இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகும். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொது மகாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து வருடந்தோறும் மே 3 ஆம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கக் கோரும் பிரகடனத்தை 1993 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியது.1991 ஆம் ஆண்டு ஏப்ரில் 29மே 3 வரை நமீபியாவின் வின்டோக் நகரில் "சுதந்திரமானதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஆபிரிக்கப் பத்திரிகை உலகை மேம்படுத்தல்%27 என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் ஆபிரிக்கப் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்பட்ட சுதந்திரப் பத்திரிகைக் கோட்பாட்டுப் பிரகடனத்தின் வருடாந்த தினமாகவும் மே 3 ஆம் திகதி அமைந்திருக்கிறது. இந்த பிரகடனம் பின்னர் யூனெஸ்கோ பொதுமகா நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வருடந்தோறும் ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் உலக பத்திரிகைச் சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினத்துக்கான தொனிப்பொருள் "தகவல் சுதந்திரம்; தெரிந்துகொள்வதற்கான உரிமை என்பதாகும். தேசங்கள் மத்தியில் செம்மையானதும் சமநிலையானதுமான செய்திகளின் சுதந்திரமான பரிமாற்றத்தையும் உலகின் சகல பாகங்களிலும் இருந்து வருகின்ற தகவல்களின் சரியான தன்மையையும் நேர்மையையும் அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையையும் மேம்படுத்துவதே இத்தொனிப்பொருளின் நோக்கமாகும்.
சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாக அடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப்பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகஞ்செய்தவர்களையும் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளாக்கப்படுபவர்களையும் நினைவுகூருவதற்கான சிறந்த ஒரு தருணமாகவும் இன்றைய தினம் அமைகிறது.
அரசாங்கம் உகந்தமுறையில் செயற்படுவதற்குச் சுதந்திரமானதும் நெறிமுறை வழுவாததுமான பத்திரிகைகள் அத்தியாவசியமானவையாகும். மக்களுக்கு அறிவூட்டுவதில் பத்திரிகைகளின் பங்கு அலட்சியம் செய்யப்பட முடியாததாகும். தற்போதைய நிலைவரங்களையும் நிகழ்வுப் போக்குகளையும் மக்களுக்கு அறியத்தந்து கொண்டிருப்பதில் பத்திரிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கின்றன.
சுதந்திரமான சமுதாயமொன்றை உறுதிப்படுத்துவதற்கும் சமூக அமைதி, சமாதானத்தைப் பேணுவதற்கும் பத்திரிகைச் சுதந்திரம் முக்கியமானதாகும். தேசங்களின் அத்திபாரங்களைப் பலப்படுத்துவதற்கும் உலகின் அடிப்படைப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதன் மூலமாக சவால்களுக்கு முகங்கொடுக்க சாதாரண மக்களைத் தயார்படுத்துவதற்கும் சுதந்திரமான பத்திரிகைகள் உதவுகின்றன.
உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடானு கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள் உண்மை நிலையை உருமாற்றஞ் செய்யக்கூடிய சக்தி கொண்டவையாக விளங்குகின்றன.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது அதற்கான வரையறைகளையும் கொண்ட ஒரு அடிப்படை உரிமையாகும். பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் உண்மைகளை மாத்திரமே பரப்ப வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான பத்திரிகைத் துறையின் பெயரில் துணிச்சலுடன் செயற்பட்டுத் தங்களை அர்ப்பணம் செய்தவர்களின் வரலாற்றின் மூலமாக எம்மால் தெளிவாக உணரக்கூடியது ஒரேயொரு உண்மையேயாகும்.
ஒடுக்குமுறையாளர்கள் முதலில் ஒழித்துக்கட்டுவது உண்மையைக் கூறுகின்ற பத்திரிகைகளையேயாகும். பத்திரிகைச் சுதந்திரமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் உண்மையான ஜனநாயக சமுதாயங்க ளில் வாழுகின்ற ஊடகவியலாளர்களையும் பத்திரிகைச் சுதந்திரம் என்பது இன்னமும் ஒரு கனவாகவே இருக்கின்ற சமுதாயங்களில் வாழுகின்றவர்களையும் இணைக்கின்ற ஒரு உயிர்ப்பாதையாகும்.
அதன் காரணத்தினால்தான் இன்று உலகின் எந்தவொரு மூலையிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியதாக ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக சர்வதேசரீதியில் குரல்கள் பலமாக ஒலித்து ஒருமைப் பாட்டுணர்வு வெளிப்படுத்தப்படுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்.



0 Responses to இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம்!