Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்நாட்டுப் போர் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ள இலங்கை, தமிழர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் மந்தை மந்தையாக சுற்றித் திரிகின்றன.

இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால், அகதிகளாக சென்ற தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேறி வருகின்றனர். காடுகளாக மாறியுள்ள விளைநிலங்களை பண்படுத்தி மீண்டும் சாகுபடியில் சில இடங்களில் ஈடுபட்டுள்ளனர். போர் நடந்த போது, கிராமங்களை விட்டு ஓடியவர்கள், தங்கள் ஆடு, மாடுகளையும் அப்படியே விட்டுச் சென்றனர். குண்டுகளில் மடிந்து போன கால்நடைகள் ஏராளம். குண்டு சத்தத்துக்கு மிரண்டு ஓடிய ஆடு, மாடுகள், மேய்ச்சல் நிலங்களைத் தேடித்திரிந்தன. மந்தையாக மாறிய மாடுகள் காடுகளில் சுற்றி அலைந்தன. கட்டுப்படுத்த யாருமே இல்லாததால், அவை தங்கள் குணங்களை இழந்து, காட்டு விலங்குகளாக மாறிவிட்டன. மனம் போன போக்கில் இணை சேர்ந்து கன்றுகளை ஈன்றன. பல ஆண்டுகளாக சுற்றித்திரிந்ததால் மாடுகள் பெருகி, பெரும் மந்தையாக சேர்ந்துவிட்டன.

இப்போது, இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் பல நூறு மாடுகள் சேர்ந்த மந்தைகளைக் காணமுடிகிறது. இவை மனம் போன போக்கில் சுற்றி வருகின்றன. மட்டக்களப்பு, திருகோணமலையைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களிலும், காடுகளிலும் மந்தை மாடுகளைக் காணமுடிந்தது. மேய்ச்சல் நிலங்களைத் தேடி அவை அலைந்து கொண்டிருந்தன.கடைசிக் கட்டமாக போர்நடந்த, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் மாட்டுமந்தைகளைக் காணமுடிந்தது. மாட்டு மந்தைகளால் புதிதாக குடியேறியுள்ளவர்களுக்கு புதிய பிரச்னையும் எழுந்துள்ளது.

பல நூறு மாடுகள் சேர்ந்து மந்தையாக மேய்ச்சல் நிலங்களைத் தேடி அலைவதால், நிலத்தை பண்படுத்தி புதிதாக செய்யப்பட்ட பயிர்களையும் அவை விட்டு வைப்பதில்லை. மொத்தமாக புகுந்து மேய்ந்து விடுவதால், மறு குடியேற்ற பகுதிகளில் விவசாயம் செய்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மந்தை மாடுகளை கட்டுப்படுத்த சிரமப்படுகின்றனர். வீட்டு விலங்காக இருந்த மாடுகள், மந்தையாகி காடுகளில் பழக்கப்பட்டு விட்டதால், அவற்றை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

விவசாயிகள் கூட்டாக சேர்ந்து,மந்தையில் மிரளாத மாடுகளை மடக்கிப் பிடிக் கின்றனர். அவற்றை கயிற்றில் பிணைத்து விவசாய வேலைகளுக்கு மீண்டும் பழக்குகின்றனர். காளைகளை ஜோடி சேர்த்து உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். மந்தையில் மாடுகளைப் பிடிப்பதால், குடியிருப்பு வாசிகளிடையே சிறு பூசல்களும் ஏற்படுகிறது. மாடுகளைத் திருடுவதாக இந்த பூசல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, பிடித்த மாடுகளின் முதுகில் இன்சியல் போடுவதும் நடைமுறையில் உள்ளது. மந்தையில் பிடிக்கும் மாடுகளை, தங்களுக்கு சொந்தம் கொண்டாட, பழுக்கக் காய்ச்சிய கம்பியால் மாட்டின் முதுகில், தங்கள் இன்சியலை எழுதி உடமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இது குறித்து மூதூர் அடுத்த புன்னையடி கிராமத்தைச் சேர்ந்த திருஞான மூர்த்தி கூறியதாவது:ஊரை காலி செய்து விட்டு அகதியாக சென்று விட்டதால், ஆடு, மாடுகள் கண்டபடி சுற்றி அலைந்து வந்தன. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், ஆட்களைக் கண்டால் அவை மிரண்டு ஓடுகின்றன. நூற்றுக் கணக்கில் வந்து சாகுபடி நிலங்களில் பயிர்களில் சாய்ந்து, மேய்ந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. கூட்டு சேர்ந்து இந்த மாடுகளை பிடித்து வீட்டில் வைத்து மீண்டும், விவசாயத்துக்கு பழக்கி வருகிறோம். இவ்வாறு பிடிபடும் மாடுகளாலும் பிரச்னை வருகிறது. மாடுகளைத் திருடி விட்டதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். இந்த பிரச்னையை சமாளிக்க, மாடுகளுக்கு அடையாளம் போட்டு உடமையாக்கிக்கொள்கிறோம். அப்படியும் பல பிரச்னைகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆடுகளும் ஏராளம் இங்கு உண்டு. பலவற்றை ராணுவ வீரர்கள் சாப்பிட்டுவிட்டனர். ஆடுகளும் கூட்டம் கூட்டமாக காடுகளில் அலைந்து வருகின்றன. அவற்றையும் பிடித்து, வீடுகளில் பழக்கி வருறோம்.இவ்வாறு திருஞான மூர்த்தி கூறினார்.

0 Responses to மந்தையாக சாயும் மாடுகள் இலங்கைத் தமிழர் பகுதிகளில் புதிய பிரச்னை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com