நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஐன அமைப்புக்களின் ஒன்றியம்.அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தினை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விடுதலை வேட்கையுடன் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அதன் வடிவங்களாக இலங்கைத் தீவில் உள்ள இனப்பிரச்சினைக்கு சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை மீPள் வலியுறுத்த்தும் வாக்கெடுப்புக்களை மேற்கொள்ளப்பட்டு அனைத்து நாடுகளிலும் 98 வீதத்திற்குக் குறையாத மக்கள் அதற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறு மக்களால் வழங்கப்பட்ட ஆணையினை அடிப்படையாக கொண்டு நாடுகள் தழுவிய ஈழத் தமிழர் அவைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. உலகளாவிய ரீதியில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்பதன் வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் செயற்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஈழத் தமிழர் அவைகளின் உருவாக்கம் முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 02-05-2010 அன்று நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் தெரிவு செய்வதற்கான தேர்தலாக இந்தத் தேர்தல் அமைகின்றது. இந்தத் தேர்தலில் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களும் கலந்து கொண்டு வாக்களிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
ஐனநாயக ரீதியாக இடம் பெறும் இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்திற்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படக் கூடிய வேட்பாளர்களை இனம் கண்டு அவர்களுக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்கி அவர்களது வெற்றிக்காக மக்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு எப்படியானதாக அமைய வேண்டும் என்பதனை கூற முடியாதளவுக்கு அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம், மற்றும் அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் என்பன தடையாகவுள்ளது.
இந்தச் சட்டங்களால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பன முற்றாக நசுக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களே காணப்படுகின்றனர். கொடும் போரினால் ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, சொத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் சிங்கள தேசத்தின் அடிமைகள் என்ற நிலையில் வாழ்ந்தாலும் கூட அம் மக்களின் சுதந்திர வேட்கை இன்னமும் அடங்கவில்லை.
சகல நம்பிக்கைகளும் தொலைந்த நிலையில் தாயகத்தில் வாழும் மக்கள் மத்தியில் புலம் பெயர் மக்களின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக உள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களால் உருவாக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசானது தாயகத்தில் அடக்கு முறைக்குள் வாழும் மக்கள் சார்பாக அவர்களால் வெளிப்படுத்த முடியாமல் உள்ள அவர்களது அரசியல் அபிலாசையான சுதந்திரமும் ,றைமையும் உள்ள தமிழீழத் தனியரசு என்பதனை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் மூன்று தசாப்தகால கனவை நனவாக்க நேர்மையுடனும் அற்பணிப்புடனும் உழைக்கும் என்ற நம்பிக்கை ஈழத்தில் வாழும் மக்களுக்கு உண்டு.
முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின்னர் சிங்கள தேசத்திற்கு அடிமைப்பட்டு வேதனையில் வாடும் மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கம் என்பதனை தமக்கான சுதந்திர நாட்டின் உருவாக்கமாகவே கற்பனை செய்து கனவு காண்கின்றனர்.
அவர்களது கனவை நாடு கடந்த தமிழீழ அரசு நனவாக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். அந்த அரசின் உருவாக்கத்திற்காக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இரா.கணபதிப்பிள்ளை
செயலாளர்
வன்னி மாவட்ட வெகுஐன அமைப்புக்களின் ஒன்றியம்.



0 Responses to நா.க.த.அரசு: வாக்களிக்கும் மக்களுக்கு வன்னி மாவட்ட வெகுஐன அமைப்பின் கோரிக்கை