தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினுள் அடிமைப்பட்டிருக்கும் எமது உறவுகளுக்காக புலம்பெயர்நாடுகளில் ஈழத்தமிழர் நடாத்தி வருகின்ற வரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் வாக்கெடுப்புகளின் தொடர்ச்சியாக அண்மையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.இத்தேர்தலில் பங்குபற்றுவதற்காக சுமார் 11 000 ஈழத்தமிழர்கள் பதிவுகளை செய்திருந்தனர். ஏப்ரல் மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் நியூ சவுத்வேல்ஸ், விக்ரோரியா மற்றும் கான்பரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற நேரடி வாக்குப்பதிவு மற்றும் தபால்மூல வாக்குபதிவுகள் ஊடாகவும் ஏனைய மாநிலங்களில் நடைபெற்ற தபால்மூல வாக்குபதிவுகள் ஊடாகவும் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 8 272 ஈழத்தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று, ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி, நியூ சவுத்வேல்ஸ் மாநில நாடாளுமன்ற ஊடகவியலாளர் கூடத்தில் பிற்பகல் இரண்டு மணியளவில் உள்ளூர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய சிபிஐ ஸ்ரட்டஜிக் அதிகாரி ஸ்ரிபன் நியூமன் அவர்களால் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது.
தேர்தல் முடிவுகளை வெளியிட்டு கருத்துரை வழங்கிய ஸ்ரிபன் நியூகம், அவுஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழு பின்பற்றும் நடைமுறைகளை விட மிகவும் திருத்தமான தேர்தல் நடைமுறையை பின்பற்றியே இத்தேர்தல் நடாத்தப்பட்டது எனவும் ஒவ்வொரு வாக்காளரும் தனிநபர் ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டதாகவும் கூறினார்.
தேர்தல் முடிவுகளை வெளியிடும் இக்கூட்டத்தில் கிறீன் கட்சியை சேர்ந்த செனட்டர் இயன் கொகன் உட்பட அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்பு குழு சார்பில் கௌரிபாலன் மற்றும் சாம்பவி ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் இத்தேர்தலில் இத்தீர்மானத்தை ஆதரித்து 8 154 பேரும் அதற்கு எதிராக 51 பேரும் வாக்களித்துள்ளனர்.
இதன்படி வாக்களித்தவர்களில் 99.4 விழுக்காட்டு ஈழத்தமிழர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்து "ஆம்" என வாக்களித்துள்ளனர். இவ்வாக்கெடுப்புக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட 67 வாக்குகள் உரிய முறையில் பதிவு செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
சுமார் ஆறுமாத காலமாக "அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்புக் குழு" எனப்படும் தன்னார்வ தொண்டர்களினால் இவ்வாக்கெடுப்புக்கான தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவுஸ்திரேலியாவின் முதன்மை தமிழ் அமைப்புக்கள் அனைத்தினதும் ஆதரவுடன் அவுஸ்திரேலிய ஈழத்தமிழர்களுக்கான இத்தேர்தல் நடைபெற்றது.
சிபிஐ ஸ்ரட்டஜிக் எனப்படும் அவுஸ்திரேலிய தனியார் நிறுவனத்தின் ஊடாக இத்தேர்தல் பணிகள் நிறைவேற்றப்பட்டன. தாயகத்து தமிழர்களின் குரலாக அவுஸ்திரேலிய ஈழத்தமிழர்களால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடிப்படையாக கொண்ட தீர்வே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பதை மீளவும் உறுதிப்படுத்திய இவ்வாக்கெடுப்பு பற்றிய செய்திகள் அவுஸ்திரேலிய ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின் சுருக்கம் வருமாறு:
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 11 000
வாக்களித்தோர் எண்ணிக்கை 8 272
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67
தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோர் 8 154
தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தோர் 51



0 Responses to அவுஸ்திரேலியா வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலில் 99.4 விழுக்காடு ஆதரவு