல் இலக்குகளை அடைவதற்காக அவர் எடுத்த தீவிர தேசிய நிலைப்பாடுகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவை. அவர் ஒரு தீவிர தேசியவாதியா இல்லையா என்பதை விடவும் அவருடைய நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்கு அனுகூலமாக காணப்பட்டன என்பது இங்கு முக்கியமானது. எனவே அவர் இல்லாத வெற்றிடம் எனப்படுவது ஈழத் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் பாதகமானதே.

அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் தீர்க்கதரிசனத்தோடு திட்டமிடுவார்களாக இருந்தால் தமிழ்த் தேசிய உணர்வுகளை மேலும் மூண்டெழச் செய்யலாம். ஏனெனில் தமிழ்நாட்டில் உட்கட்சிப் போட்டிகளை வெற்றிகரமாக கடப்பதற்கும் தலைவர்கள் அல்லது முக்கியஸ்தவர்கள் தமது தனிப்பட்ட தவறுகளையும் சறுக்கல்களையும் மேவிச் செல்வதற்கும் மிக இலகுவாக கையாளப்படக் கூடிய ஒரு எரிபொருளாக தமிழ்த் தேசிய உணர்வுகளே காணப்படுகின்றன.

இப்பொழுது ஜெயலலிதாவின் மீது அனுதாப அலை பெருகிவருகிறது. இவ் அனுதாப அலைக்குள் கன்னட எதிர்ப்பின் மூலக்கூறுகளும் தமிழ்த் தேசிய மூலக்கூறுகளும் உண்டு. ஜெயலலிதாவின் வாரிசுகள் இம்மூலக்கூறுகளுக்கு தலைமை தாங்குவதன் மூலம் அ.தி.மு.காவை மேலும் கட்டிறுக்கமான ஒரு கட்சியாக கட்டியெழுப்புவதோடு எதிர்காலத்தில் அதற்கிருக்ககூடிய வெற்றி வாய்ப்புக்களையும் மேலும் பலப்படுத்தலாம். ஆனால், பன்னீர்ச் செல்வத்தின் அமைச்சரவை பதவியேற்ற போது நடந்து கொண்ட விதம் மேற்படி நம்பிக்கையை பலப்படுத்துவதாக அமையவில்லை.

நல்ல தலைவர்கள் தொண்டர்களை உருவாக்குவதில்லை. மாறாக, புதிய தலைவர்களையே உருவாக்குவார்கள் என்று ஒரு ஆங்கில முது மொழி உண்டு. இது ஜெயலலிதாவிற்கு பொருந்துமா? அப்படி அவர் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்களை உருவாக்கியிருந்திருந்தால் இப்போது நிலவும் அனுதாப அலையை மிக இலகுவாக தமிழ் இனமான அலையாக மடை மாற்றம் செய்திருக்கலாம். ஆனால், அது இன்று வரையிலும் நடக்கவில்லை.

இத்தகையதொரு பின்னணியில் தமிழ் நாட்டின் தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகளிலிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் உண்டு. அது என்னவெனில் தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பதும் ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழ் நாடானாது மத்திய அரசாங்கத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் முடிவுகளை எடுப்பதற்கு அங்கே ஐக்கியமான அமைப்பு ஏதும் இல்லை என்பதே. தமிழ் நாட்டின் ஜனவசியம் மிக்க தலைவர்கள் ஈழத் தமிழ் அரசியலை தமது கைளில் எடுப்பதும் பின்னாளில் அவர்கள் சரிவுறும் போது, ஈழத்தமிழ் அரசியலில் திடிரென்று ஒரு வெற்றிடம் அல்லது தேக்கம் ஏற்படுவதும் இது தான் முதற்தடவையல்ல. ஜெயலலிதாவின் அரசியல் முன்னோடியான எம்.ஜி.ஆர் இன் காலத்திலும் இது நடந்தது. எம்.ஜி.ஆர் அளவிற்கு ஈழத் தமிழ் அரசியலில் நேரடியாக பங்கெடுத்த தமிழக தலைவர்கள் மிகச் சிலரே உண்டு. எம்.ஜி.ஆருக்கும் புலிகள் இயக்கத் தலைமைக்கும் இடையிலான உறவு எனப்படுவது கேள்விக்கிடமற்ற ஒரு நட்பாக இருந்தது. ஆனால் இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்தான போது நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆரால் புலிகள் இயக்கத்திற்கு உதவமுடியாமது போயிற்று.

உடன்படிக்கை கைச்சாத்தான காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு பொதுக் கூட்டத்தில் ரஜீவ் காந்தியும் எம்.ஜீ.ஆர் உம் ஒன்றாக தோன்றினர். நோயினால் துவண்டு போயிருந்த எம்.ஜி.ஆரை ரஜீவ் காந்தி கைத்தாங்கலாக அழைத்து வந்தார். உடன்படிக்கைக்கு எம்.ஜி.ஆர் சம்மதம் தெரிவிப்பதாக கூறி, சோர்ந்து விழுந்த எம்.ஜி.ஆரின் கையை ரஜீவ் காந்தியே உயர்த்திப் பிடித்து தனது கையோடு சேர்த்து அசைத்ததை இங்கு நினைவுகூர வேண்டும்.

எனவே சக்தி மிக்க தலைவர்களால் கையாளப்படுவதற்கு பதிலாக ஒரு குழு அல்லது ஒரு அமைப்பானது அதை கையாள்வதே ஒப்பீட்டளவில் அதிகம் நிச்சயத்தன்மை மிக்கதாகும். அதாவது ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழகத்தை கையாள்வதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அதில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அனைத்து செயற்பாட்டியக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும், புத்தி ஜீவிகளும், ஊடகவியலாளர்களும், இணைக்கப்பட வேண்டும்.

அப்படியொரு குழு தான் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தமிழ் நாட்டின் அரசியலை கையாள வேண்டும். அப்பொழுது தான் ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழ் நாடானது இந்திய மத்திய அரசாங்கத்தை எப்படிக் கையாள வேண்டும் என்ற கேள்விக்குரிய பயன்பொருத்தமான விடையும் கிடைக்கும்!

(தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றுள்ள நிலையில், தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவுத் தளத்தை எவ்வாறு கட்டிக் காப்பாற்றுவது என்பது பற்றி பத்தியாளர் நிலாந்தனின் தினக்குரலுக்கான இந்தக் கட்டுரை பேசுகின்றது. கட்டுரையின் இணைய வடிவம் குளோபல் தமிழ் செய்திகள் தளத்திலிருந்து எடுத்தாளப்படுகின்றது. உள்ளடக்கங்களுக்கு கட்டுரையாசிரியரே பொறுப்புக்குரியவர்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

0 Responses to ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பும், ஈழத் தமிழர்களும்! - நிலாந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com