சிறிலங்காவின் 62 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் மீதும் அவற்றின் ஆதரவாளர்களின் மீதும் அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராக இந்த புறக்கணிப்பை தாம் மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கட்சி மட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட இந்த முடிவினை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளனர்.
கட்சியின் முடிவு குறித்து பேச்சாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில் - "இந்த நாட்டில் எங்கு சுதந்திரம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பெர்து வேட்பாளர் சரத் பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும் அரச அடக்குமுறையினால் அனுபவிக்கும் துன்பத்தை பாருங்கள். எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறும் கொடுமைகளை பாருங்கள். மக்கள் படும் துயரத்தை பாருங்கள். எங்கே இருக்கிறது சுதந்திரம்?
நாடு இவ்வாறான கொடுமைக்கும் கொடூரத்துக்கும் முகம் கொடுத்துவருகின்ற வேளையில் அரசு அறிவித்துள்ள சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் அர்த்தமில்லை. அதனால், இம்முறை சுதந்திரதின நிகழ்வுகளை புறக்கணிப்பதாக நாம் முடிவெடுத்துள்ளோம்" - என்று கூறினார்.



0 Responses to சிறிலங்காவின் 62 ஆவது சுதந்திர தினத்தை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு!