நாடாளுமன்றத்தில் சபாநாயகரைத் தெரிவு செய்வதில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கை கோர்த்தது போல் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இரு சாராரும் இதய சுத்தியுடன் இணைவேண்டும் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.போரதீவு உதயதாரகை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்வின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
தமிழர்கள் மீதான அடக்குமுறை இன்னும் முடிந்தபாடில்லை. முப்பது அண்டு கால யுத்த முடிவின் பின் 7 ஆவது நாடாளுமன்ற அமர்வ நடைபெறுவது சந்தோமளிப்பதாக புதிய பிரதமர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இது உண்மை எனில் அவசர காலச் சட்டம் இன்னும் ஏன் நீடிக்கப்பட வேண்டும் என்பது புதிராகவே உள்ளது. இதனை நீக்க அரசு உடனடியாக செயற்பட வேண்டும் என்பது எமது வேண்டுதலாகும்.
இவற்றைச் செய்யாமல் போலி வார்த்தை ஜாலங்களை வெளியிடுவதில் எவ்வித பிரயோசனமும் இருக்காது.
நடந்து முடிந்த தேர்தலில் அரசு மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சுயேட்டைக் குழுக்கள் பலவற்றைக் களமிறக்கியது. ஆயினும் தமிழ் மக்கள் இத் திட்டத்திற்குத் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.
எங்கிருந்து கொண்டு யார் என்ன சொன்னாலும் தமிழ் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் .
காலப் போக்கில் இது முழுமைப்படுத்தப்பட்டதாக மாறும். ஏமாற்று வார்த்தைகளால் மயங்கியுள்ள சிறு பகுதியினரும் எம்முடன் கை கோர்க்கும் காலம் வெகு தொலைவில் என்றும் அரிய நேத்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to இனியும் போலி வார்த்தை ஜாலங்களை வெளியிடுவதில் அர்த்தமில்லை: அரியநேத்திரன்