அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” மாமனிதர் சிவராமை ஒரு போராளியாக ஊடகவியலாளராக நான் சந்தித்திருக்கின்றேன். அவர் போராளியாக இருந்து நாட்டுக்குச் செய்ததைவிட ஊடகவியலாளராக இருந்து செய்த சேவை என்பது மிக காத்திரமானது. அவர் ஒரு ஊடகவியலாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக, இலக்கியவாதியாக, பேச்சாற்றல் கொண்டவராக……. என்று பல் கலைகளிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார்.
அவரைப் பற்றிக் கூறுவதென்றால் அது நீண்டு கொண்டே செல்லும். ஆனால் அவருடன் இறுதிக் காலம் வரை நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் சிவராமைப் போன்ற ஒரு பல்துறை சார் ஆற்றல் கொண்ட ஒருவரை எமது சமுகம் இழந்திருக்கின்றது. இந்த இடைவெளியை இன்னும் எவராலும் ஈடு செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
நானும் சிவராமும் நீண்டகாலம் ஊடகத்துறையில் மாத்திரமின்றி கலை கலாசார சமுக, அரசியல் என பல விடயங்களில் ஈடுபட்டிருந்தோம். ஊடகத்துறையில் குறிப்பாக 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நெற் உட்பட சர்வதேச ஊடகங்களில் இணைந்து பணியாற்றிய வேளையில் பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது, அந்த வேளையிலும் நாங்கள் இருவரும் அசட்டுத்துணிவில் மோட்டார் சைக்கிளில் இரவு பகல் பாராது மட்டக்களப்பில் சுற்றிக் கொண்டிருந்ததையும் வாழைச்சேனையில் உள்ள எனது வீட்டில் இருவரும் தங்கியிருந்ததையும் இன்றும் என்னால் மறக்க முடியாது.
எங்களுடன் பல ஊடக நண்பர்கள் சேருவதற்கோ, கதைப்பதற்கோ பயந்திருந்த காலமது. எழுத்துத்துறையில் சர்வதேச ரீதியில் என்னை உயர்த்தி விட்டவர் சிவராம் என்பதை நான் மறக்க முடியாது. பேனா கொண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை கணணி யுகத்திற்குக் கொண்டு சென்றவர் சிவராம்தான். என்னை மாத்திரமல்ல வடகிழக்கு என்ற பேதமின்றி எழுத்துத்துறையில் ஆற்றல் உள்ளவர்களை மாத்திரமல்ல பல புதியவர்களையும் அவர் ஊடகத்துறையில் இணைத்து வளர்த்தெடுத்தார்.
ஊடகத்துறையில் இருக்கும் பலர் இவ்வாறு புதியவர்களை வளர்த்தெடுத்து அவர்களை ஊக்குவிப்பது என்பது மிகமிக அரிதான விடயம். மாறாக போட்டி பொறாமையுடன் ஒருவரை ஒருவர் எவ்வாறு கருவறுக்கலாம் என்றிருந்தோர்கள் மத்தியில் அற்புதமனிதராகத் திகழ்ந்தவர் சிவராம். ஏனைய ஊடகவியலாளர்களை மதிக்கும் பண்பு கொண்ட அவர் ஊடகப் பண்புகளை மதித்து தொழில் ரீதியாக எவரையும் புண்படுத்தாமல் அவதூறு பேசாமல் நாகரீகமாக வாழ்ந்தவர். அந்த பண்பு இன்று சிலரிடம் இல்லை என்பது உண்மை. நான் கொண்ட கொள்கையை ஆழமான தேசப்பற்றை அவர் மிகவும் நேசித்தார்.
இதனால் நாங்கள் இருவரும் தேசியம் தொடர்பான பல வேலைகளில் ஈடுபட முடிந்தது. அவருடன் ஊடகத்துறை மாத்திரமின்றி பல சமுக வேலைகளிலும் நான் ஈடுபட்டிருந்தேன். அது மாத்திரமின்றி கொள்கை தமிழ் தேசியம்விடுதலை என்ற சித்தாந்தத்திற்குள் எனக்கிருந்த அரசியல் என்ற பக்கத்தையும் அவர் இனங்கண்டதனால் நான் பாராளுமன்ற உறுப்பினராகவும் செல்ல முடிந்தது. அவர் தமிழ் தேசியத்திலும் தமிழீழ போராட்டத்திலும் உறுதியாக இருந்தார். எமது தேசியத் தலைவர் மீது ஆழமான பற்று வைத்திருந்தார். இதற்கு உதாரணமாக 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து செய்யப்பட்டு ஏ9 பாதை திறக்கப்பட்ட ஒரு சில தினங்களில் நானும் சிவராமும் மட்டக்களப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் வன்னிக்குச் சென்றோம். அது இலகுவான பயணமாக இருக்கவில்லை.
அதிகாலையில் புறப்பட்ட நாங்கள் நண்பகல் வவுனியாவை அடைந்தாலும் ஓமந்தைக்கு அப்பால் போரினால் பாதிக்கப்பட்டிருந்த கரடு முரடான பாதையைக் கடந்து கிளிசொச்சியை அடையும்போது நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவ்வாறு வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சிரமமான பயணம் அது. முதல் முதலாக வன்னிக்கு இவ்வாறு பயணம் செய்தவர்களும் நாங்களாகத்தான் இருந்தோம். அங்கு பத்து நாட்கள் வரை தங்கியிருந்தாலும் தேசியத் தலைவரைத் சந்தித்தபோது அவர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்ததை என்னால் உணர முடிந்தது.
'இனி நாம் செத்தாலும் பரவாயில்லை’ என ஒரு கட்டத்தில் என்னிடம் கூறினார். தேசியத்தில் பற்றுக் கொண்ட அவரை சிங்கள தேசம் திட்டமிட்டு அழித்து விட்டது. அவரின் படுகொலைச் செய்தி கேட்டு தாயகமே கலங்கி நின்றது. அவரின் தேசியப் பற்றை கௌரவிக்கும் வகையில் எமது தேசியத் தலைவர் ‘மாமனிதர்’ என்ற கௌரவத்தை வழங்கியதில் இருந்தே அவரின் தேசப்பற்றை புரிந்து கொள்ள முடியும்.
அவர் என்னிடம் அடிக்கடி கூறுவார். “நான் செத்தால் என்னை மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தில் புதைக்க வேண்டும். இதை நீ செய்ய வேண்டும்” என்பார். அவரின் அந்த இறுதி ஆசையை குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் என்னால் நிறைவேற்ற முடிந்தது. அந்த பூரண திருப்தி எனக்கு உண்டு. அவர் இறந்தாலும் அவரின் சிந்தனைகளும் சேவைகளும் என்றும் மறையாது. அது மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும். ஆன்னாரின் ஆத்மா சாத்தியடையப் பிரார்த்திக்கின்றேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to மாமனிதர் சிவராம் (தராக்கி): ஜெயானந்தமூர்த்தி