அடுத்தமாதம் முற்பகுதியில் இந்திய அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளும்பட்சத்தில் இந்திய உயர் மட்டத்தினரிடம் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பிலான விரிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் அதேவேளை தமிழ் மக்களுக்கான நீதியான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் கூட்டமைப்பு உறுதியாக செயற்படும் என்று தெரிவித்த அவர், இதேபோன்று தீர்வு தொடர்பிலான நிலைப்பாடுகள் குறித்து இந்தியாவின் அனைத்து முக்கிய தரப்புக்களுடனும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
அரசாங்கம் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே வன்னி மக்களுக்கான வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவலில் உண்மை இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டபோது வன்னி மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டமை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுட்டமை தொடர்பிலான முழுமையான விபரங்களை கூட்டமைப்பு பேச்சுக்கள் நடைபெற்ற அன்றே புதுடில்லியின் கவனத்திற்கு கொண்டுவந்தது. இதனை அடுத்தே ஆயிரம் கோடி ரூபா செலவில் ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்தியா முடிவெடுத்தது.
வன்னிமக்களுக்கான வீட்டுத் திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் குறித்த விடயங்கள் இலங்கையுடனான பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரலில் இருக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் காலங்களில் தமிழ்மக்களின் உடனடிப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



0 Responses to இந்திய தரப்புடன் தமிழ் கூட்டமைப்பு அடுத்த மாத முற்பகுதியில் பேச்சு!