சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்களை இன்று சனிக்கிழமை அமெரிக்காவில் மேற்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டங்கள் கனடா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நகரங்களிலும் மேற்கொள்வதற்கு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்களை இன்று சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன்னால் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் திட்டமிட்டுள்ளது.
“சிறீலங்காவில் தயாரிக்கப்பட்டது” என்ற பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் மக்களை கேட்டுக்கொள்வதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரதான 16 நகரங்களில் உள்ள “கப்” மற்றும் “விக்ரோரியா சிக்கிரட்” வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக புறக்கணிப்பு போராட்டங்களை அவர்கள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த வர்த்தக நிலையங்கள் விற்பனை செய்யும் பொருட்களில் 50 வீதமானவை சிறீலங்காவில் தயாரிக்கப்பட்டவை.
சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் கனடா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நகரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த இனவாத அரசின் போக்கில் இத்தகைய புறக்கணிப்பு போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியதுண்டு. எனவே சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை அமெரிக்க மக்கள் கருத்தில் எடுப்பார்கள் என நாம் நம்புகிறோம் என இந்த போராட்டங்களை ஒழுங்கு செய்துள்ள குழுவின் பேச்சாளர் கலாநிதி எலியன் சாண்டர் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு 25,000 பொதுமக்களை படுகொலை செய்துள்ளது. 400,000 இற்கு மேற்பட்ட மக்களை முகாம்களில் ஆறு மாதங்களுக்கும் மேலாக அடைத்த வைத்திருந்தது. சிறீலங்கா இராணுவம் முற்றுமுழுதாக சிங்கள இனத்தவர்களை கொண்டது.
முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தான் வழங்கிய உறுதிமொழிகளை அரசு மீறியுள்ளது.
ஆசியாவிலேயே மிகவும் இராணுவமயப்படுத்தப்பட்ட நாடாக சிறீலங்கா உள்ளது. அதன் பொருளாதாரத்தில் ஏற்றுமதித்துறை 25 வீதமாக உள்ளதுடன், அதில் 50 வீதம் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் புடவை ஏற்றுமதி மூலம் பெறப்படுகின்றது.
முகாம்களில் உள்ள மக்களின் அடிப்டைத் தேவைகளுக்காக மனிதாபிமான அமைப்புக்களுக்கு அமெரிக்கா 16 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியிருந்தது. ஆனால் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் பிரதேசங்களில் தனது படையினரின் முகாம்களின் விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றது.
எனவே மனித உரிமைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நாடுகளிடம் இருந்து புடவைகளை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் அமைப்பு கேட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் புடவை பொருட்களை கொள்முதல் செய்யும் போது அது எங்கு உற்பத்தி செய்யப்பட்டது என பார்வையிட்ட பின்னர் கொள்முதல் செய்ய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அமெரிக்க மக்களை கேட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் இணையத்தளத்தின் ஊடாக வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.
http://www.boycottsrilanka.com/



0 Responses to சிறீலங்கா பொருட்கள் - புறக்கணிப்பு போராட்டங்களை தீவிரப்படுத்த புலம்பெயர் தமிழ் சமூகம் திட்டம்