இலங்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும்போது சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் கடந்த இரண்டு தசாப்தங்களிற்கு மேலாக அரங்கேற்றப்பட்டுவருகின்ற சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
தென்இலங்கையில் முதன்முறையாக மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி யிற்கு எதிராக 1990 இல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது அப்போது அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பத்திகளை எழுதியும், செய்திகளை வெளியிட்டும்வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிச்சர்ட் டீ சொய்சா, ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக்கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
அதன்பின்னர் இலங்கை ஊடகவியலாளர் சமூகம் சந்தித்த முக்கிய இழப்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராமின் படுகொலை விளங்கியது. இவர் 2005 ஏப்பிறல் 29ம் நாள் கொல்லப்பட்டிருந்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராகவும், அவர்களது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும், இலங்கை அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்த முன்னெடுப்பு பொய்ப்பிரசாரத்தினை உள்ளூரிலும், சர்வதேச ரீதியாகவும் மிகவும் துணிச்சலோடு எதிர்கொண்டு, உண்மைநிலையை தனது ஊடகத்துறை ஆற்றல்மூலம் தனித்தே நின்று உலகறியச் செய்தவர் தாரகி.
சர்வதேச சமூகத்தின் கவனத்தைப்பெரிதும் ஈர்த்த இவரது படுகொலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தின்போது இடம்பெற்றது. தாரகி சிவராமின் படுகொலை தொடர்பாகவும் இற்றைக்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகிய நிலையில்கூட எவரும் கைதுசெய்யப்படவில்லை.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரச படைகளும், அவர்களோடு இயங்கிவரும் ஒட்டுக்குழுக்களும் ஒருபடி மேலே சென்று ஊடகவியளார்கள் மீதும், ஊடகநிறுவனங்கள் மீதும் வெளிப்படையாகவே தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டுவருகிறார்கள்.
இவற்றில் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கோரக்கொலை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இவரது கொலை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த இதுவரை எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த 2005 டிசம்பர் மாதத்திலிருந்து இன்றுவரை சுமார் 30ற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்படிருக்கிறார்கள், பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள், துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். உலகில் ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு மிகமோசமான இடங்களில் முதன்மையாக விளங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை தற்போது விளங்கிவருகிறது. பல ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக தொடர்ந்தும் நாட்டைவிட்டு வெளியேறிவருகிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில், கடந்த மூன்று தசாப்த காலத்தில் இலங்கையில் பல்வேறு ஆட்சிமாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன, பல்வேறு தலைவர்கள் ஆட்சித்தலைமையைக் கைப்பற்றியிருக்கிறார்கள், ஆனால் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பன மிகவும் நலிந்து செல்லும் வளர்ச்சிப்போக்கினையே காட்டி நிற்கின்றன.
ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் எதிர்காலத்தில் இலங்கையில் ஊடக சுதந்திரம் முகம்கொடுக்கவுள்ள நெருக்கடிகளுக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.
ஆகவே, இலங்கையில் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் ஊடகசுதந்திரம் குறித்து கேள்வியெழுப்பும் சர்வதேச சமூகம் வெறுமனே கண்டன அறிக்கைகளை வெளியிடுவதனை நிறுத்தி, இலங்கை அரசு உணரக்கூடிய செயற்பாட்டு வழிகளில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியதே காலத்தின் கட்டாய தேவை. –--- நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளன்.



0 Responses to இலங்கை அரசும், தொடரும் ஊடகவியலாளர் படுகொலைகளும்