முல்லைத்தீவின் கொக்கிளாய் ஏரியின் அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தின் ஆயிரம் ஏக்கர் காட்டுப் பகுதி கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அந்தப் பறவைகள் சரணாலயத்தில் பல வகையான கொக்குகளும், வேறு பல வகையான பறவைகளும் வசித்து வருகின்றன. புலம் பெயர்ந்து செல்லும் 176 வகையான பறவைகளும் அங்கு தங்குவதுண்டு.
புள்டோசர்கள் மூலம் அந்தப் பகுதியில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் இருந்த சுமார் இரண்டாயிரம் பறவைக்கூடுகளும் அழிந்துள்ளதாகவும், அழிக்கப்பட்ட காடுகள் தீயிடப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் பின்புலத்துடன் அந்தச் செயல் புரியப்பட்டதாகவும், அதனைத் தடுக்கப் பொலிசாரால் முடியவில்லையென்றும் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறினார்.
விவசாயத்திற்காக அந்தக் காடுகள் அழிக்கப்பட்டாகச் சிலரும், கட்டுமானங்களை உருவாக்குவதற்காக அது அழிக்கப்பட்டதாக வேறு சிலரும் கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பான அந்தப் பகுதியில் இருந்து தமிழர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுச் சிங்களவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பகுதிகளில் புதிய சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் திட்டங்களை ஸ்ரீலங்கா அரசு செயற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் வெளியாகி வரும் நிலையில், கொக்கிளாய் நிலைமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to கொக்கிளாய் காட்டுப் பகுதி அழிக்கப்பட்டுள்ளது