Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இளையோர் கையில் போராட்டம் ஒப்படைக்கப்படுகிறது என்று தலைவர் கூறியதை இன்று உலகில் அறியாத தமிழர் என்று எவருமே இருக்கமாட்டார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்குவதற்கான தேர்தல் வரும் மே மாதம் 2ம் திகதி டென்மார்க்கில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சற்று வித்தியாசமான ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார் இளையராஜா சிதம்பரநாதன் ( கண்ணன் ) என்ற 28 வயது இளைஞர். தற்போது பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவுக்கான மாஸ்டர் தர கற்கையை நிறைவு செய்ய காத்திருக்கும் இவரை அலைகளுக்காக சந்தித்தோம்.

கேள்வி: ஆலாபனைகள் எதுவுமே வேண்டாம், நீங்கள் ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் ?

கண்ணன்: இதற்கான பதில் நான் படித்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக கல்விப் பின்புலத்தில் இருந்தும், கடந்த கால அனுபவங்களில் இருந்தும் இணைந்து வருகிறது. முதலாவது நான் வர்த்தகத்திற்கான உயர் கல்வியை கற்று வருகிறேன். சட்டத்துறை எனக்கு முக்கிய பாடமாக அமைந்திருக்கிறது. எனவே நாடுகடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதில் உள்ள சட்ட விவகாரம், அதன் சாத்தியப்பாடுகள் குறித்து நன்கு அறிந்து, அதில் ஒரு பயன் இருப்பதால்தான் இந்தத் தேர்தலுக்கு வந்துள்ளேன்.

இரண்டாவது விடயம் கடந்த ஆண்டு வன்னியில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை நாம் பாரிய ஊர்வலங்களை எல்லாம் நடாத்திக் கொண்டிருந்தோம். சர்வதேச சமுதாயத்திடம் ஓர் அங்கீரத்தை கேட்டு போராடினோம். போலீசரால் பிடித்து அடைக்கப்பட்டோம். அதன் முடிவில் நாங்களும், நீங்களும் அறிந்த உண்மை சர்வதேச சமுதாயம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதுதான். இந்தத் தார்மீகக் கோபத்திற்கு சரியான பரிகாரமாக நாடுகடந்த அரசு இருப்பதாக உணர்கிறேன். இப்போது அமைக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது யாருடைய அனுமதியும், அங்கீகாரமும் இன்றி நாமாக அமைக்கும் அரசாக உள்ளது. முன்னர் நாம் அங்கீகாரம் கேட்டு அலைந்தோம், கிடைக்கவில்லை. இப்போது நாமே நம்மை அங்கீகரிக்கிறோம். முதலில் நாம் நம்மை மதிப்பது அவசியம் என்றும் உணர்ந்தேன். இப்படியாக மேற்சொன்ன இரு காரணங்களும் என் உள்ளத்தைத் தூண்டியதால் இந்தத் தேர்தலுக்கு வந்துள்ளேன். நாடுகடந்த அரசென்பது முன்னரும் உலக அரங்கில் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்தப் பாதையை இன்று நாமுள்ள நிலையில் சிறந்த பாதை என்றும் கருதுகிறேன்.

கேள்வி: நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம், ஆனால் இதற்காகவென்றே இங்கு பலர் காலகாலமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இருக்க இளைஞரான நீங்கள் ஏன் இதற்குள் வந்தீர்கள் ?

கண்ணன்: இவ்வளவு காலமும் சிலர் சொல்ல ஏனென்று கேட்காமல் கொடி பிடித்தோம், சிறை சென்றோம், கோஷமிட்டோம், படிக்கப் போகாமல் ஊர்வலத்திற்காக ஊர்ஊராக போனோம். இவையெல்லாம் எதற்காக எமது தாய்நாட்டுக்காகத்தான். அதேவேளை 2008 ம் ஆண்டு மாவீரர்நாளில் தலைவர் கூறினார், போராட்டத்தை புலம் பெயர் இளையோர் கையில் வழங்குவதாக. அந்தக் குரல் என்னை மிகவும் கவர்ந்தது, அதை மிக உயர்வாக மதிக்கிறேன். அதை உண்மையாக மதிப்பதானால் அதற்கான செயற்பாடு அவசியம், நம்மை நாமே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பேச்சல்ல செயலே முக்கியம் என்ற தலைவரின் தாரக மந்திரத்தை மனதில் தாங்கி செயற்பட வந்துள்ளேன். ஏற்கெனவே இருப்போர் வேண்டுமா இல்லை புதியவர்கள் வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது யாரோ சில மேய்ப்பர்கள் அல்ல மக்களின் வாக்குச் சீட்டுக்களே..

கேள்வி: நீங்கள் சொல்வது சரி, இருந்தாலும் உங்களைப் போன்ற இளையோரை பெரியோருக்கு எப்படித் தெரியும். மக்களிடையே நன்கு அறிமுகமான முகங்களே தேவை என்கிறார்கள் சிலர்.. இதுபற்றி என்ன சொல்லப் போகிறீர்கள் ?

கண்ணன்: இளையோர் கையில் போராட்டம் ஒப்படைக்கப்படுகிறது என்று தலைவர் கூறியதை இன்று உலகில் அறியாத தமிழர் என்று எவருமே இருக்கமாட்டார்கள். தலைவரின் அந்த வார்த்தைக்கிருக்கும் வலுவை முந்திச் செல்ல எந்தப் பிரபலத்தாலுமே முடியாது. அன்று தலைவர் கொடுத்த இளையோர் கையில் போராட்டம் என்ற தகவலுக்குள்ளால் நான் வெளி வருகிறேன். நான் ஒரு தமிழ் இளையோன் என்பதை அறிந்தவுடன் மக்களுக்கு அன்று தலைவர் சொன்ன வாசகங்களே நினைவிற்கு வரும். உண்மையில் என்னைப் போன்ற ஓர் இளைஞனுக்கான பிரச்சாரம் ஏற்கெனவே தலைவரால் செய்யப்பட்டுவிட்டது, மக்களுக்கும் அது தெரியும். ஆகவே மேலதிக பிரபலம் அவசியம் இல்லை மக்கள் மற்றதைப் பார்த்துக் கொள்வார்கள்.

கேள்வி: இந்தத் தேர்தலில் டென்மார்க்கில் உள்ள புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருப்போரின் உறவினர், அதில் முக்கிய பொறுப்பில் உள்ளோரின் அனுசரணை பெற்றோர் என்ற தகுதியுடன் பல முகங்களைக் காண முடிகிறது. நீங்களும் அந்தப் பின்னணியோடுதான் போட்டியிடுகிறீர்களா ?

கண்ணன்: முதலில் ஒரு விடயத்தை இங்கு சொல்கிறேன். நமக்கெல்லாம் முதல் முக்கியம் தலைவர் ஈழத் தமிழருக்காக வளர்த்தெடுத்த தன்மானம். தலைவரை எப்படி ஒருவர் தேர்தலில் நிறுத்த முடியாதோ அப்படித்தான் அவர் வழி நடக்கும் இளையோரையும் மற்றவர்கள் தேர்தலில் நிறுத்த முடியாது. இறப்பர் ஸ்டாம்பு பதவிகளுக்கு இனியும் இடமளிக்க மக்கள் விரும்பமாட்டார்கள். மாற்றம் ஒன்று அருவமாக நடந்து கொண்டே போகிறது. நான் அந்த மகத்தான மாற்றத்தின் ஓரங்கமாகவும் இளைஞர்களின் குரலாகவும் இங்கு வந்துள்ளேன். எனது வரவில் என் தேசத்தின் தன்மானம் பட்டொளி வீசிப்பறக்கிறது. இதைவிட எனக்கு வேறெந்தப் பின்னணியும் கிடையாது.

கேள்வி: சரி உங்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கு என்ன கூறப்போகிறீர்கள் ?

கண்ணன்: கடந்த காலங்களில் நாம் எதை முன்னெடுத்தாலும், ஒரு முரண்பாடு வரும், அதுவே நாளாவட்டத்தில் எதிர்ப்பக்கமாக சுழன்று, சுழன்று அனைவரையும் தோல்வியில் கொண்டு சென்று நிறுத்தும். அவ்வாறாக நமக்குள் சுழன்ற முரண்பாடுகளின் உற்பத்தித் தானமாக சாதியமே இருந்தது. ஆனால் இன்று வந்துள்ள இளையோரிடையே சாதியம் அன்றைய காலத்தைப் போல பலம் பெறவில்லை. ஆகவே சாதியம் போன்ற விடயங்களுக்குள் அடிபட்டுப் போகாது ஒரு தீர்வை நமக்குள் உறுதியாக வகுத்துக்கொள்ள இன்றைய இளையோரால் முடியும் என்று கருதுகிறேன்.

கேள்வி: தேர்தல் 2ம் திகதி நடைபெறப்போகிறது. ஆனால் வாக்குச் சாவடிகள் எங்கு வைக்கப்படும், எந்த நேரம்வரை வாக்களிக்கலாம் என்ற விடயங்கள் இன்றுவரை தெரியாமல் இருக்கிறது மக்கள் எப்படி வாக்களிப்பது ?

கண்ணன்: இது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கேள்வி. டென்மார்க் நாடுகடந்த அரசுக்கான தேர்தலை நடாத்துவோரிடமிருந்து இது குறித்த உத்தியோகபூர்வமான கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை. அதனால் வாக்காளரிடம் இதற்கான பதிலை எடுத்துக் கூற முடியாத நிலை இருக்கிறது. நாளாவடடத்தில் நிலமைகளில் மாற்றம் ஏற்படுத்தி காரியங்களை உயிர்ப்புடன் செயற்பட வைக்க இளைய, புதிய மூளைகள் அவசியம். அதற்குத்தான் இளையோருக்கு வாக்களியுங்கள் என்கிறேன்.

கேள்வி: அதேவேளை இளையோர் பற்றிய கருத்துக்களை வைத்துக் கொண்டு தமக்கு பிடிக்காத பெரியோரை ஒதுக்கும் போக்குபற்றி என்ன கூறுகிறீர்கள் ?

கண்ணன்: பெரியோரின் அனுபவத்தை துணையாக வைத்துத்தான் இளையோர் பயணிக்க வேண்டும். காற்று, மழை, சூரியன், சந்திரன், எம்மைப் பெற்ற தாய், தந்தையர் எல்லாம் பழையவர்கள்தான். ஆனால் அவைகள் என்றும் புதுமையான விடயங்கள். அவைகள் இல்லாமல் நாம் புவியில் உயிர்வாழ முடியாது. எனவே இளையோராகிய நாம் பெரியோரிடமிருந்து பெறக்கூடிய தேவையான அனைத்தையும் பெற்றுத்தான் முன்னேற வேண்டும். அது பற்றிய தெளிவுதான் ஒருவர் இளையோர் என்பதற்குச் சரியான அடையாளமாகும்.

கேள்வி: வெற்றி பெற்றால் நாடு கடந்த தமிழீழ அரசின் பணிகளை எப்படி முன் நகர்த்தலாமெனக் கருதுகிறீர்கள் ?

கண்ணன்: இரண்டு விதமாக அணுகலாம் என்று கருதுகிறேன். ஒன்று தொலைநோக்கு நடவடிக்கை மற்றயது குறுங்கால நடவடிக்கை. தொலைநோக்கான நடவடிக்கைகள் போர்க் குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வழி காண்பது, அடுத்தது ஜனநாயக வழியில் தமிழீழத்தை அமைப்பது தொடர்பான பணிகளை முன்னெடுப்பது.

குறுங்காலப் பணிகள் என்று பார்த்தால் அகதிகளாக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வை ஒழுங்குபடுத்துவது, அவர்களை சொந்த இடங்களுக்கு விரைவாக அனுப்ப ஏற்பாடு செய்வது. மேலும் எமக்காக போராடியவர்களின் வாழ்வு இன்று பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் மறு வாழ்வு குறித்த பணிகளை நாம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும். இப்படி இரு கோணத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்தித்து வருகிறேன். அதற்கு முதலில் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

கேள்வி: மாற்றங்கள் புதியவை ஆனால் நாம் மாற்றாமல் அவை என்றுமே மாறுவதுமில்லை. மாறினால் மாறட்டும் என்று கருதாமல் மாற்றுவதற்கு வந்துள்ளீர்கள். மக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள், வணக்கம்.

கண்ணன்: வணக்கம்.

பேட்டி: அலைகள் ஆசிரியர் குழு.

கண்ணன் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய இணையத்தளத்தை காண இங்கே அழுத்துக.

இணையத்தளம்.

0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலின் வேட்பாளர் கண்ணனுடன் ஒரு சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com