Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"சிறிலங்கா மீது எவரும் விசாரணை நடத்த முடியாது. அப்படி ஒன்றைப் பேசிக்கொண்டு என்னிடம் யாரும் வரக் கூடாது. நான் இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலர். நான் தீர்மானமாகச் சொல்கின்றேன். விசாரணைகள் எதுவும் நடைபெறாது’" - என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லண்டன் பி.பி.சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய முழுமையான செவ்வி வருமாறு:-

அரசதலைவர் தேர்தலில் தமிழ் - முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவை விட சரத் பொன்சேகாவே அதிக வாக்குகள் பெற்றார். இதனை அரசு சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையைப் பெற தவறி விட்டது எனப் பொருள் கொள்ளலாமா?

"இந்த அரசாங்கத்தின் மீது நாட்டின் சிறுபான்மை இன மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதாக நான் இதனைப் பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களின் - குறிப்பாக தமிழ் மக்களின் - அரசியல் தலைமைகளைத் தங்கள் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதாகத்தான் நான் இதனைப் பார்க்கின்றேன். சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் உருவாக்கி இருக்கின்ற விதமே பிழையானது எனத்தான் நான் நினைக்கின்றேன். இனத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கின்ற அரசியல் கட்சிகள் இங்கு பல இருக்கின்றன.

"முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றெல்லாம் அடிப்படையில் அரசியல் கட்சிகளும், கூட்டமைப்புக்களும் இருப்பது சரியல்ல. இதெல்லாம் அந்தந்தக் கட்சிகளின் தலைவர்களுக்குத்தான் நன்மை சேர்க்குமே தவிர மக்கள் விரும்புவது இவ்வகையான அரசியலை அல்ல."

ஆனால் இலங்கை என்பது பல்வேறு இன மக்களும் வாழ்கின்ற நாடுதானே?

"அதனால்தான் சொல்கின்றேன். இந்த நாட்டினுடைய மக்கள் தமது இனத்தின் அடிப்படையில் பிளவுபட்டிருக்கக் கூடாது. அரசியல் கட்சிகளுடைய கொள்கைகளின் அடிப்படையில்தான் மக்களிடையே கருத்துப் பிளவுகள் இருக்கவேண்டும். இனத்தின் அடிப்படையில் மக்கள் பிரிந்திருக்கும் நேரத்தில் அவரவர்களது இனம் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமே அரசியலில் முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி வேறு பல முக்கிய பிரச்சினைகள் மக்களுக்கு இருக்கின்றன."

நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தேர்தலுக்குப்பின் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் தம்மைக் கைது செய்ய முற்படுவதாக நேரடியாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அரசாங்கம் ஒரு கொலை வெறியுடன் நடப்பதாகவும் தனது பாதுகாப்புக்கு அச்சம் நிலவுவதாகவும் தெரிவித்தார். உங்கள் முன்னாள் இராணுவத் தளபதியை நீங்கள் இப்படியா நடத்துவது?

"எங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி. எங்கள் நாட்டில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகள் பலர் இருக்கின்றார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போரிட்டு ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகள், இராணுவ அதிகாரிகள் என்று நிறையப் பேர் இருக்கவே செய்கின்றார்கள்.விடுதலைப்புலிகள் அமைப்பு செயலாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் கூட ஓய்வு பெற்ற படையினருக்கு நாம் விசேட பாதுகாப்பு ஏதும் வழங்கியிருக்கவில்லை.

"ஆனால் நாட்டின் தற்போது சமாதானம் நிலவுகின்றது. விடுதலைப்புலிகளும் இல்லை. அப்படியிருக்கும்போது தனிப்பட்ட ஒருவருக்காக விசேட பாதுகாப்புப் பற்றி நீங்கள் ஏன் பேசுகின்றீர்கள். நாங்கள் அவரைக் கைது செய்ய ஒரு போதும் முயற்சித்திருக்கவில்லை. கைது செய்ய முயற்சித்திருப்பதாகக் கூறுவது அவரது கற்பனை."

அப்படியானால் அவரால் இந்த நாட்டில் பாதுகாப்பாகத் தங்கியிருக்க முடியுமா?

"நிச்சயமாகத் தங்கியிருக்கலாம்."

நீங்கள் அவரைக் கைது செய்யமாட்டீர்களா?

"கைது செய்வது என்பது வேறு விடயம். அவர் பல தவறுகளை வைத்திருக்கின்றார் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. நாட்டின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினராக அவர் இருந்தவர். 3 மாதத்திற்கு முன் முக்கிய பொறுப்பில் இருந்தவர் அவர்.ஆனால் வெளியில் சொன்னால் நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படும் என்பது மாதிரியான விடயங்களை அவர் பகிரங்கமாக கூறியுள்ளார். அவர் அவ்வாறு செய்தது தவறு. தப்பான உத்தரவுகளை நான் களத்தில் நின்ற இராணுவத் தளபதிகளிடம் பிறப்பித்ததாக அவர் கூறினார்.

"அவர் அவ் விடயத்தை மேடைகளில் பேசினார். பத்திரிகைகளில் அவ் விடயம் வெளிவந்தது. அவையெல்லாம் அவர் செய்த தவறுகள். அவற்றுக்காக எல்லாம் நாங்கள் அவர் மீது நடவடிக்கை எடுப்போம். அதற்கு உரிய வழி முறைகளை நாம் பின்பற்றுவோம். ஆனால் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டார் என்பதற்காக நாங்கள் அவரைக் கைது செய்யமாட்டோம். அப்படியான விடயங்கள் இதற்கு முன்னரும் இந்த நாட்டில் இடம்பெறவில்லை."

அரசதலைவர் மகிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். மக்களது ஆணை அவருக்குப் பெரியளவில் கிடைத்தது. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணை தேவை என்கின்ற சர்வதேச சமூகத்தின் விசாரணைக் கோரிக்கை தொடர்ந்தும் முன்வைக்கப்படவே செய்கின்றது. அதற்கு உங்கள் பதில் என்ன?

"சர்வதேச சமூகத்தில் எவரும் விசாரணை தேவை என்று கூறலாம். ஆனால் இந்த நாட்டில் அவ்வாறான விசாரணைக்கு அனுமதிக் கப்படமாட்டாது என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். விசாரணைகள் செய்ய யார் முயன்றாலும் அதனை நான் எதிர்ப்பேன். விசாரணை வேண்டும் என கேட்பவர்கள் உள்நோக்கத் தில்தான் அதைச் செய்கின்றார்கள். எனவே .நா. மன்றமாக இருந்தாலும் சரி வேறேதும் முக்கிய நாடாக இருந்தாலும் சரி விசாரணைக்கு அனுமதிக்கமாட்டோம்.

"நான் அனுமதிக்க மாட்டேன். விசாரணைக்கு அவசியமில்லை. இந்த நாட்டில் தவறு எதுவும் நடந்திருக்கவில்லை. நான் உறுதியாகச் சொல்கின்றேன். இந்த நாட்டில் எந்தவொரு விசாரணையும் நிச்சயம் நடக்கப் போவதில்லை. இந்த நாடும் மக்களும் அப்படியொரு விசாரணை நடப்பதை விரும்பவில்லை. விசாரணை வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியயான்றைப் பேசிக் கொண்டு என்னிடம் யாருமே வரக்கூடாது. நான் இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலர். நான் தீர்மானமாகச் சொல்கின்றேன்.விசாரணை நடைபெறாது. இதுவே உறுதியான முடிவு" - என்றார் அவர்.

0 Responses to "சிறிலங்கா மீது விசாரணை என்று கூறிக்கொண்டு யாரும் இங்கு வரக்கூடாது": கோத்தபாய தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com