இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முள்வேலி முகாம்களில் இருந்து இலங்கை தமிழ் மக்களை மீட்டெடுக்க கன்னியாகுமரி, நீலகிரி, இராமேஸ்வரம், சென்னை ஆகிய 4 இடங்களில் இருந்து திருச்சிக்கு தனித்தனியாக விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் இன்று புறப்படவிருக்கின்றது.
நீலகிரியிலிருந்து பழ.நெடுமாறன் தலைமையிலும், இராமேஸ்வரத்தில் இருந்து வை.கோ தலைமையிலும், சென்னையிலிருந்து மருத்துவர் இராமதாஸ் தலைமையிலும், கன்னியாகுமரியில் இருந்து தா.பாண்டியன் தலைமையிலும், தனித்தனியாக இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் புறப்பட்டு செல்கிறது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை 10 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் தொடக்க விழாவுக்கு குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.சந்திர பாபு தலைமை தாங்குகிறார். மாவட்ட பா.ம.க. செயலாளர் எஸ்.சுரேஷ், எம்.பி.ரவி, ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் இந்த பிரசார பயணம் புறப்பட்டு செல்கிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இந்தபிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த பிரசார பயணம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கொட்டா ரம், சுசீந்திரம், நாகர் கோவில், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், தேவதான பட்டி, வத்தலகுண்டு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சியை சென்றடைகிறது. அங்கு நிறைவு நிகழ்ச்சியாக பேரணியும், பொதுக் கூட்டமும் நடக்கிறது.
ஈழப்பிரச்சார பயணம்: வை.கோ, நெடுமாறன், இராமதாஸ், தா.பா. பங்கேற்பு
பதிந்தவர்:
தம்பியன்
27 October 2009



0 Responses to ஈழப்பிரச்சார பயணம்: வை.கோ, நெடுமாறன், இராமதாஸ், தா.பா. பங்கேற்பு