இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழும் வகையில் அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ராஜபக்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு,
பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், ''இலங்கைத் தமிழர்களில் பலர் இன்னமும் முகாம்களில் இருப்பதையும் அவர்களை மீள குடியமர்த்ததுவது பற்றி தாங்கள் கடந்த 5ஆம் தேதி எழுதிய கடிதத்துக்கு நன்றி.
இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் விவாதித்த போது இந்த பிரச்சனை பற்றி நான் கேள்வி எழுப்பினேன். அவர் என்னிடம் கூறுகையில், "இலங்கை தமிழர்கள் 47 ஆயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருக்கிறார்கள் என்றார். அவர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களது சொந்த ஊர்களில் மீள்குடியமர்த்தி விடுவதாக அவர் என்னிடம் உறுதி அளித்தார்.
இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடு இழந்து தவிப்பவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுப்பது பற்றி நாங்கள் அறிவித்துள்ளோம். தமிழர்கள் சொந்தமாக உழைத்து வாழ இந்தியா தனியாக திட்டங்கள் தீட்டி செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் உள்ள எல்லா சமுதாயத்தினரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று நான் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி கூறி இருக்கிறேன்.
இலங்கையில் உள்ள எல்லா சிறுபான்மை இனத்தவர்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு, அவர்கள் மதிப்புடனும், கண்ணியத்துடனும் வாழும் வகையில் அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு உள்பட அனைத்து நடைமுறை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.



0 Responses to கருணாநிதியின் கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம்