ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறையில் இருக்கிறார். தன்னை முன்னதாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், “குழுவின் பரிந்துரையை ஏற்கக்கூடாது” என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
ஐகோர்ட்டு நீதிபதிகள் தர்மராவ், பால்வசந்தகுமார் முன்னிலையில் இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நளினி சென்னை ஐகோர்ட்டு பதிவாளருக்கு கடந்த 29-ந் தேதி ஒரு தந்தி அனுப்பினார்.
அதில், “இந்த வழக்கில் நான் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
அது பற்றிய விசாரணை இன்று மாலை நடக்கிறது. அப்போது நளினி சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்ஆக அனுமதி கிடைக்குமா? அல்லது அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுமா? என்பது தெரிய வரும்.
இது போல் நளினி விடுதலை குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழு அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரையை அனுமதிக்க கூடாது என்று சுப்பிரமணியசாமி தாக்கல் செய்துள்ள மனு ஏற்கப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா? என்பதும் இன்று தெரிய வரும்.



0 Responses to சென்னை ஐகோர்ட்டில் நளினி நேரில் ஆஜராக அனுமதி கிடைக்குமா?