தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகும். மகிந்தவை விட மோசமானவராக பொன்சேகா இருக்க முடியாது என பலர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தனது பத்தியில் இன்று (23) தெரிவித்துள்ளது.
அதன் தமிழ் வடிவம் வருமாறு:
நேற்று (22) அதிகாலை விடியும் போது கொழும்பில் உள்ள ரிரான் அலஸ் (49) இன் இல்லத்தின் முன்பாக சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. சிறீலங்காவின் வரலாற்றில் மிக மோசமான தேர்தலின் அடையாளம் அதுவாகும்.
வீட்டின் பின்புறம் இருந்த படுக்கை அறையில் இருந்து அவர் வந்துகொண்டிருந்த சமயம் வீட்டின் முன்புறம் குணவெடிப்பில் தீப்பற்றிக் கொண்டது. அவரின் ரெயாட்டா சலூன் காரும் அழிந்து போனது. இந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அலஸ் எம்மிடம் தெரிவித்தார். அப்போது காவல்துறையினர் சேதமைடைந்த பகுதிகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
தேர்தலுக்கு முன்னர் இதனை போல மேலும் பல வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறலாம். விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட முன்னர் சிங்கள தொழிலதிபர் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதலின் பின்னனியில் விடுதலைப்புலிகள் இருப்பதாகவே பலர் சந்தேகப்படுவதுண்டு. ஆனால் தற்போது அவர்களின் கை அசைவுகள் வேறு பக்கம் திரும்பியுள்ளன.
பொன்சேகாவின் தீவிர ஆதரவாளராக அலஸ் செயற்பட்டு வருகிறார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை வழிநடத்திய ஜெனரல் பொன்சேகா தற்போது மகிந்தவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகிறார்.
அலஸ் இன் இல்லத்தின் மீது நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு அரசே காரணம் என பொன்சேகா நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார். அரசு அச்சமடைந்துள்ளதையே இது காட்டுவதாகவும், நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பதை இந்த சம்பவம் நியாயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை மகிந்த தரப்பு மறுத்துள்ளது. குண்டுத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. தேர்தல் வன்முறைகள் நாடு முழுவதும் தீவிரமாக பரவலாம் என்ற அச்சத்தை இந்த குண்டுத்தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் 773 தேர்தல் வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலின் போது 125 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
தற்போதைய வன்முறைகள் மிக அதிகம் என சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடவடிக்கைக்கான அமைப்பின் அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாம் இவ்வாறான தேர்தல் வன்முறைகளை சந்திக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைகளுக்கான அதிகாரி பரோனீஸ் அஸ்ரன் ஆகியோர் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
தனது கோரிக்கைகள் தொடர்ச்சியாக மீறப்படுவதால், காவல்துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசு தோற்கடித்தது மகிந்தவின் செல்வாக்கை தென்னிலங்கையில் அதிகரித்ததாகவும், அதனால் தான் தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக மகிந்த விரைவான தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் போரை வழிநடத்திய ஜெனரல் பொன்சேகாவை அவர் கௌரவிக்க மறந்துவிட்டார், அவரை அதிகாரமற்ற பதவிக்கு மாற்றியது பொன்சேகாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.
தனது பதவியை துறந்த ஜெனரல் கடந்த மாதம் தேர்தல் வேட்பாளராக தன்னை அறிவித்திருந்தார். அவரை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆதரிக்கின்றன. மகிந்தாவிற்கு இணையான வேட்பாளர்கள் தம்மிடம் இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. எனவே தான் மகிந்தாவிற்கு இணையான போர் வெற்றியை பெற்ற பொன்சேகாவை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பை சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கும் சிங்கள மக்களிடம் செல்வாக்கு உண்டு. ஆனால் மகிந்த மற்றும் பொன்சேகா ஆகியோர் போர் குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன. எனினும் பொன்சேகாவின் பிரவேசம் சிங்கள மக்களின் வாக்குகளை பிரிவடையச் செய்துள்ளது. எனவே தான் தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களின் தலைவிதியை தீர்மானிப்பவையாக மாற்றமடைந்துள்ளன.
சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்யுமாறு அரசு உத்தரவிட்டதாக பொன்சேகா தெரிவித்துள்ளார். தடுப்பு முகாம்களில் அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 300,000 மக்களையும் விடுவிப்பதற்கு அரசுக்கு ஆர்வமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள மகிந்த தமிழ் பிரதேசங்களுக்கும் அவசர விஜயங்களை மேற்கொண்டிருந்தார். நாட்டை அபிவிருத்தி செய்ய கட்சிபேதங்களை மறந்து அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என மகிந்த இந்த வாரம் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
அவருக்கு சிங்கள கிராமப்புறங்களில் ஆதரவுகள் உள்ளபோதும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் மகிந்த தோல்வியடைந்துள்ளார். விடுதலைப்புலிகளுடன் நெருக்கிய தொடர்புகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பொன்சேகா பெற்றுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகும்.
மகிந்தவை விட மோசமானவராக பொன்சேகா இருக்க முடியாது என பலர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to மகிந்தவை விட மோசமானவராக பொன்சேகா இருக்க முடியாது: த ரைம்ஸ்