சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்திவருகின்ற இந்தவேளையில், மேற்படி விசாரணைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கு சர்வதேச நீதி ஆணைக்குழுவுடன் இணைந்து ஆஸ்திரேலியா சிட்னியை தளமாக கொண்டியங்கும் ஆஸ்திரேலியா இளம் சட்டத்தரணிகள் குழுவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.இந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஆன் மேரி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் - "சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய மனிதப்பேரவலத்திற்கு காரணமாக அமைந்துள்ள அந்நாட்டு அரச படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் எமது அமைப்பு முனைப்புடன் ஈடுபடவுள்ளது.
"இந்த ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களில் சிறிலங்காவிலிருந்து இந்த நாட்டுக்கு தஞ்சம்கோரி வந்தவர்கள் உட்பட பலரிடம் நாம் சேகரிக்கவுள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறான போர்க்குற்றங்கள் உலகின் எந்த மூலையிலும் நடைபெறக்கூடாது என்ற நோக்குடனேயே நாம் இந்த பணியை ஆரம்பித்துள்ளோம்" - என்றார்.
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்போது, அந்த விசாரணைகளுக்கு உதவியாக ஆதாரங்களை ஆயத்தாமாக சேகரித்துவைப்பதே எமது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய இளம் சட்டத்தரணிகள் குழுவின் இந்த முயற்சியை அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு வரவேற்றுள்ளது.



0 Responses to போர்குற்ற ஆவணங்களை சேகரிக்கும் பணியில் அவுஸ்ரேலிய இளம் சட்டவியலாளர்கள்