சிறீலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணித்து நேற்று (வியாழக்கிழமை) பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் அருகில் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.வழமையாக 15,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது வேணவாவை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில், இம்முறை 500 இற்கும் மேற்பட்ட மக்களே கலந்துகொண்டதுடன், சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கரிநாள் அனுட்டிப்பிற்கான அனுமதி முன்கூட்டியே தம்மால் கோரப்பட்ட போதிலும், இறுதி ஒரு சில நாட்களுக்குள் மட்டுமே தமக்கு அனுமதி வழங்கப்பட்டதால், ஐரோப்பிய ரீதியாக மக்களை ஒருங்கிணைக்க முடியாது போயிருப்பதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இது பற்றி நிகழ்வு ஏற்பாட்டுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, அவர் அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், மக்கள் வருகையின் வீழ்ச்சியைப் பார்க்கும்போது, அவர்களுக்கு தனிநாடு, மற்றும் விடுதலை மீதுள்ள அக்கறையில் சற்று தளர்வு ஏற்பட்டு வருவதாக எண்ணத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பேரணி, மற்றும் எழுச்சி ஒன்றுகூடலில் 15,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதையும், அவர்கள் வீதிகளை மறித்து உணர்ச்சிப் பிரவாகத்தை வெளிப்படுத்தியதையும் நினைவுகூர்ந்த குறிப்பிட்ட காவல்துறைப் பொறுப்பதிகாரி, இம்முறையும் தாம் அவ்வளது தொகையான மக்களை எதிர்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்ததாகவும் கூறினார்.
பிறசல்சில் நடைபெற்ற நிகழ்விற்கு இறுதி நேரத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும், பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க்கில் இருந்து பேரூந்திலும், யேர்மனியில் இருந்து நான்கு பேரூந்துகளிலும் மக்கள் வருகை தந்திருந்தனர். யேர்மனியில் கடும் பனி கொட்டி வருவதுடன், பேரூந்து செலுத்துனர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதாலும் ஏனைய பேரூந்துகளை ஒழுங்கு செய்வதில் சிரமம் ஏற்பட்டதாக அங்கிருந்த வந்த மக்கள் தெரிவித்தனர்.
இவர்கள் தவிர பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஒரு சிலர் மட்டுமே தமது மகிழுந்துகளில் வருகைதந்து தமது உணர்வை வெளிப்படுத்தியதுடன், கடந்த ஆண்டு போன்று சுவிற்சர்லாந்து, டென்மார்க், மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் இருந்து மக்கள் வருகை அவ்வளவாகக் காணப்படவில்லை. டென்மார்க்கில் இதேநாளில் மற்றொரு ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும், காலநிலை காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மக்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு தமிழ்த் தேசிய ஊடகங்கள் போதியளவு ஒத்துழைப்பு நல்கி, நிகழ்வு பற்றிய தகவலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமையும் ஒரு முக்கிய காரணம் என ஏற்பாட்டுக் குழுவினர் பேசிக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
பிற்பகல் 2:00 மணிக்கு ஒன்றுகூடல் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மக்களின் வருகையின்மையால் சற்று தாமதித்து ஆரம்பித்த நிகழ்வில், முதலில் அக வணக்கம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அயர்லாந்தைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோய் ஹிக்கின்ஸ், வன்னி சென்று பணியாற்றித் திரும்பியிருந்த மாதவன் ஐயா, ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் பாலச்சந்திரன், பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திருமதி அரியரட்ணம், பேராசிரியர் ஜீலியா போன்ற பலர் உரையாற்றினர்.
உரைகளின் இடையிடையே தமிழீழ எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டதுடன், இளையோர்களும், மக்களும் இணைந்து “எமக்கு வேண்டும் தமிழீழம்”, “ஐரோப்பிய ஒன்றியமே தமிழ் மக்களிற்கு உதவி செய்,” “மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் போர்க் குற்றவாளிகள்”, போன்ற கொட்டொலிகளை தமிழிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் எழுப்பினர்.
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்” என்ற நம்பிக்கை ஒளியூட்டும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்ததுடன், இனிவரும் நாட்களில் மக்கள் அதிகளவில் கலந்து கொண்டு, தமது விடுதலையை வென்றெடுக்கவும், சிறைப்பிடக்கப்பட்டு முகாம்களிற்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கவும் குரல்கொடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.








0 Responses to சிறீலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணித்து பெல்ஜியத்தில் கண்டன ஒன்றுகூடல்