Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் வீதியோரத் தேநீர்க்கடை முதல் வீதிகளின் புனர்நிர்மானப் பணி வரை அனைத்தையுமே சிறிலங்கா அரசாங்கமோ அல்லது அதனது இராணுவம்தான் மேற்கொள்கிறது. அதேவேளையில், வன்னியில் மீள் குடியேற்றப்படும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் போதியளவு பொருத்தமான வேலைவாய்ப்புக்களின்றித் தவிக்கின்றனர். மட்டுப்படுத்தப்பட்டளவு அரச சார்பற்ற நிறுவனங்களே வன்னியில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் இன்னமும் அவர்களைச் சென்று சேரவில்லை.

வன்னிக்குக் கிடைக்கின்ற உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தனது இராணுவத்தைப் பயன்படுத்துவதாலேயே அங்கு மீள் குடியேறியிருக்கும் மக்கள் தமக்கான வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என நம்பப்படுகிறது.

வவுனியாவிலிருந்து 9 வீதி வழியாக யாழ்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது ஓமந்தை, புளியங்குளம், மாங்குளம், முறிகண்டி, கிளிநொச்சி, ஆனையிறவு, புதுக்காட்டுச் சந்தி, பளை என பிரதான நகரங்கள் அனைத்திலும் சிற்றூண்டிச் சாலைகளையும், உணவு விடுதிகளையும் படையினரே நடாத்தி வருகிறார்கள்.

போர் முடிவுக்கு வந்துவிட்ட இந்தச் சூழமைவில் செய்வதற்குப் பணிகள் எதுவுமற்ற நிலையில்; வீதிகளின் புனரமைப்பு, உணவு விடுதிகளை நடாத்துவது, பழுதடைந்த வாகனங்கள் மற்றும் உந்துருளிகளைத் திருத்துவது, மற்றும் போரின் போது சேதமடைந்த படகுகளை ஒட்டுவது போன்ற பணிகளில் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

வன்னியின் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளின் ஒப்பந்தங்கள் எந்தவிதப் போட்டியுமின்றி இராணுவத்தினருக்கே சென்று சேர்கிறது. மணல் ஏற்றுவதற்கான உரிமத்தினை வழங்குவது முதல் மாட்டினை இறச்சிக்காக வெட்டுவதற்கான அனுமதி வரை எல்லாமே படையினரின் வசம் தான்.

இதனால் கிடைக்கும் வருமானங்கள் அனைத்தும் இராணுவத்தினருக்கே சென்று சேர்கிறது. இதன் விளைவாக உள்ளூர் வாசிகள் பொருத்தமான வேலைவாய்ப்பின்றி அலைகிறார்கள். வன்னியில் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான வாய்ப்பினை இராணுவத்தின் இந்தச் செயற்பாடுகள் இல்லாதுசெய்கிறது.

அரசாங்கம் முன்னெடுப்பதாகக் கூறப்படும் வடக்கினது அபிவிருத்திப் பணிகள் வடக்கினது மக்களைக் கொல்லாமல் கொல்லுகிறது என பொருளியலாளரான கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தா கூறிகிறார்.

முன்னர் எக்ஸ்போ ஏயார் என்ற நிறுவனம் மாத்திரமே பலாலியிலிருந்து கொழும்புக்கான விமான சேவையினை நடாத்தி வந்தது. தற்போது சிறிலங்கா விமானப்படையினர் பொதுமக்களுக்கான தனியான விமான சேவையினை நடாத்திவருகிறார்கள்.

மேற்கு நாடுகளில் குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவேண்டுமெனில் அல்லது அங்கு முதலீடுகளை மேற்கொள்ளவேண்டுமெனில் பாதுகாப்பு அமைச்சினது அனுமதியினைப் பெறவேண்டுமாம்.

0 Responses to வேலைவாய்ப்பின்றி அலையும் வன்னி மக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com