(இந்த கட்டுரை ஊடகவியலாளர் சிவராமின் மறைவையடுத்து, அவருடன் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய ஊடகவியலாளர் தெய்வீகன் 2005 ஆம் ஆண்டு எழுதிய பதிவு)கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி. கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம். ஆம். பத்திரிகையாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம். ஊடகவியலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று கோஷமிட்டனர்.
"நேற்று நிமலராஜன்: இன்று நடேசன்: நாளை யாரோ" என்று பதாகை பிடித்தனர். அதற்கு ஒரு வருடத்துக்குள்ளேயே விடை கிடைத்திருக்கிறது. தமிழ் ஊடகத்துறையில் ஏனைய ஊடகத்துறையினரே பொறாமைப்படுமளவுக்கு பெயர்பெற்ற மூத்த ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது.
சிவராம் அவர்களுடன் ஊடகவியலாளன் என்ற ரீதியில் நெருங்கிப்பழகும் வாய்ப்பு நான் கொழும்பில் வீரகேசரி பத்திரிகையில் பணிபுரியும்போது கிடைத்தது. அவருடன் பழகும் வரைக்கும் சர்வதேச அளவில் புகழ் வாய்ந்த இந்த மனுசன் எங்களோடையெல்லாம் பழகுமோ என்ற சந்தேகம் இருந்து வந்தது. அவருடன் பேசிய பின்னர்தான் புரிந்தது அவரது தோழமை மற்றும் இன்னபிற குணாதிசயங்கள்.
வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகிய அவரது பல கட்டுரைகளை அவர் சொல்ல சொல்ல அவருக்கு முன்னாலிருந்து எழுதும் வாய்ப்பு கிடைத்ததால் அவரிடமிருந்து பல விடயங்களை அக்காலப்பகுதியில் கற்றுக்கொண்டேன் என்றே கூறலாம்.
வார இதழுக்கான கட்டுரை தர வெள்ளிக்கிழமை இரவுகளில் தான் வருவார். சுமார் 9 மணியளவில் என்னை அழைத்து தனக்கு முன்னால் இருத்திவிட்டு சின்னத்துண்டு கடதாசி ஒன்றை எடுத்து அதில் ஏதோ உயில் எழுதுவது போல ஆங்கிலத்தில் கிறுக்குவார். பிறகு ஆரம்பிப்பார். காலுக்கு மேல் கால் போட்டவாறே முகட்டைப்பார்த்துக்கொண்டு சொல்லத்தொடங்கினால் சுமார் ஒரு மணி நேரத்தில் கட்டுரையை சொல்லி முடிப்பார். அந்த ஒரு மணிநேரமும் எனக்கு ஒரு பல்கலைக்கழக விரிவுரையில் இருந்தது போல இருக்கும். அவ்வளவு அற்புதமான விடயங்கள் அந்த ஒரு மணிநேரத்தில் கிடைக்கப்பெறலாம்.
தமிழ்ச் சொற்களை அவர் தனது கட்டுரைக்காக தேர்ந்தெடுக்கும் முறை, அதை எதுகை மோனையுடன் பயன்படுத்தும் முறையும் பயன்படுத்தும் இடமும், ஈழத்தமிழ் வட்டார வழக்குகளை கட்டுரையின் இடையில் செருகும் லாவகம், முக்கியமான விடயங்களை விழித்துக்கூறும் வித்தியாசம், கட்டுரைக்கு விஞ்ஞான, அரசியல், தத்துவ, வரலாற்று, சமய உதாரணங்களை உட்புகுத்தும் திறன், எதிர்வுகூறல்களை முன்மொழியும் நுணுக்கம், நியாயப்பாடுகளை முன்வைக்கும் நுட்பம் என ஒவ்வொரு கட்டுரையிலும் இவற்றை அவதானிக்கலாம.
கட்டுரையின் இடையில் 'இந்த வசனத்தை எப்பிடி முடிக்கலாம்" எண்டு கேட்பார். என்னடா இது பத்திரிகைத்துறையில் நாங்கள் ஏணி வைத்தாலும் எட்டாத இந்தாள் எங்களிட்ட போய் ஆலோசனை கேக்குது எண்டு எனக்குள் வியந்த நாட்கள் பல உண்டு.
கட்டுரையை சொல்லிக்கொண்டிருக்கும் போது இடையில் தொலைபேசியில் கதைப்பார், இணையத்தில் தொடர்பில்லாத விடயங்களையெல்லாம் பார்ப்பார். எல்லாம் நடக்கும் ஆனால் கட்டுரையின் கருப்பொருளிலிருந்து தவறாமல் பக்குவமாக கொண்டுசென்று முடிப்பார்.முடித்துவிட்டு 'கட்டுரை நல்லமெண்டா சீனவெடி. அல்லது சிவராமுக்கு வெடி. என்ன நான் சொல்லிறது சரிதானே? ' எண்டு அடிக்குரலில இருந்து ஒரு கேள்வி கேட்பார். அதைக் கேட்டாலே எங்களுக்கு வெடி விழுந்த மாதிரி இருக்கும். சில நேரங்களில் வீட்ட நிண்டுகொண்டு ரெலிபோனில சொல்ல சொல்ல நான் எழுதின சந்தர்ப்பங்களும் உண்டு.
ஒருமுறை வெள்ளிக்கிழமை கட்டுரை எழுதவந்துவிட்டு 'எனக்கு இண்டைக்கு தண்ணி போடாட்டி எழுதவராது. ஆனா கையில காசில்லை. உம்மட்ட இருந்தா தாரும் அடுத்த கிழமை தாறன்" என்றார். (இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு தகவல் களஞ்சியம் போன்ற இவரிடம் செவ்வி காணவென தவம் கிடக்கும் ஊடகங்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு செவ்வி என்று கொடுத்திருந்தாலே சுளை சுளையாக உழைக்கலாம். ஆனால் பணத்துக்காக ஊடகத்தொழிலையும் எம்முடைய இன விடுதலை பற்றிய கருத்துக்களையும் விற்கக்கூடாது. சில விடயங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்களிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களிடம் கதைத்த பிறகு எமக்கு கூறுவார். சரி விஷயத்துக்கு வருவம்)
நானும் காசு கிடக்கு என்று சொல்ல, சரி நீரும் வாரும். எண்டு கூட்டிக்கொண்டு மருதானை கப்பிற்றல் தியேட்டருக்கு அருகில் உள்ள பாருக்கு போனோம். அங்கு இருக்கைகளை பகிர்ந்த பின்னர், தனது கட்டுரைகள் பற்றிய கதையை தொடக்கினார். நானும் முனிவரிடம் சிஷ்யன் கதைக்கிற மாதிரி அவர் கதைக்கிறத கேட்டுக்கொண்டிருந்தேன்.
'தம்பி பேப்பரில உந்தப்பேர் போட்டு எழுதவேணும் எண்ட மாயையில நிக்கவேண்டாம். பேர் போடுறதில ஒண்டுமில்ல. அதுதான் பத்திரிகைத்துறை எண்டு நிண்டியளோ உருப்படமாட்டியள். படியுங்கோ அதில எவ்வளயோ படிக்க கிடக்கு" எண்டு சொல்ல, நானும் தலையசைத்துவிட்டு 'அண்ண நீங்கள் டெய்லி மிரரில எழுதிற கட்டுரைகளில ஏன் இப்பிடி கடினமான ஆங்கில வார்த்தையளப் பாவிக்கிறியள். எல்லாரும் விளங்கிற மாதிரி எழுதலாம்தானே மற்ற ஆக்கள் அப்பிடித்தானே எழுதினம்?" என்றேன். அதுக்கு ஒருக்கா என்னை ஏளனமா பாத்துவிட்டு உங்கள் எல்லாருக்கும் விளங்கவேணும் எண்டதுக்காக விஞ்ஞானிமார் பொறுத்திருந்திச்சனமெண்டா இண்டைக்கு விஞ்ஞானம் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்காது. விளங்காத ஆக்கள் படிச்சு தெரியட்டும். என்னால அவன் இங்கிலீஷ் படிச்சதா இருக்கட்டும்" என்று அறிவுச்செருக்கோடு கூறினார்.
"சரி நீங்கள் இவ்வளவு தூரம் ஊடகத்துறையில சாதிச்சிட்டியள் இளம் தலைமுறையை உங்கட வழியில வளர்த்துவிடவேணும் எண்ட எண்ணமில்லையோ எண்டு கேட்டதுக்கு, மிச்ச ரம்மை அப்பிடியே கிளாசில ஊத்திப்போட்டு எரிச்சலோடு 'நான் முதல் சொன்ன மாதிரி இப்ப ஊடகத்துறைக்கு வாறவனெல்லாம் பேப்பரில பேர் வரவேணும் எண்ட நோக்கத்தோட வாறாங்கள். இவங்களுக்கு படிப்பிச்சு என்ன புண்ணியம். இருந்தாலும் மட்டக்களப்பில இருந்து ஜெயானந்தமூரத்திய படிப்பிச்சன் (மட்டக்களப்ப மாவட்ட எம்.பியாக பதவிவகித்தவரேதான்). அவன் முன்னுக்கு வந்தான். ஆனா சமூக சேவை அது இது எண்டு அவன் எம்.பியா வர ஆசைப்பட்டு அந்த வழியில போய்ட்டான். அதப்போல யாழ்ப்பாணத்தில தவச்செல்வனை வளத்துக்கொண்டு வாறன். (ஐ.பி.சி செய்தியாளர்). அவன் நல்லா செய்யிறான். என்ர கையால யாழ்ப்பாணத்தில ஒண்டு மட்டக்களப்பில ஒண்டு. காணும்தானே" என்றார். எனக்கு இதுக்கு மிஞ்சி என்னதைக் கதைக்கிறது எண்டு ஆகிப்போச்சு.
என்னுடன் மட்டுமல்ல அலுவலகத்தில் எல்லோரிடமும் மிகவும் தோழமையாக பழகுவார். ரைப்செற்றிங் பிரிவில் உள்ளவர்கள் முதல் சகலரிடமும் தோழமையாக பேசுவார்.பழகுவார். எம்முடன் தமிழ்த் திரைப்படங்கள் பற்றி விமர்சனம் செய்வார்.
"இப்ப வாற பாட்டுகளெல்லாம் பழைய ஆக்களுக்கு பிடிக்குதில்லை. நீங்கள் விதிவிலக்கா இருக்கிறியளே எண்டு கேட்டா 'ஏன் பழைய பாட்டுகள் எல்லாம் பெரிய திறமோ? சட்டி சுட்டதடா, கை விட்டதடா எண்டுபோட்டு அதை தத்துவப்பாட்டு எண்டு சொல்லி கும்பிடுவாங்கள். சட்டி சுட்டா கைய விடத்தானே வேணும். இது பெரிய தத்துவம் எண்டு அவயள் அதைப்பாட்டில எழுதுவினம். அதை நாங்கள் கேக்கவேணும்" எண்டு நகைச்சுவை உணர்வோடு பேசி பலரது மனங்களையும் வென்றவர்.
கொஞ்சம் கதைத்துக்கொண்டு போனால் தொல்காப்பியம், சீவகசிந்தாமணி எண்டெல்லாம் உதாரணம் காட்டி அதில வாற பாட்டுகளையெல்லாம் சொல்லி பொழிப்பு சொல்லுவார். நாங்கள் வாயப்பிளந்து கொண்டு நின்று கேட்போம்.
தமிழ் ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் சமகால தொழில்நுட்ப முன்னேற்றங்களை தமக்குள் உள்வாங்கி நவீன யுகத்துடன் போட்டியிட்டு பணிபுரியும் செயல் வீர்களாக மாறவேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.
எதிரி என்பதற்காக அவனது எல்லா செயல்களையும் எதிர்க்காமலும் நண்பன் என்தற்காக அவனது எல்லா செயல்களையும் ஆதரிக்காமலும் நடுநிலை விமர்சகனாக இவர் விளங்கினார். ஜே.வி.பி. சில ஆரோக்கியமான அரசியல் படிநிலை முன்னேற்றங்களை மேற்கோள்காட்டி அதுபோன்று தமிழ்த் தேசிய முன்னேற்றத்துக்கு நாம் வியூகங்களை வகுக்க வேண்டும் என்று அவர் எழுதிய கருத்துக்களும் எமது தேசியம் அந்நிய சக்திகளால் சிதைக்கப்படாமலிருக்க பாமர மக்கள் முதல் உயர்மட்ட மக்கள் வரை அனைவருக்கும் தமிழர் போராட்டத்தின் நியாயப்பாடுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எடுத்துக்கூற வேண்டுமே தவிர சும்மா பந்தா பரம சிவன்களாக திரிவதில் வேலையில்லை என்ற விமர்சனங்களும் இவை போன்ற பல அவரது கட்டுரைகளும் அவரை நடுநிலை வாசகனாக இனங்காட்டியிருக்கின்றன.
நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர உபாயங்கள், அவை ஈழப் போராட்டத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகின்றன, செலுத்துகின்றன? கடந்த காலங்களில் இப்படியான சம்பவங்கள் என்ன பாடத்தை உணர்த்தியிருக்கின்றன போன்ற விடயங்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து வாசகனை எழுத்துக்களால் கவரும் திறன்கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமபுலமை கொண்டவராக இருந்ததால் இவற்றை தருணத்துக்கேற்ப தக்கமுறையில் முன்வைக்க இவருக்கு முடிந்தது.
இவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் டெய்லி மிரர் பத்திரிகைளில் எழுதிய கட்டுரையிலும் அமெரிக்க அரசு யூ.எஸ்.எய்ட் என்ற உதவி அமைப்பு ஊடாக ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. ஆனால் உதவி என்ற பெயரில் இப்படி அரசசார்பற்ற நிறுவனம் என்ற நாமத்துடன் ஊடுருவும் அமெரிக்கா ஏனைய நாடுகளில் மேற்கொண்ட காரியங்களை அறிந்து ஜே.வி.பி. அதை எதிர்க்கிறது. நாட்டின் ஆளும் இயந்திரத்தினுள்ளேயே ஊடுருவ அமெரிக்கா போடும் இந்தப் போலி முகத்தால் ஹெய்ட்டி போன்ற நாடுகளின் அனுபவம் என்ன என்றும் அதை உணர்ந்துதான் ஜே.வி.பி. காலனித்துவ எதிர்ப்பு நாள் என ஒரு நாளேயே அறிவித்து எதிர்ப்பில் இறங்கியுள்ளது என்றும் ஆதாரபூர்வமாக சிவராம் எழுதியிருந்தார்.
இன்றைய காலகட்டத்தில் தமிழில் இவ்வாறு தரம்மிக்க - நியாயபூர்வமான - ஆய்வுகளை எழுதவல்ல ஒரே ஒரு பத்திரிகையாளர் அவர் மட்டுமே. அவரை இன்று தமிழ்ப்பத்திரிகை உலகம் இழந்துவிட்டது.
அவருடன் பழகிய அவரது எழுத்துக்களை வாசித்த எவருக்கும் இந்தப்பாதிப்பு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்யும். சிலகாலம் பழகிய எனது சிறு பதிவுதான் இது.
ஈழநேசன்.



0 Responses to செய்தியாளன் செய்தியானான்: ஊடகவியலாளர் சிவராம் பற்றிய நினைவுக்குறிப்பு