அரசதலைவர் மகிந்தவை படுகொலை செய்வதற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வகுத்த திட்டம் அரசு தரப்புக்கு தெரியவந்ததை அடுத்து, விடயத்தை வெளியில் தெரியாமல் மறைக்கும் நோக்கத்துடனேயே அவர் அரசுப்பக்கம் தாவினார் என்று பொன்சேகாவின் பேச்சாளர் மங்கள சமரவீர தகவல் வெளியிட்டுள்ளார்.பொன்சேகாவின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கட்சி தாவுவதற்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து அரசதலைவர் மகிந்தவை படுகொலை செய்வதற்கு ஜோன்ஸ்டன் உதவிகள் மேற்கொண்டுள்ளமை தற்போது தெரியவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் உறுப்பினர்களான சிவராஜா சுபகிருஷ்ணன், தவராஜசிங்கம் சுபாஷ், லின்டன் சந்திரேசன் ஆகியோர் தடுப்புக்காவலில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர் என்றும் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 7 ஆம் திகதிக்கும் இடையில் சுபாஷிற்கு ஜோன்ஸ்டன் 45 அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார் என்றும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் மே 8 ஆம் திகதி வரையில் ஜோன்ஸ்டனுக்கு சுபாஷ் 60 அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார் என்றும் இருவருக்கும் இடையில் 24 குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன என்றும் இருவரது கைத்தொலைபேசி இலக்கங்களையும் குறிப்பிட்ட மங்கள சமரவீர -
இந்த தொலைபேசி அழைப்புக்களின்போது எவ்வளவு நேரம் உரையாடல் இடம்பெற்றது என்பது குறித்தும் ஜோன்ஸ்டன் எங்கிருந்து பேசினார் என்பது குறித்தும் சகல தகவல்களும் தம்மிடம் உள்ளதாகவும் கூறினார்.
இந்த உரையாடல்களின்போது மகிந்தவை கொலை செய்வதற்கான திட்டம் பற்றி விரிவாக பேசப்பட்டபோதும் ஈற்றில் அது நிறைவேறாமல் போய்விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.



0 Responses to விடுதலைப்புலிகளுடன் இணைந்து மகிந்தவை படுகொலை செய்ய ஜோன்ஸ்டன் திட்டமிட்டார்: மங்கள தகவல்