இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை இரத்து செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சலுகைத் திட்டம் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் விடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புக்களை சிறீலங்கா எடுக்கவில்லை என ஐரோப்பிய ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு 16 வகையிலான நிபந்தனைகளை குறித்த நாடுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், சலுகைத் திட்ட இடைநிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வராது எனவும், ஆறு மாத காலம் வரையில் சலுகைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் 16ம் திகதி பிரசல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய நிதி அமைச்சர்களுக்கு இடையிலான மாநாட்டின் போது சலுகைத் திட்ட இடைநிறுத்தம் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது.
நிலைமைகளை விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பின்பற்றிய நடவடிக்கைகள் குறித்து சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வமாக சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்படாது என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய விசாரணைகளின் பின்னர் இலங்கையில் மனித உரிமை நிலைமைகளில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்படக் கூடும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்படுவதற்கு உறுப்பு நாடுகளினது அங்கீகாரமும், ஐNரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரையும் அவசியமெனத் தெரிவிக்கப்படுகிறது.
சாதகமான முடிவு கிடைக்கப் பெறும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி ரிவன்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.



0 Responses to சிறீலங்காவுக்கான ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்