தமிழீழ விடுதலைப் போரில் களப்பலியான மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் யாழ். நல்லூரில் எழுச்சியாக நடந்தேறியது. நேற்று 23-01-2010 பிற்பகல் 4மணிக்கு நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் பொதுக்கூட்டம் ஆரம்பமாகியது. நிகழ்விற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்விற்காக யாழ்.குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளில் வருகை தந்திருந்தனர். நிகழ்விற்கு மக்களை ஏற்றிக் கொண்டிருந்த இருபதற்கு மேற்பட்ட பேருந்துகள் ஈபிடிபியினரால் மிரட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். அதேபோன்று அதே கட்சியினுடைய வெள்ளை வான் ஒன்று கூட்டத்திற்கு வந்திருந்தோரையும் வருவோரை அச்சுறுத்தவுமென அப்பகுதிகளில் தீவிரமாக பயணித்தது. அதில் இருந்த அனைவரும் தமது கைகளில் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்தனர். ஆனாலும் மக்கள் நிகழ்வில் ஆயிரக்கணக்கில் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் முதலில் உரை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறில் தனது உரையில் இலங்கையின் அரசியலைப் பொறுத்த வரையில் இலங்கை அரசியல் தலைமைகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக தமிழ் மக்களே இருந்து வந்திருக்கின்றனர். இந்தத் தேர்தல் கூட நான்கு ஆண்டு காலமாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை மேற்கொண்டு வந்த ஒரு கொரூரமான அரசிற்கு எதிரான தீர்ப்பினை எழுதுவதற்காக அதே அரசினாலேயே தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை நாம் எதிர்கொண்டு எங்கள் பலத்தினை சர்வதேசத்தின் மத்தியில் மீண்டும் நிலை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இமாம் உரை நிகழ்த்தும் போது.
போரில் வெற்றி பெற்றதாக பாரிய வெற்றி விழாக்களை வெற்றி கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த ஆட்சிக் காலம் தொடர்பில் ஸ்ரீலங்காவின் புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் காணப்படுகின்ற மக்கள் ஆதரவானது எதிர்வரும் காலங்களில் குறைந்து செல்லக்கூடிய வாய்ப்பு நிலை உள்ளது. எனவே தற்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலமே வெற்றிபெற முடியுமென அவர்கள் வழங்கிய அறிக்கைக்கு அமைவாக தேர்தலில் போட்டியிடுவதென அவர் முடிவெடுத்தார். தான் போட்டியிட்டால் எதிரணியில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் அவரை இலகுவில் வெற்றிபெறமுடியும் என அவர் எண்ணி தேர்தலையும் அறிவித்தார். ஆனால் அவர் எதிர்பார்க்காத வகையில் சரத்பொன்சேகா அவரது தளபதியே அவருக்கு எதிராக போட்டியில் ஈடுபட்டுள்ளது. மகிந்தவிற்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன அழிப்பினை மேற்கொண்ட மகிந்த ஆட்சிபீடத்திற்கான மாற்றத்தினைக் கொண்டுவரும் என தெரிவித்தார்.
நிகழ்விற்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தனதுரையில்
ஆட்சி மாற்றம் என்பது மட்டுமல்ல எமது மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான இடையூறானவர்களை இனங்கண்டு அவர்களையும் அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றவேண்டிய தேவை. மகிந்தராஜபக்சவின் தமிழின விரோத ஆட்சியின் கீழ் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு – கிழக்கு துண்டாடப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான சுனாமிக் கட்டமைப்பு இல்லாது ஒழிக்கப்பட்டது. இனப்பிரச்சினைத் தீர்வுக்காக மகிந்தராஜபக்சவால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த தீர்வுத்திட்ட அறிக்கை மகிந்த ராஜபக்சவாலேயே கிழித்தெறியப்பட்டது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக மகிந்த ராஜபக்ச உருவாக்கிய இன்னொரு குழுவான சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அளித்த தீர்வுத்திட்ட அறிக்கையும் அவராலேயே குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. திருகோணமலை, மட்டக்களப்பு, அப்பாறை மாவட்டங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களைக் குடியேற்றி சிங்களமயமாக்கல் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ மயமாக்கலும் அதைத் தொடர்ந்து சிங்களமயமாக்கலுக்குமான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பல ஆயிரம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயினர். இன்னும் பல ஆயிரம் இளைஞர்கள் சுடப்பட்டு வீதிகளில் வீசப்பட்டனர். இதன் மூலம் தமிழ் மக்களின் இன விருத்திச் சந்ததியொன்று திட்டமிட்டு நிர்மூலமாக்கப்பட்டது.
தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஒலித்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாகத் தலைவிரித்தாடின. மனிதாபிமான மீட்புப்பணி என்ற பெயரில் வன்னியில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அங்கிருந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முட்கம்பிவேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள் குடியேற்றப்பட்டதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. அவர்களில் ஒருவர் கூட சரியான முறையில் குடியமர்த்தப்படவில்லை. இந்நிலையில் எவ்வாறு மகிந்தவிற்கு தமிழ் மக்களால் ஆதரவளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சுரேஸ் பிரேமச்சந்திரன். கூட்டமைப்பு சரத்பொன்சேகா மீது கொண்ட காதலால் ஆதரவளிக்க முன்வரவில்லை என்றும் ஆட்சி மாற்றத்தின் மூலமே அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்லான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.
தமிழ்மக்களின் வாக்குகளை சிதைப்பதற்காக பணத்தினையும், காசோலைகளையும் வழங்கலாம். இவை வழங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் காலத்தில் வழங்கப்படுவது வழக்கம். ஆனாலும் எமது மக்கள் ஒவ்வொருவரும் வன்னியில் சிந்திய இரத்தமும் உயிர் விலைகளும் எம் மனங்களில் இருந்து என்றும் அழிந்துவிடப்போவதில்லை. காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வாக்குறுதிகள் இம் முறையும் வழங்கப்படுகின்றன. இந்தத் தேர்தல் மூலம் சரியான பலத்தினை தமிழ் பேசும் மக்கள் வெளிப்படுத்துவர். ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வினை மேற்கொள்ள முடியும் என தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் உரை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா
தமிழ்மக்களின் வாக்குகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. மகிந்தராஜபக்ச தென்னிலங்கையில் இனவாதத்தைக் கக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு இனவாத வாக்குகளை பெற்றுக் கொள்ள கடும் பிரயத்தனப்படுகின்றார். பொன்சேகாவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு பிளவு படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். ஆனால் அவரது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.குடாநாட்டில் இருந்து பொன்சேகா தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வுகளையும் தரப்போவதில்லை எனத் தெரிவிக்கின்றார். இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களை ஒரே கட்சிகள் தெரிவிப்பதுதான் வேடிக்கையானது எனத் தெரிவித்த மாவை சேனாதிராஜா தமிழ்மக்களுக்குத் தீர்வு பெறக் கூடிய ஒப்பந்தம் ஒன்றில் தமது கட்சி கையெழுத்திட்டிருந்தால் அதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வியெழுப்பினார்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய இரா. சம்பந்தன்
தமிழ் மக்கள் பலவிதமான துன்பதுயரங்களை எதிர்கொண்டு நொந்துபோயுள்ளனர். எனினும் அவர்கள் தமது மனதில் தைரியத்துடன் உள்ளார்கள்.
இந்தச் சூழலில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் அவசியமில்லை. இது நடைபெறவேண்டியது 2011 நவம்பரில். ஜனாதிபதி விரும்பினால் தனது பதவிக் காலத்தில் 4 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த பின்னர் பிரகடனம் ஒன்றின் மூலம் மீண்டும் மக்களிடம் ஆணையைக் கேட்கமுடியும். அதைத்தான் இன்று மகிந்தராஜபக்ச கேட்கிறார். நான் மக்களுக்கு நல்லராட்சி புரிந்துள்ளேன். மீண்டும் எனக்கு ஆணை தாருங்கள் என்று அவர் கேட்கிறார். இதனை நாம் நுணுக்கமாக ஆராய்ந்துள்ளோம். அவருடைய நான்கு வருட ஆட்சியை நாம் நல்லாட்சியெனக் கொள்ள முடியாது. இந்த ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பு இவரது ஆட்சிக் காலத்தில் துண்டிக்கப்பட்டது. எம்மைப் பொறுத்தவரை நாம் பின் தங்கியுள்ளோம். சர்வகட்சி மாநாட்டைக் கூட்டினார். அதில் எதுவித முன்னேற்றமும் இல்லை. அதற்கு நாம் அழைக்கப்படவில்லை.
இவரது ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் பல இடங்கிளல் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படுகின்றன. மகிந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு வருகின்றார்.
தற்போது கிழக்கையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார். விரைவில் வடக்கையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல தடவைகள் அவருடன் பேசினோம். உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுமாறு கோரினோம். அதைத் தேர்தலின் பின் பார்ப்போம் என்றார். இராணுவ மயமாக்கலைக் குறைக்குமாறு கேட்டோம். அதற்கு அவர் பாதுகாப்புத் தான் முக்கியம் என்றார். துணை இராணுவக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிட வேண்டும் என்றோம் அதனைச் செய்வோம் என்றார். நாம் கேட்ட அனைத்துக்கும் அவரது பதில் பார்ப்போம் என்றே அமைந்தது.
பொன்சேகாவுடன் பேசினோம். எமது கோரிக்கைகளை ஏற்றுச் செயற்பட அவர் சம்மதம் தெரிவித்தார். எனினும் நாம் யாரையும் நம்பவில்லை. ஆனால் ஆட்சிமாற்றம் ஒன்று தேவை என்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. தூர நோக்குடன் சிந்தித்த பின்னரே நாம் பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்தோம். எமது இந்த முடிவை தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் பொறுப்பு வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் கைகளில் தான் உள்ளது. நாம் பல சந்தர்ப்பங்களை இழந்திருக்கின்றோம். எனவே, இது நல்லதோர் சந்தர்ப்பம் இதனைச் சரியாகப் பயன்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.
நாம் முஸ்லீம் காங்கிரசுடன் நடத்திய பேச்சுகள் மிகப் பெரிய முன்னேற்ற நிலையினை எட்டியுள்ளன. இந்தியத் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோரும் தமிழ், முஸ்லிம் உறவைத் தான் வலியுறுத்துகின்றார்கள். இன்று அந்த நிலைமை கை கூடிவருகின்றது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து ஒரு தீர்வை எட்டவேண்டும் என்ற கருத்து இப்போது வலுப்பெற்றுள்ளது. அதனை விட்டுக்கொடுப்புடன் செய்வதற்கு நாம் முன்வந்துள்ளோம். முஸ்லிம்களும் இதற்கு முன்வந்துள்ளார்கள். என்று தெரிவித்த இரா.சம்பந்தன் அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு ஒன்று வியன்னாவில் நடைபெற்றது. அதில் நானும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கலந்துகொண்டோம். எமக்கு பல வழிகளிலும் உதவுவதற்கு புலம்பெயர்ந்த மக்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தயாராக உள்ளனர். எனவே எல்லாவற்றுக்கும் முதலில் ஆட்சி மாற்றமே எமக்குத் தேவை என்று தெரிவித்த இரா சம்பந்தன்
புலம்பெயர்ந்தவர்களில் சிலர் விக்கிரமபாகு கருணாரட்ணவை ஆதரிக்க வேண்டும் என்று கோருகின்றனர். விக்கிரமபாகு ஒரு நல்ல மனிதர். எனினும் அவரை ஆதரிப்பதால் எமக்கு எதுவித பலனும் இல்லை. மக்களின் பிரதிநிதிகளாக இங்கு நாம் உள்ளோம். இந்த வேளையில் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டிய பொறுப்பு எமக்கே உள்ளது. நாட்டுக்கு வெளியே இருந்துகொண்டு சிலர் இந்த நேரத்தில் விடும் அறிக்கைகள் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கவலையுடன் கூறுகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வியன்னாவில் இடம்பெற்ற சர்வதேச புலம்பெயர் தமிழர்களின் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டின் பின்னரே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கான ஆதரவு தொடர்பிலான அறிவிப்பினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to எழுச்சியுடன் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் கொள்கை விளக்க கூட்டம்