Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசதலைவர் மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்வதற்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா திட்டமிட்டிருந்தார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. பொன்சேகாவின் இந்த திட்டத்துக்கு முன்னாள் இராணுவத்தினர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் ஊடக பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இரண்டு ஹோட்டல்களிலிருந்து இந்த படுகோலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் மகிந்த குடும்பத்தினரை கொழும்பில் காலி வீதியில் வைத்து அல்லது புறக்கோட்டையில் ஏரிக்கரை சந்தியில் வைத்து இந்த படுகொலையை மேற்கொள்வதற்கு பொன்சேகாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முதல்நாளும் தேர்தல் அன்றும் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கியிருந்த சரத் பொன்சேகா இந்த திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தார் என்றும் அவருக்கு அங்கு பாதுகாப்பளிப்பது என்ற போர்வையில் அவருடனிருந்த முன்னாள் இராணுவத்தினர் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களை விசாரணை செய்ததில் இந்த தகவல்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்த சதி திட்டம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

நேற்று பொன்சேகா உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கியிருந்த சமயம், ஹோட்டலை சுற்றிவளைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் எவரையும் ஹோட்டலிலிருந்து வெளியே வர அனுமதிக்கவில்லை. அப்போது, ஹோட்டலில் வைத்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த பொன்சேகா -

தன்னை கொலை செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அதனை எதிர்த்து தான் போராடப்போவதாகவும் கூறியிருந்தார். பொன்சேகாவின் இந்த பேச்சை சுட்டிக்காட்டிய லக்ஷ்மன் குலுகல்ல, தேர்தலை அடுத்து பொன்சேகா கொழும்பில் பாரிய படுகொலை முயற்சிக்கு திட்டமிட்டிருந்தமைக்கு இது ஒரு சரியான ஆதாரம் என்றும் இதனை விட பொன்சேகாவின் திட்டம் குறித்த ஆதாரங்கள் அரசிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க -

நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடவிருந்தவர்கள் மற்றும் அதற்கு உடந்தையானவர்கள் பலர் தேர்தலை அடுத்து நாட்டை விட்டு தப்பியோடும் சாத்தியங்கள் இருப்பதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பலப்படுத்து அங்கு வரும் அரசியல் பிரமுகர்கள் தொடர்பாக கண்காணிப்பை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட குழு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to மகிந்த குடும்பத்தினரை படுகொலை செய்வதற்கு பொன்சேகா திட்டமிட்டிருந்தார்: பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com