Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுவது எமது நோக்கம் இல்லை என்றும், சிறிலங்காவில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கை எதனையும் நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறோம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மற்றும் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் ஆகியோர் சுதந்திரமாகவும் உரிமையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவே நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

சரத் பொன்சேகாவுக்கும் எனக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் போலியான பிரசாரங்களை முன்வைத்து வருகிறது.

எனினும் தற்போது நாட்டில் போர் நிறைவடைந்துள்ள நிலையில், நிலையானதும் கௌரவமானதுமான சமாதானம் ஒன்றை கொண்டு வரவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த நிலையில் பொது மக்கள் மத்தியில் இவ்வாறாக போலியான பிரசாரங்களை கூறி, அவர்களுக்கு இடையில் பிரிவினைகளை தோற்றுவிப்பது நாட்டின் சமாதானத்துக்கு ஏற்புடையதாகாது.

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர், இரண்டு தரப்பினருடனும், கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் ஒரே விஷயமே இருதரப்பிடமும் முன்வைக்கப்பட்டதே தவிர மாறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இரண்டு தரப்பினரில் சரத் பொன்சேகா தமது கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினார். அப்போது தாங்கள் தேசத்துரோகமான கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை.

தமிழ் மக்களுக்கான சுதந்திரமான அரசியல் தீர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பிலான கோரிக்கைகளையே நாங்கள் முன்வைத்தோம். எனவே தயவு செய்து போலி பிரசாரங்களை சிங்கள மக்கள் நம்ப வேண்டாம்.

அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் நாளன்று மக்கள் வாக்களிக்க முடியாதவாறு பல்வேறு சதிகளை மேற்கொண்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. அம்பாறை மாவட்டத்தில் பொது மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். எனினும் இவற்றுக்கு மத்தியில் பொது மக்கள் தமக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

தனிநாடு பிரித்துப் பெறும் எண்ணம் இல்லை. ஒரே சிறிலங்காவில், தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது உரிமைகளை அனுபவித்து கௌரவமாக வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் எதிர்பார்ப்பதாகவும் சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்: சம்மந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com